`அவ்ளோ ஓவர் ஆக்டிங் பண்ணாத… அவன் உன்னைவிட பயங்கரமா நடிப்பான்’- மாநாடு படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். அதற்கு ஏற்றவர் அவர். ஒரு நிமிடம் அசந்தால், எதிரில் நிற்கும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள பெருநடிகனையும் தூக்கி சாப்பிட்டுவிடும் நடிப்பு அசுரன். அவர்தான் பன்முகக்கலைஞர் எஸ்.ஜே.சூர்யா! இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள். எல்லா நாளும் கொண்டாட வேண்டிய அந்தக் கலைஞனை, இன்று கொண்டாடமல் எப்படி?

நடிகராக வேண்டுமானால், எஸ்.ஜே.சூர்யா 2010-க்குப் பின் பல படங்களில் முத்திரை பதித்திருக்கலாம். ஆனால் இயக்குநராக அவர் 90களிலேயே மாபெரும் வெற்றியை ருசிபார்த்தவர். அஜித், விஜய் போன்ற இன்றைய உச்சநட்சத்திரங்களுக்கு, அவர்களின் தொடக்க கால வெற்றியை பதிவு செய்த பெருமை எஸ்.ஜே.சூர்யாவுடையது. போலவே 90களின் இறுதியில் முன்னணியில் இருந்த ஜோதிகா, சிம்ரன் போன்றோருக்கும் எஸ்.ஜே.சூர்யாதான் திரைத்துறையில் நல்லதொரு அறிமுகத்தையும் ஸ்க்ரீன் ஸ்பேசையும் கொடுத்தார்.

image

தனது ஒரு சமீபத்திய பேட்டியில் நடிகை ஜோதிகா பேசுகையில், “எங்கிட்ட நிறைய பேர் `உங்க படங்கள் எல்லாவற்றிலுமே அதிக ரியாக்‌ஷன்ஸ் கொடுக்குறீங்களே’னு கேட்டிருக்காங்க. உண்மையில, அது குஷி படத்தில் எஸ்.ஜே.சூர்யா கொடுத்த முகம். அதுக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து, அதற்குப் பின் நான் நடித்த படங்கள்ல, நானே கொஞ்சம் கம்மி எக்ஸ்பிரஷன் காண்பிச்சாகூட, `குஷி மாதிரி பண்ணுங்களேன்’னு ரெஃபரன்ஸ் சொல்வாங்க” என்றிருந்தார். ஜோ மட்டுமன்றி, அஜித் – சிம்ரன் போன்றோருக்கும் இவையாவும் நடந்திருக்கிறது.

image

பிற நடிகர்களுக்கு அறிமுகம் கொடுத்ததுபோலவே தானும் முழு நேர நடிகராக தனக்குத்தானே மேடையமைத்த கலைஞன், எஸ்.ஜே.சூர்யா. தானே தன் படத்தில் இயக்கம், திரைக்கதை ஆசிரியப் பணி, ஹீரோ கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது என பல வேலைகள் செய்தாலும்கூட, கதை எழுதுவதில் கொஞ்சம்கூட சமரசம் செய்யாதவர் அவர். அந்த வகையில் 2000-த்தின் தொடக்கத்திலேயே பல புதிய புதிய விஷயங்களை பேசியவர் எஸ்.ஜே.சூர்யா. உதாரணத்துக்கு அன்பே ஆருயிரே படத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் பற்றி பேசியிருப்பார். இன்றும்கூட இந்த டாபிக்கில் பேச நம் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தயங்குவதுண்டு.

image

இதேபோல நியூ படத்தை சயின்ஸ் – ஃபிக்‌ஷன் கதையமைப்பை கொண்டு வடிவமைத்திருப்பார். நியூ படத்தில் இயக்குநர் – திரைக்கதை ஆசிரியர் – நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் புதிய பரிமாணம் எடுத்திருந்தார் மனிதர். இதன்பின் தமிழில் அவர் இயக்கி வெளிவந்த இசை படத்தின் இசையமைப்பாளர் என்ற அந்தஸ்தையும் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா. இப்படி எல்லா பக்கமும் தன்னை செதுக்கிக்கொண்ட அந்த சிற்பிக்குள் ஒரு மகாநடிகன் மட்டும் ஒளிந்துக்கொண்டே இருந்தான்.

இதையும் படிங்க… `ஹீரோ டூ வில்லன்’ பன்முகத்தன்மையில் மிரட்டும் எஸ்.ஜே.சூர்யா – பிறந்தநாள்..!

ஒவ்வொரு படத்தின்மூலமும் தனக்குள் இருந்த நடிகனுக்கு தீனிபோட்டுக்கொண்டே வந்த எஸ்.ஜே.சூர்யா, பிற இயக்குநர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கத் தொடங்கினார். தொடக்கத்தில் `கள்வனின் காதலி’ `வியாபாரி’ `நியூட்டனின் மூன்றாம் விதி’ என நடிச்சா ஹீரோ அல்லது கவுரவ வேடம் என்று மட்டுமே நடித்துவந்தார். இந்நிலையில் 2012-ல் இயக்குநர் ஷங்கரின் `நண்பன்’ திரைப்படத்தில் பஞ்சவந்தன் பாரிவேந்தனாக வந்து கலகலப்பூட்டினார். அதன் பின் அவர் மீண்டும் ஒரு கேப். அப்பப்போ கவுரவ தோற்றம் மட்டும் ஏற்றார்.

image

அப்போதுதான் இறைவி. அப்படம் மிகப்பெரிய கம்பேக்காக அமைந்தது எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பயணத்துக்கு. படத்தின் இறுதியில் `நாமல்லாம் எவ்வளவு கேவலமான பிறவிங்கள்ல…’ என சொல்வதாகட்டும்; `பொறுத்துக்கிறதுக்கும் சலிச்சுக்கிறதுக்கும் நாம என்ன பொம்பளையா? ஆ…..ண் – நெடில்; பெண் – குறில்’ என சொல்வதாகட்டும்! அத்தனை எளிமையாக, அத்தனை வலிகளோடு வேறு யாரும் சொல்வார்களா என நாம் கற்பனை கூட செய்ய மாட்டோம்.

இறைவி கதையம்சத்தின்படி, அருள் (எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரம்) தோற்றுப்போன இயக்குநர். தன் படம் திரையில் தெரியாதா என்ற ஏக்கத்தில், குடித்து குடித்து கெட்டுப்போன ஒரு இயக்குநரை ஏற்று நடித்திருப்பார் எஸ்.ஜே.சூர்யா. அவரை இயக்குநராகவே பார்த்ததாலோ என்னவோ, அக்கதாபாத்திரத்தில் அவர் முழுமையாக ஒன்றிப்போனதுபோல நமக்கு தெரியும்.

image

இதற்குப்பின் அவர் தொட்டதெல்லாம் ஹிட்தான். ஸ்பைடர் படத்தில், மகேஷ் பாபுவை விட எஸ்.ஜே.சூர்யாவின் சிரிப்பை ரசித்து மிரண்ட தமிழ் ரசிகர்கள் ஏராளம். `என்னப்பா இவரு, சிரிக்கிறதே பயமாருக்கே…’ என பயந்தவர்கள் எக்கச்சக்கம். ஒரு மனிதன் பேசவே செய்யாமல், கண்களால் மட்டுமே நம்மை இந்தளவுக்கு மிரட்ட முடியுமா எனும் அளவுக்கு படத்தில் மிரட்டியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா! அதற்குப்பின் வந்த மெர்சல் படமும் அப்படித்தான்.

image

விஜய் – அட்லீ கூட்டணியில் ஹிட் அடித்த அப்படத்தில் விஜய் எந்தளவுக்கு கவனிக்கப்பட்டாரோ, அதே அளவுக்கு எஸ்.ஜே.சூர்யாவும் பாராட்டப்பட்டார். இதற்கடுத்த வெளிவந்தது `மான்ஸ்டர்’. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பார்த்து ரசிக்கும் ஃபீல் குட் படமான அதில், மிக எளி(லி)தாகத்தான் பேசியிருப்பார் எஸ்.ஜே.சூர்யா. சோஃபா எறிந்த காட்சியில் காதலி முன் ஏங்கி நிற்பதாகட்டும், எலிக்குட்டிகளை கொண்டுப்போய் தாயுடன் சேர்ப்பதாகட்டும்… அவருக்கு நிகர் அவர்தான்.

image

இதற்குப்பிறகு 2021-ல் நெஞ்சம் மறப்பதில்லை படமும், மாநாடு படமும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வெளிவந்தது. இதுவரை தன்னுடைய இயல்பான நடிப்பு – கதாபாத்திரக்கு ஏற்றளவு கணிசமான வில்லத்தனம் என்றிருந்த எஸ்.ஜே.சூர்யா, இங்குதான் டயலாக் டெலிவரியின் ட்ரெண்ட்செட்டர் தான் மட்டுமே என்பதை 2010-த்துக்குப் பின் மீண்டும் அழுத்தமாக நிரூபித்தார். சின்ன சின்ன ஒலிகளின் மூலமும் – வசனத்தின் மூலமும் கூட தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முடியுமென்ற அளவுக்கு தனித்துவமிக்க கலைஞனான எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கும், குரலுக்கும் கூடுதல் மகுடம் சேர்த்தது மாநாடு திரைப்படம்.

அன்பே ஆருயிரே படத்தில் வந்த `இருக்கு ஆனா இல்ல’ வசனத்துக்குப் பிறகு, மாநாடு படத்தில் வந்த `வந்தான் சுட்டான் ரிப்பீட்டு’ `தலைவரே… தலைவரே… தலைவரே’ என்பதுதான் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தது. வெறும் வார்த்தையாக பார்க்கும்போதே நம்மை சிரிக்கவும் ஆர்ப்பரிக்கவும் வைக்கும் வசனமிது! (அது இருக்கட்டும்… நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் `டேய் சும்மா இர்றா’ வசனத்தை ரசிக்காதவர்கள் யாரும் இருக்கின்றீர்களா என்ன?)

image

எஸ்.ஜே.சூர்யா நம்பும் விஷயம், ரொம்ப சிம்பிள்… அது `நாம ஒரு இலக்கை நோக்கி போகும்போது, உடனே அந்த இலக்கு வருமென நினைக்கக்கூடாது. வெற்றி தோல்வி பற்றி யோசிக்காமல் உழைச்சுகிட்டே இருக்கணும். நம்மகிட்ட மெழுகுவர்த்தி வெளிச்சம் அளவுக்குத்தான் வாய்ப்புள்ளது என்றாலும்கூட, அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். லைட் வந்தால்தான் முன்னோக்கி செல்வேன்னு இருளிலேயே தேங்கிடக்கூடாது. அன்புடனும் மரியாதையுடனும் எந்தவொரு தொழிலை நாம விடாமுயற்சியோட செஞ்சாலும், ஒருகட்டத்துல அதுவே நம்மை நம்மோட இலக்கை நோக்கி கைப்பிடிச்சு அழைச்சுட்டு போகும்!’ என்பது. அவரே அந்த விஷயத்துக்கு எடுத்துக்காட்டு.

இப்படி வாழ்க்கையிலும் தொழிலிலும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு, எங்கள் சார்பிலும் ஒரு பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவரே! 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.