ஐ.பி.எல் 15வது சீசன் இப்போது நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த 15 சீசன்களில் நிகழ்த்தப்பட்ட தரமான கம்பேக்குகள் எவை என்றால், முதலில் நம் மனம், சென்னை அணியையே நினைவுப்படுத்தும். 2 வருட தடைக்குப் பிறகு 2018-ல் சென்னை கொடுத்த கம்பேக்கும் 2020 சீசன் படுதோல்விக்குப் பிறகு 2021-ல் சென்னை கொடுத்த கம்பேக்கும்தான் நம் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றன.

IPL 2009 Final | DCvRCB

ஆனால், இதற்கெல்லாம் முன்பாகவே ஒரு தரமான கம்பேக் ஐ.பி.எல்-லில் நிகழ்ந்திருக்கிறது. ஒன்று எனக் கூட சொல்ல முடியாது. ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட இரண்டு கம்பேக்குகள் எனச் சொன்னால் சரியாக இருக்கும்.

2008, ஐ.பி.எல்-இன் அறிமுக சீசன் நடந்த ஆண்டு. அந்த சீசனில் ராஜஸ்தான் அணி சாம்பியன் ஆகியிருந்தது. சென்னை அணி ரன்னர் அப். அந்தத் தொடக்க சீசனிலேயே மண்ணைக் கவ்விய அணிகள் டெக்கான் சார்ஜர்ஸூம் பெங்களூரும். டெக்கான் சார்ஜர்ஸ் ஆடிய 14 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தது. பெங்களூரு ஆடிய 14 போட்டிகளில் 4 போட்டிகளை மட்டுமே வென்றிருந்தது. டெக்கான் சார்ஜர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடிக்க, கடைசிக்கு முந்தைய இடத்தை பெங்களூரு பிடித்திருந்தது. இரண்டு அணிகளுக்குமே இந்த சீசன் மரண அடியாக அமைந்திருந்தது. முதல் சீசன் ஐ.பி.எல் மெகா ஹிட் அடிக்க, அடுத்த சீசனும் எந்தப் பிரச்னையும் இன்றி துவங்கியது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த சீசன் முழுவதுமாக தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது.

இந்த சீசனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணிகள் எவை தெரியுமா? டெக்கான் சார்ஜர்ஸூம் பெங்களூருவும்தான். ரசிகர்களுக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக இந்த சீசன் அமைந்திருந்தது. முதல் சீசனில் இந்தியாவில் நொடிந்து போய் துவண்டு விழுந்த அணிகள், தென்னாப்பிரிக்காவில் அனைவருக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யமளிக்கும் வகையில் மாபெரும் எழுச்சி அடைந்தனர்.

ஆடம் கில்கிறிஸ்ட்

2008 சீசனில் மொத்தமே 2 போட்டிகளை மட்டுமே வென்றிருந்த டெக்கான் சார்ஜர்ஸ் அணி, 2009-ல் கில்கிறிஸ்ட் தலைமையில் களமிறங்கி, ஆடிய முதல் 4 போட்டிகளையுமே வென்று தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தியது. கில்கிறிஸ்ட் தனது அதிரடி பேட்டிங்கால் அதகளப்படுத்தினார். கூடவே கிப்ஸ், ரோஹித் சர்மா, பிராவோ, சைமண்ட்ஸ் போன்றோர் தோளோடு தோளாக நின்றனர். ஆர்.பி.சிங்கும் ப்ரக்யான் ஓஜாவும் பௌலிங்கில் கட்டுக்கோப்பாக வீசி எதிரணிகளைத் திணறடித்தனர்.

நல்ல தொடக்கத்திற்குப் பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டாலும் மீண்டெழுந்து மறுபடியும் வெல்லத் தொடங்கியது. அரையிறுதியையும் உறுதி செய்தது.

கில்கிறிஸ்ட் ஒருபக்கம் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவாறு பொறிந்துத் தள்ளினார். ரோஹித் சர்மா பேட்டால் மட்டுமல்ல பந்தாலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தினார். 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒரு ஹாட்ரிக்கும் எடுத்திருந்தார். கிப்ஸ், சைமண்ட்ஸ், பிராவோ ஆகியோரும் கணிசமான பங்களிப்பை கொடுத்தனர். ஆர்.பி.சிங்கும் ஓஜாவும் பர்ப்பிள் கேப்பிற்கான ரேஸில் முன்னணியில் இருந்தனர்.

IPL 2009 Final | DC v RCB

டெக்கான் சார்ஜர்ஸ் அளவுக்குத் தொடக்கத்திலேயே பெங்களூரு ஆதிக்கம் செலுத்தவில்லை. முதல் 5 போட்டிகளில் பெங்களூரு 4 போட்டிகளில் தோற்றிருந்தது. ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு புதிய கேப்டனாகியிருந்த பீட்டர்சன் இங்கிலாந்து ஆட செல்வதற்காக இடையிலேயே கிளம்பிவிட்டார். அணி தட்டுத்தடுமாறி நின்றது. இந்த சமயத்தில் கேப்டன்சி அனில் கும்ப்ளேவுக்குக் கொடுக்கப்பட்டது.

ஏற்கெனவே பந்தில் மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்த அனில் கும்ப்ளே கேப்டன்சியிலும் தலைகீழ் மாற்றங்களைக் கொண்டு வந்தார். பெங்களூரு தொடர்ந்து வெல்லத் தொடங்கியது.

பெங்களூருவின் ஸ்டார் என்றால் அது அனில் கும்ப்ளேதான். தொடக்கத்திலிருந்தே கலக்கி வந்தார். முதல் போட்டியிலேயே 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பார். கும்ப்ளேவின் மாயாஜால பௌலிங் அந்த அணிக்கு பெரும்பலமாக இருந்தது. கூடவே டிராவிட், ராஸ் டெய்லர், காலிஸ், பயமறியா இளம் கோலி, மனீஷ் பாண்டே ஆகியோர் இணைய பெங்களூரு எதிர்பாராதவற்றை நிகழ்த்தத் தொடங்கியது. அரையிறுதிக்கும் முன்னேறியது.

IPL 2009 Final | DCvRCB

அரையிறுதியில் டெக்கான் சார்ஜர்ஸ் டெல்லியை எதிர்கொண்டது. கில்கிறிஸ்ட் 35 பந்துகளில் 85 ரன்களை ஒற்றை ஆளாக அடித்து, மிக சுலபமாக டெக்கானை வெல்ல வைத்து இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார். இன்னொரு அரையிறுதியில் சென்னையை பெங்களூரு எதிர்கொண்டிருக்கும். பெங்களூருவிற்கு டார்கெட் 147 தான். டிராவிட்டும் மனீஷ் பாண்டேவும் சிறப்பாகக் கூட்டணி அமைத்து வென்று பெங்களூருவை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

ஐ.பி.எல் 2 வது சீசனின் இறுதிப்போட்டி. ஒரே தருணத்தில் நிகழ்த்தப்பட்ட இரண்டு கம்பேக்குகள் இதுதான். கடந்த சீசனில் கடைசி இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் இந்த சீசனில் மற்ற எல்லா அணிகளையும் ஓரங்கட்டி யாரும் எதிர்பாராத வகையில் ஒரு விந்தையை நிகழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டன.

அரையிறுதிக்கு முன்பான கடைசி லீக் போட்டியில் இந்த இரண்டு அணிகளும்தான் மோதியிருந்தன. அந்தப் போட்டியில்தான் மனீஷ் பாண்டே முதல் இந்தியராக ஐ.பி.எல்-இல் சாதனை சதத்தை பதிவு செய்திருப்பார். பெங்களூரும் வென்றிருக்கும். இறுதிப்போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் முதலில் பேட்டிங் செய்து முடித்த போது இந்த லீக் போட்டியின் ரீவைண்ட்டாகத்தான் இந்தப் போட்டியும் இருக்குமோ என்று தோன்றியது. ஏனெனில், பெங்களூரு அவ்வளவு வெறித்தனமாக பந்துவீசியிருந்தது.

IPL 2009 Final | DCvRCB

கும்ப்ளே 4 ஓவர்களில் 16 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். கில்கிறிஸ்ட்டே டக் அவுட் ஆகியிருந்தார்.

கிப்ஸ், சைமண்ட்ஸ் போன்றோரின் பொறுப்பான ஆட்டத்தால் கொஞ்சம் கௌரவமாக 143 ரன்களை டெக்கான் சார்ஜர்ஸ் எடுத்திருந்தது. மனீஷ் பாண்டே இருந்த ஃபார்முக்கு இந்த சேஸெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்றே தோன்றியது. ஆனால், நடந்தது வேறு. பெங்களூருவால் 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. மனீஷ் பாண்டே நான்கே ரன்களில் ஓஜாவிடம் அவுட் ஆகியிருந்தார். முக்கியமான கட்டத்தில் சைமண்ட்ஸ் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ராஸ் டெய்லரையும், கோலியையும் வீழ்த்தினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவை என்ற சூழலில் உத்தப்பா க்ரீஸில் நின்ற போதும் ஆர்.பி.சிங் வெறித்தனமாக அந்த ஓவரை வீசி, 8 ரன்களை மட்டுமே கொடுத்திருப்பார். 6 ரன்கள் வித்தியாசத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது. மீண்டும் ஒரு ஆஸ்திரேலிய கேப்டனின் கையில் ஐ.பி.எல் கோப்பை தவழ்ந்தது. பெங்களூரு கோப்பையை வெல்லாவிட்டாலும் அவர்களுக்கும் இது ஒரு பெருமிதப்பட்டுக்கொள்ளக்கூடிய தருணம்தான்.

IPL 2009 Final | DCvRCB

எத்தனை ஐ.பி.எல் இறுதிப்போட்டிகள் வந்தாலும் இந்த 2009 இறுதிப்போட்டி எப்போதுமே ஸ்பெஷல்தான். காரணம், ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட அந்த இரண்டு கம்பேக்குகள்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.