தலைநகரமான சென்னை ஒரு திருவிழாவுக்கான முன்னேற்பாடுகளுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. நேப்பியர் பாலம் கருப்பு-வெள்ளை கட்டங்களாக வண்ணம் தீட்டப்பட்டு காண்போரை கவர்ந்திழுத்துக் கொண்டிருக்கிறது. மாநகரம் முழுவதும் வேட்டி கட்டிய ‘தம்பி’கள் தமிழ்ப் பண்பாட்டோடு வணக்கம் சொல்லி வரவேற்றுக் கொண்டிருக்கின்றனர். இந்த தடபுடலான ஏற்பாடுகளுக்கெல்லாம் காரணம் வரவிருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரே!

செஸ் ஒலிம்பியாட் என்பது நமக்கு அவ்வளவாக பரிச்சயம் இல்லாத தொடர். ஆனால், இதை விளங்கிக் கொள்வதில் பெரிய சிரமம் எதுவும் இருக்காது. பெயரிலேயே ‘ஒலிம்பியாட்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறதே! செஸ் போட்டிகளுக்கான ஒலிம்பிக்ஸ் தொடர் என இதை புரிந்துக் கொள்ளலாம். இன்று வரை ஒலிம்பிக்ஸில் செஸ் போட்டிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக அதேநேரத்தில் அதே ஒலிம்பிக்ஸிற்கு ஈடாக நடக்கக்கூடியதே இந்த செஸ் ஒலிம்லியாட்.

ஒலிம்பிக்ஸ் தொடரில் உலகம் முழுவதிலிருந்தும் பல நாடுகள் பங்கேற்பதைபோல இந்த ஒலிம்பியாடிலும் பல நாடுகள் பங்கேற்கும். சென்னையில் நடைபெற இருக்கும் 44 வது செஸ் ஒலிம்பியாடில் 187 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். ஒலிம்பியாட் வரலாற்றிலேயே ஒரு தொடரில் இத்தனை அதிக நாடுகள் இதுவரை பங்கேற்றதே இல்லை. இந்த வகையில் ஆரம்பிப்பதற்கு முன்பே சென்னை செஸ் ஒலிம்பியாட் சாதனை பட்டியலில் இணைந்துவிட்டது.

image

1924 முதலே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்து வந்தாலும் 1927 ஆம் ஆண்டு முதலே அங்கீகாரத்துடன் அதிகாரபூர்வமாக இந்தத் தொடர் நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் ஆண்டுக்கு ஒரு முறை என்ற வகையில் நடத்தப்பட்டு வந்தாலும் பிற்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தொடரின் அமைப்பு மாற்றப்பட்டது.

செஸ் ஒலிம்பியாடின் வரலாறு ஏறக்குறைய நூறாண்டுகளை தொடவிருக்கிறது. ஆனால், இப்போதுதான் முதல்முதலாக இந்த தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருக்கிறது. அதுவுமே ஒரு பெரும் போராட்டத்திற்கும் துரிதமான நடவடிக்கைகளுக்கும் பிறகே சாத்தியப்பட்டது. 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடர் முதலில் ரஷ்யாவில் நடப்பதாகவே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், திடீரென ரஷ்யா – உக்ரைன் போர் மூண்ட நிலையில் இந்தத் தொடரை அங்கே திட்டமிட்டப்படி நடத்த முடியாத சூழல் நிலவுகிறது.

கடைசிக்கட்டத்தில் இந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பு வேறு நாட்டிற்கு அளிக்கலாம் என உலக செஸ் கூட்டமைப்பு முடிவு செய்கிறது. இந்த சமயத்தில்தான் இந்தியா களத்தில் இறங்கியது. டெல்லி, குஜராத், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களும் ஒலிம்பியாடை நடத்த ஆர்வம் காட்டினர். உலக செஸ் கூட்டமைப்பு பல கெடுபிடிகளை முன் வைத்தது. போட்டிக்கான அத்தனை திட்டங்களையும் ஏற்பாடுகளையும் செஸ் கூட்டமைப்பின் முன் சமர்;gபிக்க வேண்டும், அதை கூட்டமைப்பின் அதிகாரிகள் சோதித்து உறுதி செய்த பின்னரே தொடரை நடத்துவதற்கான அனுமதியை வழங்குவார்கள். 187 நாடுகளை சேர்ந்த வீரர் வீராங்கனைகளை கொண்டு நடக்கப்போகும் இந்த மாபெரும் தொடருக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு வெறும் 20 நாட்களிலேயே செய்து காட்டியது. உலக செஸ் கூட்டமைப்பின் அனுமதியும் கிடைத்தது. 44 வது செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் களமாக மகாபலிபுரம் உறுதி செய்யப்பட்டது.

image

போட்டி முறை:

செஸ் ஒலிம்பியாட் எந்த முறையில் நடைபெறும் எனும் கேள்வி பலருக்கும் இருக்கும். ரேபிட்ஸ், பிலிட்ஸ், புல்லட் என குறுகிய வடிவிலான செஸ் போட்டிகள் அதிகம் நடந்தாலும் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் க்ளாசிக் வடிவிலேயே நடைபெறுகிறது. அதாவது, வீரர்களுக்கு முதல் 40 நகர்வுகளுக்கு 90 நிமிடமும் அதன்பிறகான எஞ்சிய ஆட்டத்திற்கு 30 நிமிடமும் வழங்கப்படும்.இந்தத் தொடர் ‘Swiss System’ அடிப்படையில் நடைபெறக்கூடியது.

அரையிறுதி-இறுதி என்றெல்லாம் இல்லாமல், அணிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போட்டிகளில் ஆடுவார்கள். இறுதியில் அதிக புள்ளிகளை வென்றிருப்பவர்கள் ஒலிம்பியாடை வென்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் மொத்த 11 ரவுண்ட்டுகளுக்கு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இரண்டு பிரிவுகளாக போட்டி நடைபெறுகிறது.

ஓபன் பிரிவில் வெல்பவர்களுக்கு Hamilton-Rusell பெயரிலான கோப்பை வழங்கப்படும். இவர் ஒரு செஸ் வீரர் மற்றும் பிரிட்டிஷ் செஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர். அவரின் நினைவாக இந்த கோப்பை வழங்கப்படுகிறது. பெண்களுக்கான பிரிவில் வெல்பவர்களுக்கு Vera Menchik பெயரிலான கோப்பை வழங்கப்படுகிறது. உலக சாம்பியனான முதல் பெண் இவர். இரண்டு பிரிவுகளையும் சேர்த்து மொத்தமாக வெல்பவர்களுக்கு Nona Gaprindashvili பெயரிலான கோப்பை வழங்கப்படுகிறது. இவர் செஸ் உலகின் முதல் பெண் க்ராண்ட் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

image

முதல் முதலாக இந்தத் தொடரை நடத்தும் வாய்ப்பு இந்தியாவிற்கு கிடைத்திருப்பதை போலவே முதல் முதலாக இந்தத் தொடரை வெல்லும் வாய்ப்பும் இந்தியாவிற்கு கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இத்தனை ஆண்டுகளில் இந்திய குழுவினர் இந்தத் தொடரில் ஒரே ஒரு மட்டுமே மூன்றாம் இடத்தை பிடித்திருக்கின்றனர். 41 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் அந்த சம்பவம் நடந்திருந்தது.

2020 ஒலிம்பியாடை ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா வென்றிருந்தது. 2021 இல் மூன்றாம் இடம் பிடித்திருந்தது. ஆனால், இது ஆன்லைனில் ரேபிட் முறையில் நடைபெற்றிருந்த தொடர் என்பதால், நேருக்கு நேராக க்ளாசிக் முறையில் நடைபெறும் இந்த ஒலிம்பியாடே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி வெல்வதற்கோ அல்லது முதல் மூன்று இடங்களுக்குள் வருவதற்கோ அதிக வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது.

காரணம், மற்ற நாடுகளை விட இந்தியா அதிக அணிகளை களமிறக்குகிறது. போட்டியை நடத்தும் நாடு கூடுதலாக ஒரு அணியை பங்கேற்க செய்ய முடியும். அதன்படி, ஓபன் பிரிவில் இரண்டு அணிகளையும் பெண்கள் பிரிவில் இரண்டு அணிகளையும் இந்திய அணி களமிறக்குகிறது. இதுபோக, தொடரில் பங்கேற்கும் மொத்த நாடுகளின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருக்கும்பட்சத்தில் போட்டியை நடத்தும் நாடு கூடுதலாக ஒரு அணியை பங்கேற்க செய்யலாம். அதன்படி, ஓபன் பிரிவில் இந்தியா மூன்றாவதாக ஒரு அணியையும் இறக்கியிருக்கிறது. ஆக, இந்தியா சார்பில் மொத்தம் 5 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க இருக்கிறது. இது வெற்றி வாய்ப்பை இன்னும் கூட்டியிருக்கிறது.
 
இந்தியாவின் செஸ் முகமான தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இந்தத் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என முன்பே அறிவித்துவிட்டார். இளைஞர்கள் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருந்தார். வீரராக இல்லாவிடிலும் ஆலோசகராக இந்திய வீரர் வீராங்கனைகளுக்கு மதிப்புமிக்க பயிற்சிகளை வழங்கி வருகிறார். மேலும், ஆறுமுறை உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றிருக்கும் அனுபவமிக்க மூத்த இஸ்ரேலிய வீரர் போரிஸ் கெல்ஃபன்ட்டும் இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 11 செஸ் ஒலிம்பியாட் தொடர்களில் ஆடிய அனுபவமிக்கவர் இவர். பிரபலமான வெளிநாட்டு வீரர் ஒருவர் ஒலிம்பியாடிற்காக இந்திய வீரர்களுக்கு பயிற்சியளிப்பது இதுவே முதல் முறை. மகாபலிபுரத்தில் நடந்த பயிற்சி முகாமில் இந்திய வீரர் வீராங்கனைகள் ஒவ்வொருவரின் பலம் பலவீனங்கள் குறித்து அறிந்து தனித்தனியாக பிரத்யேக பயிற்சிகளை கெல்ஃபன்ட் வழங்கியிருக்கிறார். ‘இந்திய வீரர்கள் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றனர். அசாத்திய திறமைகளை உடைய இத்தனை வீரர்களை இதற்கு முன் பார்த்ததில்லை’ என கெல்ஃபன்ட் இந்திய வீரர் வீராங்கனைகளை புகழ்ந்திருக்கிறார்.

சோவியத் யுனியன்/ ரஷ்யர்களின் இரத்தத்தில் ஊறிப்போனது செஸ். அவர்களின் ஆதிக்கத்தை தவிர்த்துவிட்டால் செஸ் பற்றி பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. பனிப்போர் காலத்தில் சோவியத் யுனியன் ஏந்திய முக்கியமான ஆயுதங்களில் செஸ்ஸூம் ஒன்று. ஆனால், இப்போது உக்ரைனுக்கு எதிராக ஏந்திய ஆயுதங்களால் ரஷ்ய அணி இந்தத் தொடரில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. சோவியத் யுனியன்/ ரஷ்யா மட்டுமே 26 முறை ஒலிம்பியாடை வென்றிருக்கிறது. அப்பேற்பட்ட அணி இங்கே ஆடவில்லை. கூடவே சமீபத்தில் வெகுண்டெழுந்திருக்கும் சீனாவும் பெருந்தொற்று காரணமாக இந்தத் தொடரில் ஆடவில்லை. இந்த இரண்டு நாடுகளின் இல்லாமையுமே இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதை இன்னும் சில நாட்கள் காத்திருந்தே அறிய வேண்டும்.

image

இந்திய சார்பில் பங்கேற்க இருக்கும் அணிகள்:

முதல் அணி:

விதித் குஜ்ராதி, ஹரிகிருஷ்ணா, அர்ஜூன், நாராயணன், சசிகிரண்

இரண்டாம் அணி:

நிஹல் சரின், குகேஷ், ஆதிபன், ப்ரக்யானந்தா, ராணக் சத்வானி

மூன்றாம் அணி:

சூர்ய சேகர், கார்த்திகேயன், சேதுராமன், அபிஜித், அபிமன்யூ

பெண்கள் பிரிவு:

முதல் அணி:

கொனேரு ஹம்பி, ஹரிக்கா, வைஷாலி, தானியா, பக்தி குல்கர்னி

இரண்டாம் அணி:

வந்திகா அகர்வால், சௌம்யா ஸ்வாமிநாதன், மேரி அன் கோம்ஸ், பத்மினி ரௌட், திவ்யா தேஷ்முக்.

-உ.ஸ்ரீராம்

இதையும் படிக்கலாம்: நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் தேசிய சாதனை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.