நாகாலாந்தில் இருவாட்சி பறவையை பிடித்து அதனை கொடூரமாக தாக்கி கொன்ற மூவரை அம்மாநில வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. அதில் இருவாட்சி பறவையை (Hornbill) பிடித்த சிலர் அதனை கட்டையால் அடித்து அதன் கழுத்து பகுதியை கொடூரமாக தாக்கி கொல்கின்றனர். அந்த வீடியோவில் இந்தக் கொடூர தாக்குதலை பார்க்கும் சிலர் ‘இப்படியெல்லாம் செய்யாதீர்கள் வீடியோ எடுக்காதீர்கள்’ என்று எச்சரிக்கையும் செய்கிறார். ஆனால் அப்பாவி ஜீவன் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலின் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.

image

இது நாகலாந்து மாநில வனத்துறையின் கண்ணில் பட, இருவாட்சி பறவையை தாக்திய கொடூரர்களை தேடும் வேட்டையை தொடங்கினர். முடிவாக இந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இத்தனைக்கும் இருவாட்சி பறவையை பெருமை அறிந்தவர்கள் நாகலாந்து மக்கள். அங்கு ஆண்டுதோறும் ‘ஹோர்ன்பில் திருவிழா’ (Hornbill Festival) நடைபெறும். இந்தத் திருவிழா சுமார் 10 நாட்கள் நீடிக்கும் இந்த மாநிலத்தின் கலாசார, பண்பாட்டுத் தொன்மையையும், வித்தியாசத்தையும் காட்டும் மிகப் பெரிய திருவிழாவாகும். அப்படிப்பட்ட நாகலாந்து மக்களில் சிலர் பறவையை கொடூரமாக கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

image

இருவாட்சியின் பெருமை என்ன?

மழைக்காடுகளில் இருவாட்சி பறவை இல்லையென்றால், மழை இல்லை என எடுத்துக்கொள்ளலாம். மிகவும் உயரமான மரங்களில் வசிக்கும் இருவாட்சி பறவைகள், மரங்கள் அழிக்கப்படுவதின் காரணமாக தன் இனத்தை பெருக்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றன. உதாரணத்துக்கு இருவாட்சி பறவை இனம் அழிந்தால் மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் பத்து வகை மரங்கள் அழிந்து விடும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதற்குக் காரணம் இருவாட்சி உட்கொண்டு வெளியேற்றும் எச்சத்தில் உள்ள தாவர விதைகள் உயிர்ப்புத்தன்மைமிக்கதாக உள்ளதுதான். இப்படித்தான் காட்டில் அந்த மரங்கள் செழித்துப் பெருகுகின்றன. மழைக் காடுகள் இல்லையென்றால் இருவாட்சி பறவைகளும் இல்லை என்பதுதான் நிதர்சனம்.உலகம் முழுவதும் 54 வகை இருவாட்சி பறவைகள் இருக்கின்றன. இந்தியாவில் 9 வகை இருவாட்சிகள் உள்ளன. தென்னிந்தியாவில் 4 வகை இருவாட்சிகள் காணப்படுகின்றன.

image

இருவாட்சி பறவைகள் இணையோடு வாழக்கூடியவை. இனப்பெருக்க காலத்தில் இரண்டு பறவைகளும் சேர்ந்து மிகவும் உயரமான மரங்களில் கூட்டைத் தேர்வு செய்யும். கூடு என்பது மரங்களில் உள்ள பொந்துகள்தான். பெண் பறவை பொந்துக்குள் சென்று அமர்ந்தவுடன் ஆண் பறவை தனது எச்சில் மற்றும் ஆற்று படுகைகளில் இருந்து சேகரிக்கும் ஈரமான மண்ணைக் கொண்டு கூட்டை மூடிவிடும். பெண் பறவைக்கு உணவு கொடுக்க ஒரு சிறிய துவாரத்தை மட்டும் விட்டுவிடும். இந்த இருவாட்சி பறவை கடைசி வரை ஒரே துணையுடன் வாழும் பழக்கம் கொண்டது.

image

பெண் பறவை தனது இறக்கை முழுவதையும் உதிர்த்து ஒரு மெத்தை போன்ற தளத்தை அமைத்து அதன் மேல் ஒன்று முதல் 3 முட்டைகள் வரை இடும். சுமார் 7 வாரம் கழித்து முட்டைகள் பொரிந்துவிடும். குஞ்சுகள் பிறந்தவுடன் பெண் பறவை கூட்டை உடைத்துக் கொண்டு வெளியே வரும். அதுநாள் வரை ஆண் பறவை சிறிய துவாரம் வழியே பெண் பறவைக்குப் பழக்கொட்டைகள், பூச்சிகளை உணவாக கொண்டுவந்து ஊட்டும். குஞ்சுகள் பொரிந்தபின்னர் ஆண் மற்றும் பெண் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவு ஊட்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.