பொதுவாக யானைகள் ஆபத்தான விலங்கு என்று கூறுவது வழக்கம். ஆனால் உண்மையில் அதன் உருவத்தைவிட அதன் அன்பு பெரியது. எந்தவொரு விலங்கையும் துன்புறுத்தாமல் அதன் மீது அன்பு காட்டினால் அது நம் மீது அளவற்ற அன்பைத் திருப்பிக் கொடுக்கும். அப்படி அளவற்ற அன்பைக் கொண்டிருக்கும் யானைகளை சில மனிதர்கள் காயப்படுத்தி, அதன் மேல் தீயைப்பற்ற வைத்து துன்பப்படுத்திய சமீபத்திய நிகழ்வுகள் மனிதர்கள் மீது கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தின. ஆனால் எல்லா மனிதர்களும் அப்படி இல்லை. விலங்குகள் மீது அன்பு கொண்ட பல மனிதர்கள் இங்கு உள்ளனர் என்பதற்குச் சான்றாக உயிருக்குப் போராடிய யானைக்கு CPR சிகிச்சை அளித்து காப்பற்றிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தில் உள்ள நகோன் நயோக் மாகாணத்தில் பெய்து வரும் பருவமலை காரணமாக அப்பகுதிகளில் ஆங்காங்கே மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் அங்குள்ள ‘காவோ யாய் (Khao Yai)’ தேசிய பூங்காவில் உள்ள ஒரு வயது குட்டி யானை ஒன்று எதிர்பாராத விதமாக அருகில் இருந்த வடிகால் துளைக்குள் தவறி விழுந்துவிட்டது. இந்தக் குட்டி யானையைக் காப்பாற்ற அதன் தாய் யானை ஏக்கத்துடன் அதன் அருகிலேயே சுற்றி கொண்டிருக்க, இந்தச் செய்தி அறிந்து குட்டியானையைக் காப்பாற்ற வந்த மீட்புக் குழுவினர் தாய் யானையை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் அது ஒத்துழைக்கவில்லை. இதனால் மீட்புக் குழுவினர் வேறு வழியின்றி மயக்க மருந்து கொடுத்து தாய் யானையை அப்புறப்படுத்தினர். பின்னர் கிரேன் எந்திரம் மூலம் குட்டி யானையை வடிகால் துளையிலிருந்து மீட்டனர்.

ஆனால் மயக்கத்தில் இருந்த தாய் யானை வெகுநேரம் கடந்த பிறகும் மூச்சு பேச்சு இன்றி அப்படியே இருந்துள்ளது. இதை அறிந்த மருத்துவக் குழுவினர் தாய் யானைக்கு சிசிக்சை அளித்தனர். ஆனால் எந்தப் பலனும் இல்லை. எனவே வேறு வழியின்றி அங்கிருந்த மீட்புக் குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் இணைந்து தாய் யானைக்கு CPR சிகிச்சை அளிப்பதற்காக அதன் மீது ஏறி குதித்தனர். நீண்ட நேரமாகப் போராடிய அவர்கள் இறுதியாக யானையைக் காப்பற்றினர். தாய் யானை கண் முழித்ததை அறிந்த குட்டி யானை ஓடிவந்து தாய் யானையைக் கட்டி அணைத்து அன்பைப் பொழிந்தது. பின்னர் இரண்டு யானைகளும் ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்தி கொண்டன. இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் நெகிழ்க்குள்ளாக்கியது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தை படம்பிடித்த மக்கள் இது தொடர்பான வீடியோவைத் தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.