நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல்குவாரி இயங்கி வருகிறது. விதிகளை மீறி இரவு நேரத்திலும் அந்தப் பகுதியில் குவாரி செயல்பட்டுள்ளது. வழக்கம்போல் பணிகள் நடந்தபோது, இன்று அதிகாலை நேரத்தில் ராட்சத பாறை உருண்டு விழுந்துள்ளது.

ராட்சத பாறை விழுந்து கிடக்கும் காட்சி

அப்போது அங்கு கற்களை ஏற்றும் பணியில் ஈடுபட்ட மூன்று கிட்டாச்சி ரக இயந்திரங்களும், இரு டாரஸ் வகை லாரிகளும் பாறையின் அடியில் சிக்கிக் கொண்டன. இந்த விபத்தில், லாரி டிரைவர்களான செல்வகுமார், ராஜேந்திரன் கிளீனர் முருகேசன் மற்றும் கிட்டாச்சி இயந்திரத்தின் ஆபரேட்டர்களான செல்வம், முருகன், விஜய் ஆகியோர் பாறைக்குள் சிக்கி உயிருக்குப் போராடினார்கள்.

பாளையங்கோட்டை, நாங்குநேரி ஆகியப் பகுதிகளிலிருந்து மீட்புப் பணிக்காக தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை வேகப்படுத்தினார்கள் அதிகாலையில் போதிய வெளிச்சம் இல்லாத சூழலில், மழை பெய்ததால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

மீட்கப்பட்ட இருவர் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட குவாரியில் 300 அடி ஆழத்துக்கும் மேலாக தோண்டப்பட்டு கனிமங்கள் எடுக்கப்பட்டதால் அந்த ஆழத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், ராமேஸ்வரம் ஐ.என்.எஸ் பருந்து கடற்படை தளத்தில் இருந்து லெப்டினன்ட் கமாண்டர் சஞ்சய் தலைமையிலான 4 பேர் கொண்ட மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர. ஆனால், தொடர்ந்து பாறைகளில் சரிவு ஏற்பட்டதால் மீட்புப் பணிகளைத் தொடர வாய்ப்பு இல்லையென திரும்பிச் சென்று விட்டனர்.

நெல்லை மாவட்ட தீயணைப்புப் படையினர் மற்றும் போலீஸார் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு பாறைகளுக்குள் புதையுண்டு கிடந்த கிட்டாச்சி இயந்திரத்தின் டிரைவர்களான முருகன், விஜய் ஆகியோரை பத்திரமாக மீட்டுக் கொண்டுவந்தனர். மற்றொரு கிட்டாச்சி இயந்திர டிரைவர் செல்வம் என்பவர் வெளியில் தெரியும் வகையில் இயந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.

பாறைகள் சரிவால் புகைமூட்டம் போல் எழுந்த தூசி

அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக பாறைகள் சரிந்து விழுவதால் அவரை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவருக்கு திரவ உணவு அளிக்கப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நிவாரண உதவியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். அத்துடன் மீட்புப் பணிகளை வேகப்படுத்தும் வகையில் அமைச்சர் ராஜகண்ணப்பன், பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மை செயலாளர் மற்றும் கனிம வளத்துறையின் இயக்குநர் ஆகியோரை சம்பவ இடத்துக்கு முதல்வர் அனுப்பி வைத்துள்ளார்.

மீட்புப்பணி நடக்கும் இடத்தில் திரண்ட கூட்டம்

சம்பவம் நடந்த இடத்தில் நடக்கும் பணிகளை நேரில் பார்வையிட்ட நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, “தனியார் குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி நடக்கிறது. கல்குவாரி உரிமம் பெற்ற சங்கர நாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார், குத்தகைக்கு எடுத்து நடத்தும் சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை போலீஸார் தேடிவருகிறார்கள்.

இப்போது மீட்புப் பணிக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுகிறோம். இருப்பினும், கல்குவாரி அளவுக்கு அதிகமான ஆழம் தோண்டப்பட்டுள்ளதா, விதிமீறல் நடந்துள்ளதா என்பதை நிச்சயம் ஆய்வு செய்வோம். விதிமுறை மீறல் நடந்திருக்குமானால் பாரபட்சம் இல்லாமல் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.