ராமநாதபுரம் மாவட்ட வர்த்தக சங்க ஆண்டு விழாவில் கலந்து கொண்ட வணிகர் சங்க தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசும்போது, “மத்திய அரசு அரிசி, பால், தயிர் உள்ளிட்ட சில உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது இதில் சாமானிய மக்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள். இந்த 5 சதவீத ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 22-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக முழுவதும் உள்ள வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டத்திற்கும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என்றால் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் இன்னும் தீவிரமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு அரசின் திரும்பப் பெறும் அறிவிப்பு வந்தால், போராட்டத்தை வாபஸ் பெறவும் தயாராக உள்ளோம். அதேபோல் நேரடியாக விதிக்கப்படும் செஸ் வரியை தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். குப்பை வரி, தொழில்வரி என வரிகளை பிரித்து போடாமல், ஒரே வரியாக லஞ்சம் லாவண்யம் இன்றி லைசென்ஸ் வழங்க வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமராஜா

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கு அரசு தடைவிதித்துள்ளது. இதை வியாபாரிகள் வரவேற்கிறோம். ஆனால் பல்நோக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் விற்பனை செய்யும் உணவுப்பொருட்கள் பலவற்றை, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளைதான் பயன்படுத்துகின்றனர். அவற்றையும் தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விக்ரமராஜா

தமிழக டிஜிபி அறிவித்துள்ளபடி, மாநிலம் முழுவதும் 24 மணி நேரமும் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பால் சிறு வணிகர்கள் முதல் பெரிய வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களை வெளியிட்டு பெரிய நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பொருட்களை விற்பனை செய்வதாக கூறி மோசடி செய்கின்றனர். இதனை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த மோசடியால் பொதுமக்கள் மட்டும் இன்றி சாமானிய வியாபாரிகளும் பாதிக்கப்படுகின்றனர். அதனால் சாமானிய வியாபாரிக்கும், அதானி, அம்பானிக்கும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர வேண்டும்” என கூறினார்.

அரிசிக்கான ஜிஎஸ்டியை திரும்ப பெற கோரி தமிழ்நாட்டில் உள்ள அரிசி ஆலைகள் இன்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடதக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.