பல்லாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோயியில் இருக்கும் புதையலை அதன் அமானுஷ்யங்களைக் கடந்து களவாட முடிந்ததா என்பதே `மாயோன்’ படத்தின் கதை.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட மிகவும் பழைமையான கிருஷ்ணர் கோயில் ஒன்று மாயோன் மலை என்னும் ஊரில் இருக்கின்றது. அந்தக் கோயிலில் பல ஆண்டுகளாகத் திறக்கப்படாத ஒரு ரகசிய அறை இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். அதே சமயம், அந்தக் கோயிலில் மாலை ஆறு மணிக்கு மேல் யாரும் இருக்கக்கூடாது என்றும், அதையும் மீறி இருந்தால் பித்துப் பிடித்துவிடும் என்றும் நம்பப்படுகிறது.

மாயோன்

அந்தக் கோயிலில் புதையல் இருப்பதை ஓலைச் சுவடிகள் மூலம் கண்டறிகிறார் தொல்லியல் அதிகாரியான ஹரிஷ் பேரடி. ஹரிஷ் பேரடியின் திட்டத்துக்குத் துணையாக சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் என அதே துறையில் வேலை பார்க்கும் சிலர் உதவுகிறார்கள். இவர்களின் திட்டத்தை சீனியர் அதிகாரியான கே.எஸ்.ரவிக்குமாரும், அந்தக் கோயிலின் நிர்வாகியுமான ராதாரவியும் எப்படி முறியடிக்கிறார்கள் என்பது மாயோனின் மீதிக்கதை. இதற்கிடையே ஆன்மிகத்தையும், அறிவியலையும் ஆங்காங்கே கலந்து கதை சொல்லியிருக்கிறார்கள்.

சிபி சத்யராஜ் சாமர்த்தியமாகத் திருடும் இடங்களில் நம்பும்படி இருக்கிறார். தான்யாவும், பகவதி பெருமாளும் படத்தின் இறுதியில் ஸ்கோர் செய்கிறார்கள். ஆனால், மற்றபடி தான்யாவுக்கு இதில் பெரிய வேலை இல்லை. அதிலும் இறுதியில் தான்யாவுக்கு ஒரு நியாயம், அந்த இன்னொருவருக்கு ஒரு நியாயம் என்பதெல்லாம் என்ன கணக்கு என்றே தெரியவில்லை. கே.எஸ்.ரவிக்குமாருக்கு நல்லதொரு வேடம். ஆனால், அதை வெளிப்படுத்தும் அளவுக்குக் காட்சிகள் இல்லை. ஹரிஷ் பேரடி முதல் காட்சியில் மட்டும் நேரடியாக மிரட்டுகிறார். மற்றபடி எல்லாமே மொபைல் மிரட்டலோடு சரி. ராதாரவியின் வேடத்திலும் கனமில்லை.

மாயோன்

படத்தின் பெரும்பலம் இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தின் எல்லா பாடல்களின் பாடல் ஆசிரியரும் அவரே. ரஞ்சனி, காயத்ரி கூட்டணி பாடிய ‘மாயோனே’ பாடலாகட்டும், காந்தர்வர்கள் கிருஷ்ணனுடன் இசைக் கருவிகளை இயக்கும்போது ஒலிக்கும் பின்னணி இசையாகட்டும் ‘ராஜா ராஜாதான்’ எனச் சொல்ல வைக்கிறார். அப்படியொரு திவ்ய நிலைக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடுகிறது ராஜாவின் இசை.

கதை, திரைக்கதை, தயாரிப்பு எனப் பொறுப்புகளை எடுத்து படத்தில் நடித்தும் இருக்கிறார் அருண்மொழி மாணிக்கம். இண்டியானா ஜோன்ஸ் பாணியிலான கதையில் ஆன்மிகத்தைக் கலந்திருக்கிறார்கள். ஒரே விஷயத்துக்கு ஆன்மிகமாக ஒரு காரணமும், அறிவியல்பூர்வமாக இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. இப்படியான நடுநிலை காட்சிகள் படத்துக்கு வலு சேர்க்கின்றன. பார்வையாளரின் முடிவுகளுக்கே சில விஷயங்களை விட்டுவிட்டு ‘தசாவதாரம்’ பாணியில் கதை நகர்த்தியிருப்பது சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது.

விசுவல் எபெக்ட்ஸிலும், சிஜியிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்றாலும், கோயிலுக்குள் ‘நான் ஈ’யாக வட்டமடித்து எல்லாவற்றையும் படம்பிடிக்கும் அந்தப் பூச்சி காட்சி நல்லதொரு கற்பனை. அதற்கான பின்னணி இசையும் அபாரம். மாயத்தோற்றம் மாதிரியான விஷயங்களில் கூட அறிவியலையும், ஆன்மிகத்தையும் அமானுஷ்யத்தின் வழி சொல்லி ஈர்த்திருக்கிறார்கள். பால சுப்ரமணியத்தின் கலை வடிவமைப்பு பல இடங்களில் சபாஷ் சொல்ல வைக்கிறது. டிரோன் வகை காட்சிகளில் பிரமிப்பையும், க்ளைமாக்ஸ் காட்சிகளில் பதைபதைப்பையும் நமக்கும் கடத்துகிறது ராம் பிரசாத்தின் ஒளிப்பதிவு.

இறுதியில் வரக்கூடிய சிபி சத்யராஜ் ட்விஸ்ட் நம்பும்படி இருந்தாலும், காட்சிகளில் நாடகத்தன்மை கூடிவிடுகிறது. கதையிலும், திரைக்கதையிலும் சுவாரஸ்யம் இருந்தாலும் நடிகர்களிடம் சிறந்த நடிப்பை வாங்குவதில் சொதப்பியிருக்கிறார் இயக்குநர் கிஷோர். அதனாலேயே த்ரில்லராக வந்திருக்கவேண்டிய காட்சிகள், சீரியல் பாணியில் நம்மைக் கடந்து போய்விடுகின்றன.

மாயோன்

மர்மதேசம் மாதிரியான 90ஸ் கிட்ஸ் தொடர் பிடித்தவர்களுக்கு, இந்த சினிமாவும் நிச்சயம் ஈர்க்கும்.

படத்தின் ஆரம்பத்தில் அற்புதங்கள் (மிராக்கிள்) குறித்த ஒரு வாக்கியம் உண்டு. ஒன்று இந்த உலகில் எல்லாமே மிராக்கிள். இல்லை எதுவுமே மிராக்கிள் இல்லை. எல்லாமே நம் பார்வையில்தான் இருக்கிறது. இந்த `மாயோன்’ படமும் ஒரு மிராக்கிள் என நம்மைச் சொல்ல வைக்க, படக்குழு மேக்கிங்கில் இன்னமும் உழைத்திருக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.