இந்தியாவில் டிரான்ஸ்யூனியன் சிபில் (Transunion CIBIL), ஈகுவிஃபேக்ஸ் (Equifax), எக்ஸ்பீரியன் (Experian), சி.ஆர்.ஐ.எஃப் ஹை மார்க் (CRIF High Mark) என பல கிரெடிட் பீரோக்கள் இருக்கின்றன. 2000ஆம் ஆண்டிலிருந்தே கிரெடிட் ஸ்கோர் விவகாரத்தில் பணியாற்றி வருவதால் டிரான்ஸ்யூனியன் சிபில் இந்தியாவின் முக்கியமான மற்றும் நம்பகமான கிரெடிட் பீரோவாகக் கருதப்படுகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டிலேயே கடன்தாரர்களின் விவரங்களை சேகரிக்கும் பொறுப்பை டிரான்ஸ்யூனின் சிபில் ஆர்பிஐயிடமிருந்து பெற்றுக் கொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ, யூனியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உட்பட பல அரசு வங்கிகள், ஐசிஐசிஐ, ஹெச் எஸ்பிசி போன்ற தனியார் வங்கிகள் என பல முன்னணி வங்கிகள் டிரான்ஸ்யூனியன் சிபிலின் கிரெடிட் ஸ்கோரைத் தான் பயன்படுத்துகின்றன.

image

கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி?

கிரெடிட் ஸ்கோர் ஒரு பார்வை

* 300 முதல் 550 மோசமான சிபில் ஸ்கோர் – பாரம்பரிய மற்றும் புராதான வங்கிகளில் காலெடுத்து வைப்பது சிரமம்.
* 550 முதல் 650 சுமாரான சிபில் ஸ்கோர் – வங்கி உயரதிகாரிகள் உதவினால் அல்லது வலுவான பார்டி கேரண்டி கையெழுத்திட்டால் அல்லது சொத்து பத்துக்களை பணையம் வைத்தால் கடன் கிடைக்கலாம்.
* 650 முதல் 750 நல்ல சிபில் ஸ்கோர் – எளிதில் கடன் கிடைக்கும்.
* 750க்கு மேல் – வங்கிகள், நிதி நிறுவனங்கள், ஃபின்டெக் நிறுவனங்கள் இவர்களைத் தான் மொய்த்தெடுப்பர். பாரம்பரிய வங்கிகளிலேயே இவர்களுக்கு கொஞ்சம் குறைந்த வட்டியில் கடன் கிடைத்தால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. கிரெட் போன்ற ஃபின்டெக் செயலிகளை இவர்களால் மட்டுமே பயன்படுத்த முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

எனவே குறைந்தபட்சம் 650க்கு மேல் கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது அவசியமகிறது. 650 நிச்சயம், 750 லட்சியம் என வைத்துக் கொண்டு, கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துவது எப்படி என்று பார்ப்போம்.

நேரத்துக்கு கடன் செலுத்துங்கள்:

ஒரு கடனை வாங்கி சரியாக திருப்பிச் செலுத்துவதற்கு கிரெடிட் ஸ்கோரில் 35 சதவீதம் வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது. எனவே ஒரு கடனை வாங்கினால் அது எந்த கடனாக இருந்தாலும் சரி, முறையாக நேரத்துக்கு செலுத்திவிடுங்கள். இதில் கிரெடி கார்ட் கடன்களும் அடக்கம். கிரெடிட் கார்ட் டியூ டேட்டுக்கு முன் பணம் செலுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். நீங்கள் தாமதமாகச் செலுத்தும் இ எம் ஐக்கு தனியே செலுத்தும் அபராதக் கட்டணத்தைத் தாண்டி உங்கள் கிரெடிட் ஸ்கோர் நேரடியாக அடிவாங்கும்.

image

எவ்வளவு கடன் வாங்குகிறீர்கள்?:

வெறும் 10,000 ரூபாய், 15,000 ரூபாய் கடன் வாங்கிவிட்டு, திடீரென 1,00,000 ரூபாய் கடன் கேட்டால் வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்கத் தான் செய்யும். குறைந்தபட்சம் 1,00,000 ரூபாய் கடன் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டையாவது பயன்படுத்தி வந்தால் சில லட்சங்களில் கடன் பெற உதவலாம். கடன் தொகைக்கு கிரெடிட் ஸ்கோரில் 30 சதவீதம் வெயிட்டேஜ் கொடுக்கப்படுவதாக கவர் ஃபாக்ஸ் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கடன் வாங்கினால் ஓரளவுக்கு பெரிய தொகையாக வாங்குங்கள். அதற்காக அநாவசியக் கடன்கள் வேண்டாம்.

கிரெடிட் ஹிஸ்டரி

ஒரு கடனை வாங்கி அதை சரியாக திருப்பிச் செலுத்திவிட்டு மற்றொரு கடனை வாங்குவது, நீண்ட காலத்துக்கு திருப்பிச் செலுத்துவது போன்ற விஷயங்களுக்கு கிரெடிட் ஸ்கோரில் 15% வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.  இதை கிரெடிட் ஹிஸ்டரி என்கிறார்கள். அதற்காக ஓராண்டு காலத்தில் முடிக்க வேண்டிய கடனை 3 ஆண்டுகளுக்கு இழுக்காதீர்கள். உங்களது திருப்பிச் செலுத்தும் திறனைப் பொருத்து கடன் காலத்தைத் தேர்வு செய்யுங்கள்.

கடன் அளவு Vs பயன்பாடு:

கிரெடிட் கார்ட் மற்றும் நடப்புக் கணக்கு ஓவர்டிராஃப்ட் கணக்குகளில் கொடுக்கப்பட்டிருக்கும் கடன் அளவில் 40 – 50 சதவீதம் மட்டும் பயன்படுத்திக் கொள்வது கிரெடிட் ஸ்கோர் மேம்பட உதவும். உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் முழு அளவையும் பயன்படுத்திக் கொள்வது அல்லது கடன் அளவை விட கூடுதலாகப் பயன்படுத்துவது எல்லாம், உங்களிடம் பணம் இல்லை, எனவே நீங்கள் திடீரென கூடுதலாக கடன் வாங்குவதாக நிதி நிறுவனங்கள் கருதும். கிரெடிட் ஸ்கோரும் பாதிக்கப்படும். சில கிரெடிட் பீரோக்கள், தனிநபரின் கிரெடிட் ஸ்கோரைக் கணக்கிடும் போது, கடன் பயன்பாட்டுக்கு 10% வெயிட்டேஜ் கொடுப்பதாககவும் கூறப்படுகிறது.

உங்கள் கிரெடிட் கார்டின் கடன் அளவு அதிகரிக்க வங்கி முன் வந்தால், அதை மறுக்காமல் ஓகே சொல்லி அதிகரித்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் செலவை அப்படியே பராமரித்துக் கொள்ளுங்கள். இது கடன் அளவுக்கு, கடன் வாங்குவதற்குமான விகிதத்தை குறைக்கும், கிரெடிட் ஸ்கோரில் ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதிய கடன் + பல வகையான கடன்

முறையாக கடனை வாங்கி திருப்பிச் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவர், புதிதாக கடன் வாங்கும் போதெல்லாம் அவருடைய கிரெடிட் ஸ்கோர் அதிகரிக்கலாம். புதிய கடன்களுக்கு கிரெடிட் ஸ்கொரில் 10% வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

அதே போல பல வகையான கடன்களை வாங்குவதை ஊக்கப்படுத்தும் விதத்தில், வெவ்வேறு கடன் வாங்குவதற்கும் கிரெடிட் ஸ்கோரில் 10% வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது. ஒரு முறை தங்கக் கடன், அடுத்த முறை கிரெடிட் கார்ட் கடன், அடுத்த முறை வீட்டுக் கடன், அதன்பின் வியாபாரத்துக்கு நடப்புக் கணக்கில் உள்ள ஓவர்டிராஃப்ட் கடன் என மாற்றி மாற்றி கடன் வாங்குவது நல்லது. குறைந்தபட்சம் ஒரு முறை சொத்துக்களை பணையம் வைத்த கடன், மறுமுறை சொத்துக்கள் பணையமில்லா கடன் என்றாவது கடைபிடியுங்கள். இது கிரெடிட் மிக்ஸ் மற்றும் கிரெடிட் ஹிஸ்டரியை மேம்படுத்தவும் வலு சேர்க்கவும் உதவும்.

பல கடன்கள்

ஒரே மாதத்தில் கிரெடிட் கார்ட் கடன், தங்கக் கடன், வீட்டுக் கடன் என சகட்டு மேனிக்கு வாங்காதீர்கள். இது உங்களிடம் பணவரத்து இல்லையோ, மனிதர் கடனை நம்பித் தான் பிழைக்கிறாரோ… என்கிற அச்சத்தை நிதி நிறுவனங்கள் மத்தியில் கிளப்பும். அதிக பணம் தேவை என்றால், ஒரே கடனாக அந்த மொத்த தொகையும் வாங்கிக் கொள்ளுங்கள். அதுவும் தங்கக் கடன், நிலபுலன் வீடு போன்ற சொத்துக்களைப் பணையம் வைத்த கடன் என்றால் உங்கள் வட்டி விகிதமும். ஒரே நேரத்தில் பல கடன் உங்கள் கிரெடிட் ஸ்கோரை முறிக்கும்.

image

கடன் மறுப்பு

உங்களுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி கடன் கொடுக்க மறுக்கிறார்கள். வேறு நிதி நிறுவனத்திலும் அதே கதை தொடர்கிறது. அடுத்த வங்கியிலும் அதே கதை என்றால் ஒரு சில மாதங்களுக்காவது கடன் கேட்டு விண்ணப்பிக்காதீர்கள். தொடர்ந்து கடன் மறுக்கப்படுவது தெரிய வந்தால், அதுவும் கிரெடிட் ஸ்கோரை கடுமையாக பாதிக்கும். இது கிரெடிட் கார்ட் விண்ணப்பத்துக்கும் பொருந்தும்.

ஜாயின்ட் கணக்கு:

ஒரு வங்கி அல்லது நிதி நிறுவன கணக்கை கணவன் மனைவியாக சேர்ந்து பயன்படுத்தி வருகிறீர்கள் என்றால், அக்கணக்கு தொடர்பான அனைத்தையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள். ஜாயின்ட் கார்டுகள் மற்றும் கணக்குகளின் பெயரில் வாங்கிய கடனில் யார் சொதப்பினாலும் அது மற்றவரின் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். எனவே கணவன் மனைவி பயன்படுத்தும் ஜாயின்ட் கணக்குகளிலும் கவனம் செலுத்தவும்.

முழு டியூ செலுத்துவது

கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை ஒருவர் மினிமம் டியூ தொகையைச் செலுத்தினால் போதும். அப்படி தொடர்ந்து சில மாதங்கள் செலுத்தினால் கூட அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை சாய்த்துவிடும். எப்போதும் முழு கிரெடிட் கார்ட் டியூவையும் செலுத்திப் பழகுங்கள்.

-கெளதம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.