அறிமுக இயக்குநர் ரதீனா இயக்கத்தில் மம்முட்டி, பார்வதி, அப்புன்னி சசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ‘புழு’. எஸ். ஜார்ஜ் தயாரிப்பில் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது.

காவல்துறையில் விருப்ப ஓய்வுபெற்ற குட்டன் (மம்முட்டி) நண்பர்களுடன் இணைந்து அண்டர்கிரவுண்ட் பிசினஸில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். சிறுவயதிலேயே தாயை இழந்து தனிமையில் இருக்கும் தன் மகனை விளையாடக்கூட விடாமல் ஓவர் கண்டிப்புடன் வளர்க்கிறார். இதனால், அப்பா மம்முட்டி சாகவேண்டும் என்ற மனக்குமுறலுடன் வெதும்பிக்கொண்டிருக்கிறான் மகன். இன்னொரு பக்கம், வீட்டின் கடுமையான எதிர்ப்பை மீறி சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்ளும் மம்முட்டியின் தங்கை பார்வதி, அதே அபார்ட்மெண்டில் குடிவருகிறார்.

மம்முட்டிக்கு ஏற்பட்ட மூச்சுப்பிரச்சனையால் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தால் மட்டுமே இரவில் தூங்கமுடியும். இந்த பிரச்சனையை பயன்படுத்தி சுவாசிக்கும் காற்றில் கெமிக்கலைக் கலந்து மம்முட்டியை யாரோ தொடர்ந்து கொல்ல முயற்சி செய்துகொண்டே இருக்கிறார்கள். அது யார் என்ற புலனாய்வைத் தொடங்கி கண்டுபிடிப்பதுதான் கதை.

சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறும் காட்சிகளில் நமக்கே மூச்சுத் திணறுவது போன்ற உணர்வை உண்டாக்கிவிடுகிறார் மம்முட்டி. கண்களாலேயே மகனுக்கு கண்டிஷன் போடும் காட்சிகளில் கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறார். தன்னைக் கொலை செய்ய முயற்சி செய்வது யார் என்று ஃபிங்கர் பிரிண்ட்களை வைத்துக்கொண்டு நிதானமாக ஆராயும் காட்சிகளில் நம் கண்களை இமைக்கவிடாமல் இம்சிக்கிறார். ஒரு சூப்பர் ஸ்டார், இப்படிப்பட்ட எதிர்மறையான கதாப்பாத்திரத்தை தாங்கிப்பிடித்து நடித்திருப்பது படத்தின் பலம்.

image

குட்டப்பனாக குறைந்தக் காட்சிகளே வந்தாலும் படத்தில் ’அப்ளாஸ்’ அள்ளுவது என்னவோ நடிகர் அப்புன்னி சசி தான். படத்தில் வரும் நாடகத்தில் மட்டுமல்ல… படத்திலும் கம்பீரமான உடல்மொழியாலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ’என்னதான் ஐபிஎஸ், ஐஏஎஸ் ஆனாலும் சாதி மனநிலையில் மட்டும் இவங்க மாறமாட்டாங்க’… ‘ரோபோ கண்டுப்பிடிச்சாலும் சாதி ஃபேன்ஸி ட்ரெஸ் போட்டு வந்துக்கிட்டேதான் இருக்கும்’ என சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக அவர் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் நச்.

அடுத்ததாக நடிப்பில் ’வாவ்’ சொல்ல வைக்கிறான் சிறுவன் வாசுதேவ் சஜீத். பள்ளியில் படிக்கும் பிஞ்சுமுகமாகவும் அப்பா பார்க்கும் பார்வையிலேயே சட்டை பட்டனை பூட்டிக்கொள்ளும் அப்பாவியாகவும், சாதி,மதவெறியின் ஓவர் கண்டிஷன்களால் மம்முட்டியை அடியோடு வெறுத்து ஒதுக்குவது எனவும் க்ளைமாக்ஸ் வரை சாதிமறுப்பு பேசும் மற்றொரு குட்டப்பனாய் மனதில் உயர்ந்து நிற்கிறான்.

கணவன் இறந்தபிறகு மறுமணம் செய்துகொள்வது, அதுவும் சாதிமறுப்பு திருமணம் செய்துகொள்வது என பாரதியாக நடித்திருக்கும் பார்வதிக்கு முற்போக்கான கதாப்பாத்திரம் மிகச்சரியாகவே பொருந்தியிருக்கிறது. இவர்களுடன் நெடுமுடி வேணு, இந்திரன்ஸ் என பல துணைக் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

image

அறிமுக இயக்குநர் ரதீனா க்ரைம் த்ரில்லர் கதைக்காக ஏகப்பட்ட கிரவுண்ட் ஒர்க்களை செய்திருக்கிறார் என்பது தெரிகிறது. மம்முட்டி கதாப்பாத்திரத்தின் சூழ்நிலைக்கேற்ப அவரைக் கொல்ல திட்டம் தீட்டும் விதமும் ஏற்றுக்கொள்ளும்படியாக இருக்கிறது.

‘சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்’ என்ற கவிஞர் பழநி பாரதியின் கவிதை வரிகளை உண்மையாக்கியிருக்கிறது ’புழு’. படத்தில், சாதிவெறியோடு உலாவும் மம்முட்டியின் மூச்சுக்காற்றில் விஷம் பரவ வைத்திருக்கிறது திரைக்கதை. சமூகத்தில் விஷமாக பரவியிருப்பதே சாதியும் மதமும்தான். அந்த இரண்டையும் கையில் எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் ரதீனா. திரைக்கதையின் கதாயுதமே சாதி மதி வெறியர்களின் தலையில் ஓங்கி அடிக்கும் வசனங்கள்தான். ஒரு க்ரைம் திரில்லர் படம் என்றாலே ஒரு கொலை அல்லது ஒரு கொலை முயற்சி இருக்கும். அந்த கொலைகாரன் அவராக இருக்குமா, இவராக இருக்குமா என்று நம்மைக் குழம்ப செய்து க்ளைமாக்ஸில் அவர்தான் என்று முடிக்கப்படும். அப்படிப்பட்ட கதையாக ‘புழு’ இருந்தாலும் ஆணவப்படுகொலை, இஸ்லாமியர்கள் மீதான குரூரப்பார்வையை கதைக்குள் ஒளித்து கொலைகளுக்கான காரணத்தையும் வலுவாகவே சொல்லியிருக்கிறது படம். இருந்தாலும் படத்தில் சில மைனஸ்களும் உள்ளன.

image

‘புழு’ என்ற தலைப்பிற்கேற்பவே படத்தின் படமும் புழுபோலவே வளைந்து, நெளிந்து, ஊர்ந்து மெதுவாகவே செல்கிறது. த்ரில்லர் படம் என்றாலே சாதாரண காட்சிகளுக்குக்கூட இதயத்தை பிளக்கும் அளவுக்கு இசையமைக்கப்பட்டிருக்கும். ஆனால், நாடகத்தை மையப்படுத்தி எடுத்ததாலோ என்னவோ ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசையும் நாடகத்திற்கு கொடுத்ததுபோலவே இருக்கிறது. மம்முட்டிக்கும் அவரது மகனுக்குமான காட்சிகளே படத்தில் அதிகமாக நீண்டுகொண்டிருக்கின்றன. அதற்கு பதிலாக அப்புன்னி சசி- பார்வதியின் மறுமணக் காதலை இன்னும்கூட அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என்று ஏங்கவைக்கிறது. பெற்றோர்களின் கடுமையான எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டு அதே ஃப்ளாட்டுக்கு குடியேறுவது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

‘புழு’ நிச்சயமாக பார்க்கவேண்டிய படம்.

– வினி சர்பனா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.