தனது பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கண்டனம் எழுந்தநிலையில், சமூகவலைத்தளங்கள் மட்டுமின்றி செய்தியாளர்கள் சந்திப்பிலும் பிரிகிடா மன்னிப்பு கோரியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள ‘இரவின் நிழல்’ திரைப்படம், கடந்த 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தில் பிரிகிடா, ரேகா நாயர், வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நடிகர் பார்த்திபன், “இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கே சம்பந்தமில்லாமல் ஒரு புதிய முயற்சி. இந்த மாதிரி ஒரு முயற்சி யாருமே பாத்திருக்கமாட்டாங்க. ஒரு படத்தை எப்படி எடுக்கிறோம் என்பதை படமா போட்டு காண்பித்து, அதுக்கப்புறம் அந்தப் படத்தோட நிறைய க்ளூ போய்விடும் என்பது தெரிஞ்சு, கதை தெரிஞ்சாலும் பரவாயில்லைனு, மக்களுக்கு நான் லீனியர்னா என்ன, சிங்கிள் ஷாட்னா என்னன்னு விளக்கமாக சொல்லிவிட்டு அதுக்கப்புறம் இந்தப் படத்தை காட்டுகிறோம்.

image

ரத்தமும், சதையுமான ஒரு உண்மையான படம். இந்தப் படத்துல ஒரு எமோஷன சொல்றதுக்கு யதார்த்தமா பயன்படுத்தியிருக்கிறேன். முதல்ல இது உலகத்தரமான படமானு பார்க்கணும். உலகத்தரமான படமா இருந்தா அதுல யதார்த்தம் நிஜமா இருக்கணும். இந்தப் படத்துல பார்த்தோம்னா ஒரு கணவன், தனது மனைவி மீது சந்தேகப் பட்டு கொலை செய்துவிட்டு போய்விடுவான். இதனை எதனையும் அறியாத பச்சைக் குழந்தை பாலுக்காக போராடுவதை யதார்த்தமாக காட்டவேண்டும் என்று நினைத்தேன். அதைத்தான் காட்டியுள்ளேன். தாய்மைக்கு கவர்ச்சியில்லை.

அதேபோல் ரொம்ப புனிதமா தனது வாழ்க்கைய ஆரம்பிக்கணும்னு நினைக்கிற பெண்ணை நிர்வாணமா நிக்கவைக்கிறதுலயும் கவர்ச்சியில்லை. நான் நிறைய திரையரங்குகளுக்கு செல்கிறேன். அங்கே இருக்கும் பெண்களிடம் கேட்டபோது, முகம் சுளிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை என்றே கூறுகின்றனர். நிறைய பெண்கள் இருப்பதை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தலைமுறையினர், பழைய தலைமுறையினர் மாதிரி இல்லை. ரொம்பவே மாறியிருக்கிறார்கள். உலகப் படங்களை பார்க்கிறார்கள். 4 பாடல்கள் அதிகம் இருந்தால் வெளியே சென்றுவிடுகிறார்கள். அப்படி என்றால் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய படம் வேறாக இருக்கிறது. அந்தப் படத்தை தான் நான் கொடுக்க வேண்டும் என்று கொடுத்திருக்கிறேன்.

image

இந்தப் படத்திற்கு ஒரு பைசா வியாபாரம் செய்யாமல், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் கொடுக்கிற டிக்கெட் பணம் தான், எனக்கான பணம். கிட்டத்தட்ட இரண்டரை வருட உழைப்பு 32 வருட முயற்சி. இது எல்லாம் ரசிகர்கள் கைக்கு சென்றப் பிறகு, என்னவாக எனக்கு வரப்போகிறது என்ற எனது நேர்மை. இதுதான் இந்தப் படம். கொஞ்சம் சறுக்கினாலும் என்னுடைய பொருளாதாரம் பாதித்துவிடும். அந்த நிலைமையில தான், நான் இந்தப் படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறேன். அப்படிப்பட்ட இந்தப் படத்திற்கு பத்திரிக்கையாளர்கள், ஊடக நண்பர்கள் கொடுத்த ஆதரவு ரொம்பப் பெரிசு. சென்னையில் 4 மணிக்கெல்லாம் பெரிய மாஸ் நடிகர்கள் படத்திற்கு இருப்பதுபோன்ற ஓப்பனிங் இருந்தது. ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு நான்பட்ட கஷ்டங்கள் நிறைய. அந்தப் படம் ஆஸ்கர் வரை சென்று கடைசியில் தேர்வாகாமல் வெளியேறியது.

இந்தப் படத்திற்கு அதைவிட வரவேற்பு கிடைத்துள்ளது. ரஜினி, விஜய், அஜித் போன்றோருக்கு கிடைக்கின்ற வரவேற்பைப் போன்று இருந்ததைக் கண்டு கண்கலங்கிப் போனேன். 1971 முதல் 1989 வரை நடக்கும் கதைதான் இந்தப் படம். அப்போது சேரியில் இருப்பவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதைத் தான் பிரிகிடா யதார்த்தமாக தெரிவித்தார். அதாவது வட்டார மொழியைத் தான் அவர் குறிப்பிட்டார். அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பிரிகிடா உடைந்து போய்விட்டார். கண்கள் எல்லாம் கலங்கிபோய்விட்டது. அவருக்கு இது முதல் படம். எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் பேசிவிட்டார். இப்போது சேரியில் எவ்வளவோ மாறி போய்விட்டது. எல்லோரும் நல்ல நிலைமை வந்துருக்காங்க. பிரிகிடாவும் மன்னிப்பு கேட்டு விட்டார். நானும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இந்தப் படத்தின் வரவேற்புக்கு நன்றி” இவ்வாறு பார்த்திபன் தெரிவித்தார்.

image

பிரிகிடா பேசும்போது, “முதல்ல நான் அப்படி சொன்னதுக்கு எல்லோரிடமும் மிக மிக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் . இது மிகப்பெரிய துவக்கம் எனது வாழ்க்கையில். முழுதாக இரண்டு நாள் கூட சந்தோஷப்பட முடியவில்லை. ரொம்ப சந்தோஷமா இருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சு. முழுவதுமாக நான் உடைந்துபோய்விட்டேன். இரண்டு நாள் கூட என் சந்தோஷம் நீடிக்கவில்லை. ஒவ்வொரு ஊர்லயும் எப்படி, எப்படி மக்கள் வட்டார மொழி பேசுவாங்கனு சொல்ல நினைச்சேன். ஆனால் அது தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். உங்களுடைய ஆதரவு எப்போதும் எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


முன்னதாக சமீபத்தில் பேட்டியளித்தருந்த பிரிகிடா, “ ‘இரவின் நிழல்’ படம் ஒரு தனிமனிதன் பற்றிய கதை. அவனது வாழ்க்கையில் வெறும் கெட்டது மட்டும்தான் நடந்திருக்கிறது. அதை ராவாகத்தான் சொல்ல முடியும். இப்போ ஒரு சேரிக்கு சென்றோம் என்றால், கெட்ட வார்த்தைகளை மட்டும்தான் கேட்க முடியும். மக்களுக்கே தெரியும், அவர்கள் எப்படி பேசுவார்கள் என்று. அதை சினிமாவுக்காக ஏமாற்ற முடியாது” எனக் கூறியிருந்தார். இவரின் இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதங்களில் தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து பிரிகிடாவும், பார்த்திபனும் தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் மன்னிப்பு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.