தொடர்ந்து அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு 20 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு வேளாண் கட்டமைப்பு மேம்பாட்டு வரியை அரசு நீக்கியுள்ளது.

சமையல் எண்ணெய்

இந்த வரி விலக்கு 2 ஆண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022-23, 2023-24 ஆகிய இரண்டு நிதி ஆண்டுகளில் ஆண்டுக்கு 20 லட்சம் மெட்ரிக் டன் சூரியகாந்தி, சோயா எண்ணெய்யை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம் காரணமாக சமையல் எண்ணெய் வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. காரணம், இந்தியாவின் பெரும்பான்மை சமையல் எண்ணெய் தேவையை ரஷ்யா, உக்ரைன் பூர்த்தி செய்து வந்தது. மேலும் பாமாயில், சூரிய காந்தி எண்ணெய் இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

ரஷ்யா-உக்ரைன் போர் சூழல் காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் திடீரென்று இந்தோனேசியாவும் பாமாயில் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கவே சமையல் எண்ணெய்களில் விலை சுமார் 100 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்தது. ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பாதிக்கப்பட்டு வந்த மக்கள் அடுத்தடுத்த விலை உயர்வால் பாதிப்புக்குள்ளாகினர்.

கிருஷ்ண மூர்த்தி

இந்நிலையில் சமையல் எண்ணெய்க்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்பட்டிருப்பதால் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து மதுரை எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சங்க முன்னாள் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் பேசினோம். “விலைவாசி உயர்ந்துகொண்டே இருக்கும் சமயத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கான வரி ரத்து செய்யப்பட்டிருக்கும் செய்தி வந்ததும் எல்லோருமே விலை குறையப்போகிறது என்று கூறி வருகிறார்கள். ஊடகங்களும் அவ்வாறே செய்திகளை வெளியிடுகின்றன.

ஆனால், இந்த அறிவிப்பின் தாக்கம் நடைமுறையில் எப்படி பிரதிபலிக்கும் என்பதே ஜூன் மாதத்தில்தான் தெரிய வரும். வெளிநாடுகளிலிருந்து சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்த அறிவிப்பானது இனி இறக்குமதி செய்யப்படுவதற்கான எண்ணெய்களுக்குப் பொருந்தும் என்றும், ஏற்கெனவே இறக்குமதி செய்த, தற்போது சுத்திகரிப்பு மற்றும் விற்பனையில் உள்ள எண்ணெய்களுக்குப் பொருந்தாது என்றும் சொல்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. எனவே, விலை குறையுமா என்பது தெரிவதற்கு குறைந்தபட்சம் ஜூன் மாதம் வரை பொறுமையாக இருக்க வேண்டும்.

சமையல் எண்ணெய்

அதேசமயம் இந்தியா சமையல் எண்ணெய் விஷயத்தில் கடந்த 25 வருடங்களாகப் பெரும் மாற்றத்தைக் கண்டுள்ளது. சொல்லப்போனால் உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை ஊக்குவித்து அதன் பயன்பாட்டை அதிகரிக்காமல் விட்டுவிட்டோம். இன்று முழுக்க முழுக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் ஆளாக இதுவே காரணம்.

இன்றும் மக்கள் என்னதான் சூரியகாந்தி, பாமாயில், சோயா எண்ணெய்களின் விலை ஏற்றம் கண்டாலுமே கடலை எண்ணெய், நல்லெண்ணய்க்கு மாறுவதற்கு தயாராக இல்லை. எல்லோரும் இறக்குமதி எண்ணெய்களுக்குப் பழகிவிட்டார்கள். ஆனால், உள்நாட்டு எண்ணெய் வகைகள் ஆரோக்கிய மானதாகவும், விலையும் ஒப்பீட்டளவில் உயர்வாக இல்லாமலும்தான் இருக்கிறது. விலைவாசி உயர்வை சமாளிக்க உள்நாட்டு எண்ணெய்களைப் பயன்படுத்துவது பற்றி மக்கள் யோசிக்கலாம்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.