சேத்தனா ராஜ் என்ற கன்னட சீரியல் நடிகை, உடல் எடையைக் குறைப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டதால் கடந்த வாரம் மரணம் அடைந்தார் என்ற தகவல் பெரிய அதிர்ச்சியைக் கிளப்பியது. பிளாஸ்டிக் சர்ஜரி என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா? யாரெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளலாம்? என்பது போன்ற தகவல்களை வழங்குகிறார் சென்னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் மற்றும் காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் சசிகுமார் முத்து…

பிளாஸ்டிக் சர்ஜரி (மாதிரி படம்)

பிளாஸ்டிக் சர்ஜரியின் வகைகள் :

“பிளாஸ்டிக் சர்ஜரி என்பது அழகுக்காகச் செய்யப்படுவது என்ற தவறான கருத்து பலருக்கும் இருக்கிறது. உண்மையில், இந்தச் சிகிச்சை பல்வேறு காரணங்களுக்காகச் செய்யப்படுகிறது. தீக்காயம், விபத்தால் உறுப்புகள் பாதிக்கப்படுதல் போன்றவற்றுக்குள்ளாகி, சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல், எத்தனையோ பேர் தற்கொலைக்குக்கூட முயல்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி என்பது மறுபிறவி போன்றது. பிளாஸ்டிக் சர்ஜரி என்றாலே அழகு சார்ந்தது என்ற பார்வையை உடைத்து, மக்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம்.

பிளாஸ்டிக் சர்ஜரியை மறுசீரமைப்பு சிகிச்சை, ஒப்பனை அறுவை சிகிச்சை, கை அறுவை சிகிச்சை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம். ‘மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை’ என்பது பிறவியிலேயே இருக்கும் குறைபாடுகளான அண்ணப் பிளவுகளை சரிசெய்தல், காது மடல்களை சரிசெய்தல் போன்றவற்றுக்காக மேற்கொள்ளப்படுவது.  

‘கை அறுவை சிகிச்சை’ என்பது வெட்டுக்காயம், கை விரல்கள் துண்டாகிவிடுதல் போன்ற சூழலில் வெட்டப்பட்ட இடத்தைச் சேர்த்துத் தைத்து, மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவும். மூன்றாவதாக ‘ஒப்பனை அறுவை சிகிச்சை’. ஒருவர் தன் உடல் அமைப்பை தனக்கு பிடித்தாற்போல்  மாற்றிக்கொள்ளச் செய்துகொள்வது. இதில் மார்பக சீரமைப்பு, உடல் எடைக்குறைப்பு, உடலில் தேவையற்ற இடங்களில் இருக்கும் சதைகளை நீக்குதல் என அழகு சார்ந்த பல வகைகள் இருக்கின்றன.

அழகு!

சிகிச்சையின் அவசியம்

விபத்துகளால் ஏற்பட்ட காயங்களுக்கு, அவர்களின் நலன் கருதி உடனடி சிகிச்சை தேவைப்படும். மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் சம்பந்தபட்ட நபர் சிகிச்சைக்கான முடிவை எடுப்பார். பிறவிலேயே அண்ணப்பிளவு போன்ற குறைபாடு இருந்தால் அந்தக் குழந்தைகளுக்கு பால் குடிப்பதில் தொடங்கி உடல் நலன் சார்ந்த பல சிக்கல்கள் இருக்கும். எனவே அவற்றுக்கான சிகிச்சைகளையும் உடனே பரிந்துரை செய்வோம். தீக்காயம், ஆசிட் வீச்சு போன்றவற்றுக்கு மெதுவாகக்கூட சிகிச்சைகள் செய்து கொள்ளலாம்.

இப்போது பெரும்பாலும் அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மக்கள் விருப்பம் காட்டுகிறார்கள். இது முழுவதும் ஆபத்தானது அல்ல. மற்ற சிகிச்சை முறையில் இருப்பது போலவே இதிலும், சில ஆபத்துகள் நிகழலாம்.

அழகு

அழகு சார்ந்த அறுவை சிகிச்சைக்களுக்காக வருபவர்களிடம், முதலில் அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவார்கள். இது உடனடியாகச் செய்துகொள்ள வேண்டிய சிகிச்சை அல்ல. எனவே அவசரம் காட்டக்கூடாது. வெவ்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனைகள் கேட்கலாம். அதன்பின் பொறுமையாக முடிவெடுக்க வேண்டும்.

அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியது அவசியம்தானா என்பதைத் தெளிவாக முடிவெடுத்த பின்னர், எந்த மருத்துவமனையில் கட்டணம் குறைவு என்பதைப் பார்க்காமல், எந்த மருத்துவரிடம் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகிறீர்கள்… அவருக்கு முன் அனுபவங்கள் உண்டா… எந்த மருத்துவமனையில் வைத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது… சிகிச்சையின்போது ஏதேனும் பாதிப்பு என்றால் அவசர சிகிச்சைக்கு போதுமான வசதிகள் அந்த மருத்துவமனையில் இருக்கின்றனவா என்பதை ஒன்றுக்கு பல முறை கேட்டு விசாரித்துக்கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி (மாதிரி படம்)

உங்களுக்கு இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த மற்ற விஷயங்களையும் மருத்துவரிடம் வெளிப்படையாகப் பேசி விடுவது நல்லது. அறுவை சிகிச்சை முடித்து வந்த பிறகும்கூட, சிலருக்கு ஒவ்வாமைகள் ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுகுவது நல்லது. இவற்றில் கவனமாக இருந்தால் ஆபத்துகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் டாக்டர் சசிகுமார் முத்து.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.