திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சிகள் கொடுப்பதோடு, தொழில் தொடங்குவதற்கு வங்கிகள் மூலம் கடன் உதவியும் பெற்றுத் தருகின்றனர். இந்நிலையில், ‘மாவட்ட தொழில் மையத்துக்குச் செல்லும் தொழில் முனைவோர்களிடம், தொழிற் கடன்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆயிரத்தில் தொடங்கி லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார்கள்!’ என திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதையடுத்து நேற்று மதியம் சுமார் 4 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி மணிகண்டன் தலைமையிலான 15 அதிகாரிகள் ரெய்டில் இறங்கினர்.

மாவட்ட தொழில் மையம்

இதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவீந்திரன், உதவிப் பொறியாளர் கம்பன் ஆகியோரிடமிருந்து அலுவலகத்தில் வைத்து கணக்கில் வராத 3 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், உறையூரில் உள்ள ரவீந்திரனின் வீடு, திருவெறும்பூரில் உள்ள கம்பனின் வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 10 மணி வரை சோதனை நடத்தினர். அதில் மாவட்ட தொழில் மைய மேலாளர் ரவீந்திரன் வீட்டிலிருந்து 6 லட்ச ரூபாய் ரொக்கம், 50 பவுன் தங்க நகைகள், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், 40 லட்ச ரூபாய் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதையடுத்து ரவீந்திரன், கம்பன் ஆகிய இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

சோதனையில் அதிகாரிகள்

இதுதொடர்பாக விவரமறிந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “மாவட்டத்தில் ஏ கிரேடு அதிகாரியாக இருக்கக்கூடிய தொழில் மைய மேலாளர் ரவீந்திரன், தன்னுடைய அலுவலகத்தில் டேபிளில் வைத்தே பயமில்லாமல் லஞ்சம் வாங்கி வந்திருக்கிறார். சிறு நிறுவனங்களில் ஆரம்பித்து பெரு நிறுவனங்கள்வரை பலரிடமும் கடன் உதவி பெற்றுத் தருவதற்காகவும், மானியம் வழங்குவதற்கும் திட்ட மதிப்பீட்டில் 10 சதவிகிதம் வரை லஞ்சம் வாங்கியிருக்கிறார். அப்படி கிடைத்த பணத்தை வைத்து திருச்சி உறையூரில் ஒரு பிளாட், கிராப்பட்டி பகுதியில் ஒரு பிளாட் ஆகியவற்றை வாங்கியிருக்கிறார். மேலும், ஏராளமாக சொத்துகளையும் வாங்கிக் குவித்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. உதவிப் பொறியாளர் கம்பன்தான் ரவீந்திரனுக்கு லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் இடைத்தரகர் போல செயல்பட்டு வந்திருக்கிறார். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம்” என்றனர்.

மாவட்ட தொழில் மையம்

திருச்சி மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் என 18 ஆயிரம் நிறுவனங்கள் இருக்கின்றனவாம். இதில் பல பெரிய நிறுவனங்களிடம் ரவீந்திரன் லஞ்சம் வாங்கிக்கொண்டு, அரசுப் பணத்தை லட்சக் கணக்கில் மானியமாக அள்ளி வீசியதாகக் கூறப்படுகிறது. ரவீந்திரன் பொறுப்புக்கு வந்தபிறகு அப்படி எந்தெந்த பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் அதிக அளவு மானியத்தில் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது என்ற விவரத்தை எடுத்தாலே மொத்த ஊழல் விவகாரத்தின் பின்புலமும் அம்பலமாகிவிடும் என்கிறார்கள். இதுபோக, ரவீந்திரனுக்குச் சொந்தமான 3 வங்கி லாக்கர்கள் இருக்கின்றனவாம். தற்போதுவரை கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்க, அந்த லாக்கர்களை உடைத்தால் ரவீந்திரன் லஞ்சப் பணத்தில் வாங்கிக் குவித்திருப்பது வேறு என்னென்ன என்பது தெரிய வாய்ப்பிருக்கிறது எனக் கூறப்படுகிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.