இந்த உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது; அதில் வாழ்வதற்கான உரிமை பாம்புகளுக்கும் இருக்கிறது.
                 
பாம்புகளை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை 16ஆம் தேதி உலக பாம்புகள் தினமாக கொண்டாடப்படுகிறது. பாம்புகள் ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணிகள் ஆகும். சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிப்பதில் பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கிறது. உலகளவில் 3,000 வகையான பாம்பினங்களும்,  இந்தியாவில் 280 வகையான பாம்புகளும் வாழ்கின்றன.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த ஊர்வன பாதுகாவலர் ஷேக் உசேன் பாம்புகளை பாதுகாக்கும் நோக்கத்தோடு பல்வேறு முறைகளை கையாண்டு வருகிறார். மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டமான தென்காசி மாவட்டத்தில் மனித குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் நூழைந்தால் உடனடியாக பொதுமக்கள் அழைப்பது ‘பாம்புகளின் தோழன்’ ஷேக் உசேனைதான். கடந்த 8 வருடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார் இவர். அதோடு, பாம்புகள் குறித்த விழிப்புணர்வையும் மாணவர்கள் மற்றும் மக்களிடையே ஏற்படுத்தி வருகின்றார்.

image

ஆசியாவில் அரிதாக காணப்படக் கூடிய பாம்பினங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யகூடிய ராஜநாகம் பாம்புகள் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. இதுவரை புளியங்குடி, குற்றாலம், கடையநல்லூர் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட ராஜ நாகங்களை இவர் மீட்டுள்ளார்.

பாம்புகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்துப் பேசிய ஷேக் உசேன், ”இந்திய பெரும் நான்கு நஞ்சுடைய பாம்புகளான கண்ணாடி விரியன், நல்ல பாம்பு, கட்டு விரியன் மற்றும் சுருட்டைவிரியன் ஆகியவை மனிதப் புழக்கம் உள்ள பகுதிகளில் வாழக்கூடியது. இது தவிர நம் பகுதியில் வசிக்கக்கூடிய சாரைப் பாம்பு, மலைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, ஓநாய் பாம்பு போன்றவை நஞ்சற்ற பாம்புகள் ஆகும். பச்சை பாம்பு, பூனை பாம்பு போன்றவை குறைந்த நஞ்சுடைய பாம்புகள் ஆகும்.

image

மக்கள் மத்தியில் பாம்பு பற்றிய தவறான தகவல்கள் அதிகமாக உள்ளது. பிடிபட்ட பாம்பை கொல்லாமல் விட்டால் பலி வாங்கும்; பாம்பு மகுடிக்கு மயங்கும்; சாரைப் பாம்பும் நல்ல பாம்பும் இணை சேரும் போன்ற பாம்பு பற்றிய மூட நம்பிக்கைகளை கைவிட வேண்டும். பாம்புக்கடி என்பது ஒரு விபத்து தானே தவிர, அது விதி அல்ல. இந்தியாவில் வருடத்திற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாம்புக் கடியினால் இறக்கின்றனர்.அதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உடலுறுப்புகளை இழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பாம்புகள் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை. பாம்பு பெரும்பாலும் மனிதர்களை கடிக்காது. மனிதனின் இடையூறு இல்லாமல் எந்த ஒரு பாம்புகளும் மனிதனை தாக்குவதில்லை. அது மனிதர்கள் காலடிச் சத்தத்தை கேட்டால் விலகவே நினைக்கும். நாம் பாம்புகளை தெரியாமல் மிதிக்கும் போதோ அல்லது அடிக்க முற்படும் போது மட்டும் தான் அது மனிதர்களை தாக்குகின்றன.   

image

உலகம் அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. வாழ்வதற்கான உரிமை பாம்புகளுக்கும் இருக்கிறது. பாம்புகளை கண்டால் அதை அடிக்கவோ, கொல்லவோ யாரும் முற்படக்கூடாது. பாம்புகளை கண்ட அடுத்த நிமிடம் வனத்துறையினர் அல்லது பாம்பு மீட்பர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பாம்புகள் விவசாயத்திற்கும் விவசாயிகளுக்கும் உதவுகிறது. எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் பாம்புகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. எலிகள் பெருகினால் நமக்கு உணவுத் தட்டுப்பாடு, எலியால் பரவும் நோய்கள் ஆகியவை பெருகும். எனவே இயற்கை சமநிலையை காக்க பாம்புகளை காப்போம்” என்கிறார் ஷேக் உசேன்.

இதையும் படிக்கலாமே: மீண்டும் தலைதூக்கும் ஒமைக்ரான் பி.ஏ.5 கொரோனா.. பைடனின் எச்சரிக்கை சொல்வது என்ன?

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.