கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 6-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேக விழாவுக்கான சிறப்பு பூஜைகள் கடந்த மாதம் 29-ம் தேதி தொடங்கிவிட்டன. கும்பாபிஷேக தினமான 6-ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சுபமுகூர்த்தத்தில் பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்சபூஜை, பிரதிஷ்டை தக்‌ஷிணை நஸ்காரம், உப தேவன்மாருக்கு பிரதிஷ்டை நடக்கிறது. 5.10 மணி முதல் 5.50 மணி வரை பிரதிஷ்டை, ஜீவகலச அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் 6.50 மணிக்குள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. 22 அடி நீளத்தில் அனந்தசயனக் கோலத்தில் அருள்பாலிக்கும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளின் 22 சிறப்புக்களை நாம் பார்க்கலாம்.

திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்

1) திருவிதாங்கூர் சமஸ்தான அரச குடும்பத்தினரின் குல தெய்வமாக விளங்கிய கோயில்.

2) திருச்சி ஸ்ரீரங்கம், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில்களுக்கு முந்தைய கோயில்.

3) 108 திவ்ய தேசங்களில் 76-வது கோயில்.

4) 13 மலையாள நாட்டுத் திருத்தலங்களில் ஒன்று.

5) ஆதியில் ஆதிதாமபுரம் என்று இந்தத் திருத்தலம் அழைக்கப்பட்டது.

6) சுயம்புவாக தோன்றிய பெருமாளை பரசுராமர் பிரதிஸ்டை செய்துவிட்டு தனது அவதாரத்தை நிறைவு செய்ததாக ஐதீகம்.

7) திருவட்டாறு கோயிலுக்கு பிறகுதான் திரேதாயுகத்தில் ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்தது. கலியுகம் தொடங்கி 950-ம் ஆண்டு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் அமைக்கப்பட்டது.

8) கேரளாவின் வேணாட்டை ஆண்ட மன்னர் கி.பி.776 – ம் ஆண்டு 16,008 சாளக்கிராமங்கள் கொண்டு சர்க்கரை யோகம் (41 மூலிகைகளின் கலவை) மூலம் மூலவர் பிரதிஸ்டை செய்யப்பட்டார்.

கும்பாபிஷேக பூஜைகள்

9) ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது புஜங்க சயனத்தில், யோக முத்திரையில் பள்ளிகொண்டிருக்கிறார் ஆதிகேசவப் பெருமாள்.

10) 22 அடி நீளத்தில் ஆதிகேசவ பெருமாள் படுத்த நிலையில் மேற்கு நோக்கிக் காட்சிதருகிறார்.

11) ஆதிகேசவ பெருமாளின் நாபிக் கமலத்தில் பிரம்மா எழுந்தருளும் காட்சி இல்லை.

12) இடது கையை ஆதிசேஷ சர்ப்பத்தின் மீது தொங்கப்போட்டுள்ளார். வலது கையில் யோக முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார்.

13) இந்தத் திருத்தலத்தை வட்டமாகச் சுற்றி பரளியாறும், கோதையாறும் செல்வதால் திருவட்டாறு என்று இந்தத் தலத்திற்கு பெயர் வந்ததாம்.

14) பரளியாறும், கோதையாறும் திருவட்டாறைச் சுற்றி வந்து மூவாற்று முகத்தில் சங்கமம் ஆகிறது. ஆற்றுத் தண்ணீர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலை அடித்துச் சென்றுவிடக்கூடாது என்று பூமா தேவி இந்த கோயில் நிலத்தை மட்டும் 18 அடி உயரத்திற்கு உயர்த்தினாராம்.

15) நம்மாழ்வாரால் மங்களாசாசனம் பாடப்பட்ட பழைமையான கோயில்.

16) 1106-ம் ஆண்டு இந்தக் கோயிலில் கொடிமரம் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

கும்பாபிஷேக பணிகள்

17) 108 திவ்ய தேசக் கோயில்களில் பள்ளிகொண்ட நிலையில் பெருமாள் மேற்கு நோக்கிக் காட்சிதரும் ஒரே திருத்தலம்.

18) சாகாவரம் பெற்ற கேசனை அடக்கியதால் ஆதிகேசவன் என பெயர்கொண்டார் பெருமாள்.

19) திருவட்டாறு கோயிலின் மேற்கு வாசல், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் கிழக்கு வாசல், குருவாயூர் கிருஷ்ணர் கோயிலின் கிழக்கு வாசல் ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளன.

20) சூரியனுக்கும், சந்திரனுக்கும் காட்சி கொடுத்த பெருமாள் என்பதால் கருவறையில் சூரிய, சந்திரர்கள் இருக்கிறார்கள்.

திருவட்டாறு ஶ்ரீஆதிகேசவ பெருமாள்

21) திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கேசனை அடக்கி உக்கிர சம்ஹார மூர்த்தியாக பஞ்சாயுதங்களுடன் காட்சி தருகிறார். உக்கிர மூர்த்திகள் ஒரே இடத்தில் சேரமாட்டார்கள் என்பதால் இந்தக் கோயில் சுற்றுச் சுவருக்கு வெளியே நரசிம்மர் கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

22) 1,510 சைதன்ய மஹாபிரபு பிரம்ம சம்ஹிதை என்ற நூலின் ஐந்தாம் அத்யாயத்தை இந்தக் கோயிலில் இருந்து பெற்றுச் சென்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.