இரண்டு மாதங்களுக்கும் மேலாக பரபரப்பாக நடந்து வந்த ஐ.பி.எல் தொடரின் 15வது சீசன் இன்றோடு முடிவுக்கு வருகிறது. அஹமதாபாத் மைதானத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கச்சேரியோடு பிரமாண்டமாக இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. போட்டிக்கு முன்பாக நடக்கப்போகும் இந்த இசைக்கச்சேரியில் ரஹ்மான் நிச்சயகாக ‘Jai Ho’ பாடலை பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர் பாடுவாராயின் அந்தப் பாட்டு இந்த இறுதிப்போட்டியின் சூழலுக்கும் மிகப்பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில், இன்று இறுதிப்போட்டியில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணியையும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் ‘Slum Dog Millionaire’ படத்தின் ஜமால் மாலிக் கதாபாத்திரத்தில் அப்படியே பொருத்தி பார்த்துக்கொள்ள முடியும்.

ஏ.ஆர்.ரஹ்மான்

மார்ச் 26-ல் இந்த சீசன் தொடங்கப்பட்ட போது இந்த இரண்டு அணிகளும் சிறப்பாகச் செயல்படும் என்றும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும் என்றும் யாருமே எதிர்பார்த்திருக்கவே இல்லை. சுமாரான அணிகளாக புள்ளிப்பட்டியலின் கீழ்ப்பகுதிகளை ஆக்கிரமிப்பதற்கான அணிகளாகவே பார்க்கப்பட்டனர். ஆனால், இன்றைக்கு அந்த அணிகள்தான் சாம்பியன்ஷிப் டைட்டிலை வெல்வதற்கான ஹாட் சீட்டில் அமர்ந்திருக்கின்றன. கிட்டத்தட்ட ஒரு குடிசை வாழ் சிறுவன் மில்லியனரான கதையாகத்தான் இந்த சீசனும் முடியப்போகிறது.

இரண்டு அணியும் ஹாட் சீட்டில் அமர்ந்திருந்தாலும் எதோ ஒரு அணியால் மட்டும்தான் கோப்பையை வெல்ல முடியும். அந்த ஒரு அணி எது? இரண்டு அணிகளின் பலம், பலவீனம் என்னென்ன?

குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் இரண்டு அணிகளும் இந்த சீசனில் இதற்கு முன் இரண்டு முறை மோதியிருக்கின்றனர். அந்த இரண்டு போட்டிகளிலுமே குஜராத் அணிதான் வென்றிருக்கிறது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்திதான் குஜராத் அணி இறுதிப்போட்டிக்கே தகுதிப்பெற்றிருந்தது. அந்த பாசிட்டிவிட்டி குஜராத் அணிக்கு பெரும்பலமாக இருக்கும்.

Jos Buttler

ராஜஸ்தான் அணியை பொறுத்தவரைக்கும் ஜாஸ் பட்லர்தான் அவர்களின் பெரிய நம்பிக்கை. மொத்தமாக 4 சதங்களை இந்த சீசனில் அடித்திருக்கிறார். 824 ரன்களை அடித்து ஆரஞ்சு தொப்பியையும் வைத்திருக்கிறார்.

சீசனின் தொடக்கத்தில் சிறப்பாக ஆடியவர் இடையில் கொஞ்சம் சறுக்கியிருந்தார். ஆனால், பிளேஆஃப்ஸில் மீண்டும் அதிரடியாக வெளுத்தெடுக்கத் தொடங்கிவிட்டார். பிளேஆஃப்ஸில் இரண்டு போட்டிகளில் மட்டும் 195 ரன்களை அடித்திருக்கிறார். பெங்களூருவிற்கு எதிராக ஒரு வெறித்தனமான சதத்தையும் கடைசியாக அடித்திருந்தார். ஆக, ராஜஸ்தான் அணி பட்லரை அதிகம் சார்ந்திருக்கிறது என்பதே நிதர்சனம்.

Samson

அவர் கடந்த இரண்டு போட்டிகளை போன்றே நின்று பெரிய இன்னிங்ஸை ஆடிவிட்டால் அது ராஜஸ்தானின் வெற்றிவாய்ப்பை அதிகப்படுத்திவிடும். குஜராத்துக்கு எதிராக ஆடியிருக்கும் இரண்டு போட்டிகளிலும் பட்லர் அரைசதம் அடித்திருக்கிறார். இந்தப் போட்டியில் பட்லரை குஜராத் பௌலர்கள் எப்படிச் சமாளிக்கப்போகிறார்கள்? அவரை எவ்வளவு குறைவான ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்தே குஜராத்தின் வெற்றி வாய்ப்பு அமையும்.

பட்லர் எதிர்பார்த்த பெர்ஃபார்மென்ஸை கொடுக்கவில்லையெனில் ராஜஸ்தான் என்ன செய்யும் என்பது பெரிய கேள்வி. கேப்டன் சஞ்சு சாம்சன், பட்லருடைய ரோலை எடுத்துக் கொண்டு சமரசமின்றி அதிரடி காட்ட வேண்டும்.

ராஜஸ்தானை போல ஒரே ஒரு வீரரின் மீது அதிகமாக சார்ந்திடாமல் இருப்பது குஜராத்துக்கான பலம். மேலிருந்து கீழ் வரை ஒருவர் அடிக்காவிடில் இன்னொருவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அடித்து மேட்ச் வின்னர்களாக மாறிவிடுகிறார்கள். ஏகப்பட்ட மேட்ச் வின்னர்களைக் கொண்டிருப்பதுதான் அந்த அணியின் வெற்றி ரகசியம்.

Gujarat Titans

குறிப்பிட்ட வீரரை என்றில்லாமால் கில், சாஹா, ஹர்திக், மில்லர், ராகுல் திவேதியா, ரஷீத் கான் என மொத்தமாக அந்த லைன் அப்பை சிதைத்தால் மட்டுமே சௌகரியமாக வெல்ல முடியும்.

முதலில் பேட்டிங் செய்வது குஜராத் அணிக்குக் கொஞ்சம் அசௌகரியமான விஷயமாக இருக்கலாம். அதை ஒரு பலவீனமாக கருதிதான் பெங்களூருவிற்கு எதிரான கடைசி லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா டாஸை வென்று தானே முன் வந்து முதலில் பேட்டிங் ஆடியும் பார்த்தார். ஆனால், அந்தப் போட்டியில் தோல்வியே மிஞ்சியது. ராஜஸ்ரானுக்கு எதிரான முதல் தகுதிச்சுற்றில் டாஸை வென்ற போதும் முதலில் பேட்டிங் செய்ய ஹர்திக் தயாராக இல்லை. சேஸிங்தான் செய்திருந்தார். அதையேத்தான் இந்தப் போட்டியிலும் செய்ய முயல்வார். குஜராத்தை சேஸ் செய்யவிடாமல் தடுக்க வேண்டுமெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸை வென்றே ஆக வேண்டும். ஆனால், சஞ்சு சாம்சனுக்கும் டாஸூக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான்.

DC v RR | Pant and Samson

இந்த சீசனில் இதுவரையிலான 16 போட்டிகளில் மூன்றே மூன்று போட்டிகளில் மட்டும்தான் டாஸை வென்றிருக்கிறார். சாம்சனை பொறுத்தவரை டாஸை வெல்வதே ஒரு பேரதிசயம்தான். அந்த அதிசயம் இந்தப் போட்டியில் நிகழ வேண்டும் என விரும்புவார்.

பௌலிங்கை பொறுத்தவரைக்கும் இரண்டு அணிகளின் ஸ்பின்னர்களும் வீசப்போகும் அந்த 8 ஓவர்கள் முக்கியமானதாக இருக்கும். ராஜஸ்தான் அணியின் அனுபவ ஸ்பின்னர்களான அஷ்வினும் சஹாலுமே கூட குஜராத் அணிக்கு எதிராக திணறியிருக்கின்றனர்.

Ashwin

குஜராத்துக்கு எதிராகக் கடந்த இரண்டு போட்டியிலும் சேர்த்து 16 ஓவர்களை வீசி 137 ரன்களை கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருக்கின்றனர். பெங்களூருவிற்கு எதிரான கடந்த தகுதிச்சுற்று போட்டியிலுமே இவர்கள் இருவரும் 8 ஓவர்களில் 76 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தனர்.

மிடில் ஓவர்களில் குஜராத்தின் ரன்ரேட்டை மந்தமடைய செய்து டெத் ஓவர்களில் அழுத்தத்தை ஏற்ற இவர்கள் இருவரும் சிறப்பாக வீசியே ஆக வேண்டும்.

குஜராத் அணியில் சாய் கிஷோர், ரஷீத் கான் என இரண்டு தரமான ஸ்பின்னர்கள் இருக்கிறார். சாய் கிஷோர் கொஞ்சம் சீரற்றவராக இருந்தாலுமே ஆபத்தானவர்தான். அதேமாதிரி, ரஷீத் கானும் ராஜஸ்தானுக்கு எதிராக கூடுதல் ஆதிக்கத்தோடு வீசி வருகிறார்.

அந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் 4 ஓவர்களில் 15 ரன்களை மட்டுமே கொடுத்திருப்பார். ரஷீத் கான் வீசிய இந்த 4 ஓவர்கள் ராஜஸ்தானின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

Rashid Khan

இந்த இறுதிப்போட்டியில் ரஷீத் கானை அட்டாக் செய்தே ஆக வேண்டும் என ராஜஸ்தான் முடிவெடுத்திருக்கக்கூடும். ஆனால், அந்தப் பணியை செய்யப்போவது யார் என்பது சுவாரஸ்யமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை ராஜஸ்தானின் டெத் ஓவர் பௌலிங் கொஞ்சம் சீரற்றதுதான். பிரசித் கிருஷ்ணா, ஒபெட் மெக்காய் போன்றோர் சிறப்பாக வீசியிருந்தாலும், இந்த சீசனிலேயே பல போட்டிகளில் டெத் ஓவர்களில் சொதப்பவும் செய்திருக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணாவின் கடைசி ஓவரில் அலட்டலே இல்லாமல் மில்லர் அடித்த ஹாட்ரிக் சிக்ஸர்களே இதற்கு சாட்சி. குஜராத்தின் பிக் ஹிட்டர்களைச் சமாளிக்க வேண்டுமெனில் பிரசித் கிருஷ்ணாவும் மெக்காயும் கூடுதல் துல்லியத்தன்மையுடன் நேர்த்தியாக வீசியாக வேண்டும்.

Shami

குஜராத்துக்குமே வேகப்பந்து வீச்சு கொஞ்சம் பிரச்னைதான். ராஜஸ்தானுக்குக் எதிராக கடந்த போட்டியை வென்ற போதும் அந்த அணியின் மூன்று முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களின் எக்கானமி ரேட்டும் ஏறக்குறைய 11க்கும் மேல் இருந்தது.

ராஜஸ்தான் அணி ரஷீத் கானையும் துணிந்து அட்டாக் செய்து வேகப்பந்து வீச்சாளர்களையும் டார்கெட் செய்தால் குஜராத் திணறக்கூடும்.

சென்னை, மும்பை போன்ற பெரிய தலைகள் இல்லாத ஐ.பி.எல் இறுதிப்போட்டியை பார்ப்பதே அரிது. அந்த வகையில் இந்தப் போட்டி கூடுதல் சுவாரஸ்யமானதாகவே தெரிகிறது. ராஜஸ்தான் அணி 2008-ல் முதல் சீசனிலேயே கோப்பையை வென்ற அணி. அதன்பிறகு, இப்போதுதான் மீண்டும் இறுதிப்போட்டிக்கே முன்னேறியிருக்கின்றனர். அந்த முதல் கோப்பையை வென்று கொடுத்த ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தக் கோப்பையை வெல்ல வேண்டுமென ராஜஸ்தான் நினைக்கிறது குஜராத்தும் 2008 ராஜஸ்தானை போன்றுதான் அறிமுக சீசனிலேயே இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறார்கள். ஷேன் வார்னே சாதித்ததைத் தானும் சாதிக்க வேண்டுமென ஹர்திக் பாண்டியா விரும்புகிறார். ஷேன் வார்னேவுக்காகச் சாதிக்க வேண்டுமென சஞ்சு சாம்சன் விரும்புகிறார்.

ஷேன் வார்னே

இரண்டு பேரும் ஹாட் சீட்டில் அமர்ந்திருக்க, `Who wants to be a Champion’ என்ற கேள்வியோடு எதிர்முனையில் கோப்பையோடு ஷேன் வார்னேவின் நினைவுகள் அமர்ந்திருக்கின்றன. நிஜமாகவே இது ஒரு சுவாரஸ்யமான இறுதிப்போட்டிதான்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.