31 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு பேரறிவாளன் கடந்த மே 18-ம் தேதி உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். அந்த அறிவிப்பை பலரும் வெடித்துக் கொண்டாட, காங்கிரஸ்காரர்களோ அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். விடுதலை அறிவிப்புக்குப் பின் முதல் பிரத்யேகப் பேட்டியை ஜூ.வி-க்காகக் கொடுத்திருந்தார் பேரறிவாளன். அதில் இறுதிக் கேள்வியாக, மற்ற ஆறுபேரின் விடுதலைக் குறித்துக் கேட்கப்பட, “அவர்கள் ஆறு பேருக்கும் விடுதலையாகக்கூடிய அனைத்து உரிமைகளும், தகுதியும் இருக்கின்றன. கட்டாயம் அவர்களும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். நானும் நம்பிக்கையோடு இருக்கிறேன்” என்று பதிலளித்திருந்தார் பேரறிவாளன். அதன்படி, முருகன், நளினி, சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஆறுபேரின் விடுதலைக்கான முயற்சிகளும் தொடங்கப்பட்டுவிட்டன என்பது சமீபத்திய அரசின் செயல்பாடுகள் காண்பிக்கின்றன.

முருகன், நளினி, சாந்தன், ஜெயகுமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ்

மே 21 ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட, 31-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. டெல்லியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்த, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இருக்கும் நினைவிடத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.

காங்கிரஸார் கொஞ்சம்கூட எதிர்பாராத விதமாக, அதே தினம் முதல்வர் ஸ்டாலின், மீதமிருக்கும் ஆறுபேரின் விடுதலை குறித்து அதிகாரிகள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இச்செயல் அப்போதே காங்கிரஸார் மத்தியில் புகைச்சலைக் கிளப்பியது.

ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் நிர்வாகிகள்

இதுபற்றி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்தத் தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, “முதல்வரின் செயல்பாடு ரொம்பவும் அபத்தமாக உள்ளது. எல்லாமே ஏதோ செட் செய்யப்பட்டதுபோல நடக்கின்றன. சரியாக மே 18-ம் தேதி, அதாவது ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட நாளாக சித்தரிக்கப்படும் தினத்தில் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. அதுதான் எதேச்சையாக நடந்ததாக நினைத்தால்,

முதல்வர் ஸ்டாலின்

அடுத்த நிகழ்வு சரியாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட மே 21-ம் தேதி முதல்வர் மீதி ஆறுபேரை விடுதலை செய்வதற்கான ஆலோசனையில் ஈடுப்பட்டிருக்கிறார். இது ஒன்றும் தெரியாமல், எதார்த்தமாக நடந்த கூட்டமில்லை. திட்டமிட்டு, காங்கிரஸ்காரர்களை மேலும் வெறுப்பேற்றவே முதல்வர் அந்த தினத்தைத் தேர்வுசெய்திருக்கிறார் என்று நினைக்கிறோம்.

எவ்வளவு அடித்தாலும், என்ன ஆனாலும் காங்கிரஸ், தி.மு.க கூட்டணியை விட்டு விலகாது; ஒரு ராஜ்ய சபா சீட்டைத் கொடுத்துவிட்டோம். அதனால் அமைதியாகிவிடுவார்கள் என்ற எண்ணம்தான் தி.மு.க-வுக்கு மேலோங்கி இருப்பதாகக் கருதுகிறோம். பேரறிவாளன் விடுதலையின்போதே உச்ச நீதிமன்றம், இவரொன்றும் குற்றமற்றவர், நிரபராதி என்று எங்குமே குறிப்பிடவில்லை. ராஜீவ் காந்தி படுகொலையின்போது, குண்டுவெடிப்பால் மாற்றுத்திறனாளியாகிப்போன முன்னாள் காவல்துறை அதிகாரி அனுசியா சொன்னதுபோல, ‘பேரறிவாளன் ஒரு கொலைகாரர்’ என்பதில் நாங்களும் உறுதியாகவே இருக்கிறோம். அதேபோல், மீதமிருக்கும் ஆறுபேரும்கூட கொலைக் குற்றவாளிகள்தான் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

கே.எஸ்.அழகிரி – பேரறிவாளன்

ஒரு விவகாரம் மூலம் அவருக்கு விமோசனம் கிடைத்துவிட்டால், அதே பாணியைப் பின்பற்றி மற்றவர்களும் அதே விமோசனத்தை எதிர்பார்ப்பது இயல்புதான். அதுமாதிரி இந்த விஷயத்தில் நடக்கவே கூடாது. 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானத்தின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததால்தான் உச்ச நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. அதுவும், பேரறிவாளன் தொடர்ச்சியாக சட்டப் போராட்டத்தில் இருந்ததால் இது சாத்தியமானது. மற்ற ஆறுபேரும் இவர் அளவுக்கு சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. அதனால், வான்ட்டடாக தமிழ்நாடு அரசே அதற்கான முயற்சியில் ஒருபோதும் ஈடுபடக்கூடாது” என்றனர்.

இதுகுறித்துக் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்வத்திடம் பேசினோம். “மே 21-ம் தேதியன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது தற்செயலாக நடந்ததல்ல, திட்டமிட்ட ஒன்றுதான். காங்கிரஸ் தெளிவாக சொல்லியிருக்கிறது ஒரே விஷயம்தான். எந்த மதம், இனமாக இருந்தாலும் குற்றவாளிகள் குற்றவாளிகள்தான். இனத்தால், மதத்தால் பாகுபடுத்தக்கூடாது. ஏற்கெனவே சி.பி.ஐ பலகட்ட விசாரணை நடத்தியிருக்கிறது, உச்ச நீதிமன்றமும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்திருக்கிறது. தூக்குத் தண்டனைப் பெற்றவர்களின் தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்திருப்பதுதான் கருணை. அதற்கு மேலும் விடுதலை செய்ய வேண்டும் என்றால், இந்திய சிறைகளில் இருக்கும் ஏதோ காரணங்களுக்காகக் குற்றமிழைத்த குற்றவாளிகளையெல்லாம் விடுதலை செய்துவிட முடியுமா?

குற்றவாளிகளால் பாதிக்கப்பட்ட, ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்ட, காயம்பட்டவர்களும் தமிழர்கள்தான். அன்றைய மீட்டிங்கில் பங்கேற்றதைத் தவிர, அவர்கள் என்ன குற்றம் செய்தனர்? அவர்களை ஏன் ஒருவரும் நினைத்துப் பார்ப்பதில்லை? துன்பம் என்பது இவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களுக்கு உள்ளது. பேரறிவாளன் விடுதலையினால், சி.பி.ஐ-யின் வழக்கு விசாணையில் தவறு இருக்கிறதா? நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தது தவறா? என்பதே கேள்விக் குறியாகியிருக்கிறது.

செல்வம், பொதுச்செயலாளர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

கொலை சம்பவம் நடந்தன்று குற்றவாளிகளுக்கு ஆதரவு அளிக்க கூட ஒருவருமில்லை. ஆனால், இன்று குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்க புற்றீசல்கள் போல கிளம்பிவருகிறார்கள். அத்தகையவர்களின் பின்னணி, நோக்கம் என்ன? ஒருசில அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்திற்காக குற்றவாளிகளுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். ஒரு உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை.

சட்டத்தை மதிக்காத, ஜனநாயகத்தை மதிக்காத, உயிரைக் கொல்ல வேண்டும் என்று திட்டமிட்டு சதிவேலை செய்து குற்றமிழைத்தவர்களை விடுவிக்க வேண்டும் என்று முடிவெடுத்தால், அதற்கு ஒரு சார்பினர் ஆதரவு கொடுத்தால், அதே குற்றத்தை அவர்கள் குடும்பத்துக்கு யாராவது செய்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? ‘பரவாயில்லை அவன் தமிழன் தான் தெரியாமல் தப்பு செய்துவிட்டான் தண்டனையிலிருந்து மன்னிப்புக் கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்வார்களா? அதனால், சட்டத்திலிருக்கும் ஓட்டையைப் பயன்படுத்தி யாரையும் தப்பிக்க விடக்கூடாது என்பதே எங்கள் கருத்து!” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.