‘த்ரில்லர் ஸ்பெஷலிஷ்ட்’ அருள்நிதி நடிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்திருக்கும் படம் `தேஜாவு’. தலைப்பிலே கவனம் ஈர்த்த படம், கதையாகவும் அந்த ஈர்ப்பைக் கொடுத்திருக்கிறதா?

ஒரு பெண், முகமூடி அணிந்த சிலரால் கடத்தப்படுகிறாள் என எழுதுகிறார் ஒரு எழுத்தாளர். அதே போல ஒரு பெண் நிஜமாகவே கடத்தப்படுகிறாள். இந்த விஷயம் காவல் துறைக்கு தெரிந்ததும், இதன் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதை ஹீரோ கண்டறிய முயல்கிறார். அவர் கண்டுபிடிக்கிறாரா இல்லையா என்பதுதான் `தேஜாவு’ படத்தின் ஒன்லைன்.

தான் எழுதிய நாவல்களில் உள்ள கதாபாத்திரங்கள், தன்னைக் கொலை செய்வதாக மிரட்டல் விடுவதாக காவல் நிலையத்தில் எழுத்தாளர் சுப்ரமணியம் (அச்யுத் குமார்) புகார் கொடுப்பதில் இருந்து துவங்குகிறது படம். ஆரம்பத்தில் இதைக் கிண்டலாக பார்த்தாலும், தொடர்ந்து அவர் ஒரு பெண் கடத்தப்படுவது பற்றி எழுதுவதும், அது நிஜமாக நடப்பதையும் பார்த்ததும் அதிர்ச்சியாகிறது காவல்துறை. காரணம் கடத்தப்பட்டிருப்பது ஐபிஎஸ் அதிகாரி ஆஷா பிரசாத்தின் (மதுபாலா) மகள். போலீசின் குடும்பத்துக்கே பாதுகாப்பில்லை என வெளியே தெரியக் கூடாது என்பதற்காக, இந்த வழக்கை ரகசியமாக விசாரிக்க வரவழைக்கப்படுகிறார் விக்ரம் குமார் (அருள்நிதி). எழுத்தாளரின் கதையில் வரும் சம்பவங்கள் எப்படி நிஜத்தில் நடக்கிறது? கடத்தப்பட்ட பெண் என்ன ஆனாள்? இதன் பின்னணியில் இருக்கும் மர்மம் என்ன? இது எல்லாம் தான் படத்தின் மீதிக் கதை.

image

பொதுவாக இது போன்ற த்ரில்லர் கதையின் பெரிய பலமே, சுவாரஸ்யமான ஒரு கதைக் களம். அந்த விதத்தில் படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறார் அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். யாரோ ஒரு எழுத்தாளர் எழுதும் கதையில் வரும் சம்பவங்கள், நிஜத்திலும் நடக்கிறது என்ற சுவாரஸ்யமான ஐடியா பார்வையாளர்களை கதையுடன் எளிதாக இணைக்கிறது. கூடுமான வரை படத்தின் முதல் பாதியில் வரும் திருப்பங்களையும் நன்றாக எழுதியிருக்கிறார். 

காவல் அதிகாரி ரோலில் அருள்நிதி, பேஸ் வாய்ஸ், முரட்டு லுக், விரைப்பாக திரிவது என ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸை முடிந்த வரை கொண்டு வந்திருக்கிறார். ஆனால் எல்லா காட்சிகளிலும், ஒரே முகபாவனைகளைக் கொடுப்பது கொஞ்சம் போர். உயர் அதிகாரியாக வரும் மதுபாலா, மகளைக் காணாமல் தவிப்பது, எதையும் கண்டுபிடிக்க முடியாமல் குழம்புவது என நிறைவான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அச்யுதகுமார் நடிப்பும் அவருக்கு மிக சரியாகப் பொருந்தும் எம்.எஸ்.பாஸ்கரின் பின்னணிக் குரலும் சிறப்பு. இவர்கள் தவிர, காளிவெங்கட், ஸ்ம்ருதி வெங்கட், ராகவ் விஜய் ஆகியோரின் நடிப்பும் கச்சிதமாக இருந்தது. பி.ஜி.முத்தையா கேமரா மற்றும் ஜிப்ரானின் படத்திற்கான த்ரில்லர் உணர்வை அதிகப்படுத்திக் கொடுக்கிறது.

image

படத்தின் முதல்பாதி எழுத்தாளர் எழுதுவது நிஜத்திலும் நடக்கும் மர்மத்தை வைத்து பரபரப்பாக நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி அப்படியே வேகம் குறைந்துவிடுகிறது. குறிப்பாக படத்தின் முக்கிய ட்விஸ்ட் உட்பட சில திருப்பங்கள் வந்த பின்பு இவ்வளவு நேரம் வித்யாசமான ஒரு படத்தைப் பார்க்கிறோம் என்று இருந்த உணர்வு, ஒரு சாதாரண படம் தான் என்று மாறுகிறது. ஒரு முக்கியமான கதாபாத்திரத்தின் குடும்பம் பற்றி விசாரிக்காதது, இன்னொரு கதாபாத்திரத்தை பரிசோதனை செய்வது என பல விஷயங்களில் காவல்துறை எப்படி இவ்வளவு மெத்தெனமாக இருக்கும்? அதிலும் ஒரு கதாபாத்திரம் செய்யும் ஆள்மாறாட்டம் எல்லாம்… நம்புற மாதிரியா இருக்கு லெவல்!

இரண்டாம் பாதிக்கான கதையில் இன்னும் என்கேஜிங்கான விஷயங்களை வைத்து, லாஜிக் ஓட்டைகளை அடைத்து விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால், சுவாரஸ்யமான த்ரில்லர் படமாக இருந்திருக்கும் `தேஜாவு’.

– ஜான்சன்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.