கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் புதிய உத்தரவுகளை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அவரவர் சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது. பள்ளிக்கு உள்ளூர் விடுமுறை விட்டால், சிஇஓ-க்கு முறைப்படி கடிதம் வாயிலாகவும், தொலைபேசியிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

image

மரத்தடியில் வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளிகளில் தயாரிக்கப்படும் சத்துணவு தரமாக, சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? முட்டை நல்ல நிலையில் உள்ளதா? என்பதை ஆசிரியர்கள் தினந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும். பேருந்து மேற்கூரையின் மீது அமர்ந்து மாணவர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் காலை இறைவணக்கக் கூட்டத்தில் உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். பணியாளர்கள் அனைவரும் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே பள்ளிக்கு வர வேண்டும்.

image

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போன்களை பயன்படுத்தக்கூடாது. தங்களின் சொந்த வேலைக்காக மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியை விட்டு வெளியே அனுப்பக்கூடாது. ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லும் முன், Movement Register-ல் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். பள்ளிகள் – பொதுமக்கள் இடையேயான உறவு நல்ல முறையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்று, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-எம்.ரமேஷ்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.