மே 26-ம் தேதி சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை யார் முதலில் வரவேற்பது என்பதில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் இருவருக்குமிடையே கடும் போட்டியே நடந்திருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதியால் அப்போட்டியில் வென்று விமான நிலையத்துக்கே போய் முதல் ஆளாக வரவேற்றார் இ.பி.எஸ். உற்சாகமாக வந்திறங்கிய மோடி, பழனிசாமியுடன் சிரித்துப் பேசினார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்தில் மோடி வந்திறங்கியபோது, வரவேற்கிற வாய்ப்பு ஓ.பி.எஸ்-ஸுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்போது மோடி அவ்வளவு உற்சாகமாக இல்லையாம். இதனால், விழா முடிந்து திரும்பிச் செல்கையில் ‘வழியனுப்பும் வாய்ப்பு எனக்கு வேண்டும்’ என்று கேட்டாராம் ஓ.பி.எஸ். அவரைத் தனியே அனுப்ப மனமின்றி தங்கமணி, வேலுமணியை அழைத்துக்கொண்டு இ.பி.எஸ்-ஸும் ஒன்றாகப் போயிருக்கிறார். இருபது நிமிடங்களுக்கு மேல் இந்தச் சந்திப்பு நீண்டிருக்கிறது. நூல் விலை உயர்வு, சென்னை – சேலம் இடையே மீண்டும் விமான சேவை, காவிரி – கோதாவரி இணைப்பு போன்ற கோரிக்கைகளை பிரதமரிடம் வலியுறுத்தியதாக அவர்கள் வெளியில் சொன்னாலும், உள்ளே பேசப்பட்டதெல்லாம் வேறு விஷயங்களாம். கொடநாடு கொலை வழக்கு, சொத்துக்குவிப்பு வழக்குகளை வைத்து தி.மு.க தங்களுக்குக் கொடுக்கிற நெருக்கடிகள் பற்றி பிரதமரிடம் சொன்னார்களாம் அவர்கள். கூடவே, தி.மு.க அரசின் மீதான ஊழல் புகார்களையும் அடுக்கியிருக்கிறார்கள்!

பிரதமர் மோடியின் விசிட்டின்போது வேறு சில சந்திப்புகளும் நடந்திருக்கின்றன. “திருக்குறளை உலகப் பொதுமறையாக யுனெஸ்கோ அங்கீகரிக்க வேண்டும்’’ என்று நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவரும் ‘குறள்மலை’ அமைப்பினர், பிரதமரைச் சந்தித்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியிருக்கிறார்கள்.

மதுரை ஆதீனம்

மதுரை ஆதீனமும் பிரதமரைச் சந்தித்து, இந்து மடாலயங்களுக்கு தி.மு.க அரசில் தொந்தரவு ஏற்படுவதாகப் புகார் வாசித்திருக்கிறார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட பிரதமர், கிளம்புவதற்கு முன்னதாக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அழைத்து, “இந்தியா முழுவதும் குடும்ப ஆட்சிமுறைக்கு எதிராக மக்கள் திரும்பியிருக்கிறார்கள். தமிழகத்திலும் மாற்றம் தெரிகிறது. இப்படியொரு பிரமாண்டமான வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க-வைத் தாக்குவதில் வேகத்தைக் குறைக்காதீர்கள்” என்று ஊக்குவித்துவிட்டுக் கிளம்பினாராம்!

எவ்வளவு நிர்வாகச் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டாலும், தங்கள் அனுபவ அறிவைப் பயன்படுத்தி சட்ட மற்றும் அலுவலக நடைமுறையில் இருக்கும் ஓட்டைகளைக் கண்டறிந்து, பணம் பண்ணுவதில் கெட்டியாக இருக்கிறார்கள் சில பத்திரப்பதிவு அலுவலர்கள். திருப்போரூர் இணை சார்பதிவாளர் செல்வசுந்தரி, நில அபகரிப்புப் புகாரில் தாம்பரம் போலீஸரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இவர்மீது ஏற்கெனவே பலமுறை லஞ்சப் புகார் வந்திருக்கிறது. ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை, வழக்கே பதிவுசெய்திருக்கிறது. ஆனால் துறைரீதியாகச் சிறு நடவடிக்கைக்கும் ஆளானதில்லையாம் அவர். காரணம், பெண் உயரதிகாரி ஒருவரின் ஆசிதான் என்கிறார்கள். அந்த உயரதிகாரிக்கும் கட்டம் சரியில்லாமல் போய், மாட்டிக்கொண்டார். 32 புகார்களுடன் அவர் சஸ்பெண்ட் ஆன நிலையில், சிஷ்யை செல்வசுந்தரியும் இப்போது கைதாகியிருக்கிறார் என்கிறார்கள் அத்துறை ஊழியர்கள். மேலும் சில வழக்குகளும் அவர்மீது பாயக்கூடும் என்கிறார்கள்!

நாகப்பட்டினத்தை அடுத்த சிக்கல் நகரில், ஒருங்கிணைந்த வேளாண்மைத் திட்ட அறிவியல் கண்காட்சி சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தி.மு.க அமைச்சரும், தற்போதைய ஆதிதிராவிடர் வீட்டு வசதி வாரியத் தலைவருமான மதிவாணனை மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும், மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கௌதமன் முறைப்படி அழைக்கவில்லையாம். விழா மேடையில் அருகில் அமர்ந்திருந்த நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜிடம், “எந்த அரசு நிகழ்ச்சிக்கும் என்னை நீங்கள் அழைப்பதில்லை. மதிப்பதும் இல்லை. நிகழ்ச்சி பற்றி கௌதமனிடம் மட்டும் சொன்னால் போதுமா?” என்று கொந்தளித்திருக்கிறார் மதிவாணன்.

மதிவாணன்

“இது பப்ளிக் நிகழ்ச்சி. பிரச்னை வேண்டாம். இனி இந்தக் குறை ஏற்படாமல் பார்த்துக்கொள்கிறேன்” என்று சமாதானப்படுத்தியிருக்கிறார் கலெக்டர். ஆனாலும், கோபம் தணியாததால் கண்காட்சியைப் புறக்கணித்துவிட்டு வெளியேறினார் மதிவாணன். “கலெக்டரிடம் என்ன வாக்குவாதம்?” என்று நிருபர்கள் கேட்க, “இந்த மாவட்டத்துக்கு அமைச்சர், மாவட்டச் செயலாளர் எல்லாம் கௌதமன்தான். அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள்” என்று பொங்கிவிட்டாராம் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர்!

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரியும் கதிரவன், உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்து ஃபிளெக்ஸ் பேனர் வைத்த விவகாரம் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து கதிரவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

உதயநிதி ஸ்டாலினின் போஸ்டர்

“அவர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் போலீஸார் தரப்பில் சொல்லப்பட்டது. பெரம்பலூரின் முக்கிய அமைச்சர் தலையிட்டு, “ஃபிளெக்ஸ்தானே வெச்சார். அதான் கேஸ் போட்டுட்டீங்கல்ல… துறைரீதியான விசாரணையெல்லாம் வேணாம். தலைவர் காதுக்குப்போனா பிரச்னை ஆகிடும்” எனச் சொல்ல, நடவடிக்கையிலிருந்து பின்வாங்கியிருக்கிறதாம் காவல்துறை!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – வரகனூருக்கு இயக்கப்பட்டுவந்த அரசுப் பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் அந்தப் பேருந்து போக்குவரத்தைத் தொடங்க வேண்டும் என்று ம.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ, அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து, அந்தப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. அந்தப் பேருந்தைத் தன் ஆதரவாளர்கள் புடைசூழக் கொடியசைத்துத் தொடங்கிவைத்திருக்கிறார் துரை.

துரை வைகோ

நிகழ்ச்சியில் கோவில்பட்டி கிளை மேலாளரான ஜெகன்நாதனும் கலந்துகொண்டிருக்கிறார். “துரை வைகோ மக்கள் பிரதிநிதியாகவோ, அரசு அதிகாரியாகவோ இல்லாத நிலையில், அரசுப் பேருந்து சேவையை எப்படிக் கொடியசைத்து தொடக்கிவைக்க முடியும்… இதேபோல எல்லாக் கட்சித் தலைவர்களும் செய்யலாமா?” என்று அ.தி.மு.க-வினர் கேள்வி எழுப்பியதால் சர்ச்சை உருவாகியிருக்கிறது!

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டதிலிருந்து, “தூத்துக்குடியில வலுவாகக் கால் ஊன்றணும்… கட்சியை பலப்படுத்துனாதான் விட்டதைப் பிடிக்க முடியும்” என்று தனது ஆதரவாளர்களிடம் தடதடக்கிறாராம் சசிகலா புஷ்பா.

சசிகலா புஷ்பா

“முந்தைய எம்.பி தேர்தலில் கனிமொழிக்கு எதிராக பா.ஜ.க சார்பில் தமிழிசை செளந்தரராஜன் களமிறங்கித் தோற்றார். 2024 எம்.பி தேர்தலில், இதே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு ஜெயிக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நினைக்கிறார். அதை மனதில் வைத்துதான் விட்டதைப் பிடிக்கணும் என்று அக்கா பரபரக்கிறார்” என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.