வேலை போயிருச்சா? கவலைப்படாதீங்க. ஆக்சிடண்ட் ஆகிருச்சா? இது ஏதோ நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க! ஒருத்தர் துரோகம் பண்ணிட்டு போயிட்டாங்களா? ஃபீலே பண்ணாதீங்க. விட்டுத்தள்ளுங்க! இப்படி எல்லாத்துக்கும் think positive and be positive-ன்னு சிலர் சொல்லிட்டே இருப்பாங்க. அழுகை, சிரிப்பு, துக்கம், மகிழ்ச்சி, சோகம் இப்படி எல்லா உணர்ச்சிகளுமே நம்ம எல்லாருக்குமே இருக்கத்தாங்க செய்யுது. அப்படி இருக்கும்போது நீ எதுக்குமே அழவே கூடாது எல்லாத்தையும் பாசிட்டிவ்வா எடுத்துக்கிட்டு சிரிச்சுட்டு கடந்துபோன்னு சொல்லுறது சரியா? இது நிஜத்துல சாத்தியமா? அப்படினா 90% இல்லைன்னுதாங்க சொல்லமுடியும்.

ஒருத்தர் வருத்தத்துல இருக்கும்போது அவங்கள உற்சாகப்படுத்துறேன்னு நினைச்சுக்கிட்டு பேசுறதைத்தான் ”Toxic positivity”-ன்னு சொல்றாங்க. இந்த நேர்மறையான நச்சுப்பேச்சுகள் மன கஷ்டத்துல இருக்கற ஒருத்தரை எந்த அளவுக்கு பாதிக்கும்னு சொல்றவங்க கண்டிப்பா புரிஞ்சுக்க முடியாது. உண்மையில இந்த மாதிரியான அணுகுமுறை நம்பிக்கையோட இருக்கணுங்கற முக்கியத்துவத்தை மட்டும் வலியுறுத்தாம, மனித உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காம ஹேப்பியா இருங்காங்கனு மட்டும் சொல்வது. இதனால பலபேர் அடுத்தவங்களுக்கு பயந்தே தங்களுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி மன அழுத்தத்தை அதிகரிச்சுக்கறாங்கன்னு  ஓர் ஆய்வு சொல்கிறது. சிலர் அடுத்தவங்க முன்னாடி மகிழ்ச்சியாக காட்டிக்கணும்ன்னு தங்களை தாங்களே ஏமாத்திக்கறாங்கன்னும் சொல்றாங்க.

image

உதாரணத்துக்கு ஒருத்தருக்கு வேலையிழப்பு ஏற்படுறப்போ, ‘’பாசிட்டிவா இருங்க’’ அல்லது ‘’அடுத்த லெவல்ல யோசிச்சு போங்க’’ அப்படின்னு சிலர் சொல்லுவாங்க. இது வேலையை இழந்து துக்கத்துல இருக்க ஒருத்தர், அவரோட வலியை பகிர்ந்துக்கணும்னு நினைக்கறதையே தடுத்துடும். இது அந்த நபருடைய மன வலியை அதிகரிச்சு மன உளைச்சுக்குள்ள கொண்டுபோயிடும்ன்னு அட்வைஸ் பண்ணுறவங்களுக்கு தெரியாது.

சிலர் துக்க வீட்டுக்கு போகுறப்போ, ஆறுதல் சொல்றேன்னு, ’’எதுவுமே காரணம் இல்லாம நடக்காது. எல்லாத்துக்கும் காரணம் இருக்கும்’’ன்னு சொல்வாங்க. இதை ஆறுதல் வார்த்தைகள்ன்னு எடுத்துக்கறதை காட்டிலும், பல நேரங்கள்ல ஒருத்தரோட வலியை பகிர்ந்துக்கறதை தவிர்க்கிறதுக்கான ஒரு வழின்னு கூட சொல்லலாம்.

சிலர் தன்னோட ஏமாற்றத்தை, சோகத்தை பகிர்ந்துக்கும்போது, ’’மகிழ்ச்சியா இருக்கறது ஒரு சாய்ஸ், அதை நாம்தான் தேர்ந்தெடுக்கணும்’’ன்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு போயிடுவாங்க. ஒருவேளை நாம்தான் தப்பா யோசிக்கறமோன்னு கஷ்டத்துல இருக்க நபருக்கே தன்னோட உணர்ச்சிகள்மேல சந்தேகத்தை வரவழைச்சிடும்.

image

எப்போதும் பாசிட்டிவ் பாசிட்டிவ்ன்னு பேசிட்டு இருக்க நபர்கள் ரொம்ப வலிமையானவங்கன்னு ஒரு பிம்பத்தை ஏற்படுத்திக்கறாங்க. உதாரணத்துக்கு கொரோனா காலத்துல வருமானமே இல்லாம வீட்டுல இருக்கறவங்களை உற்சாகப்படுத்துறேன்னு நினைச்சுட்டு பலரும், உனக்குள்ள இருக்க திறமையை வெளிக்கொண்டுவந்து அதுல ஏதாவது முயற்சி செய்ன்னு சொன்னதை நம்மில் பலபேர் கேட்டிருப்போம்.

கடினமான சூழ்நிலையில இருக்க ஒருத்தர்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாத பலரும் இதுபோன்ற வார்த்தைகளை சுலபமா பேசிட்டு போயிடுவாங்க. ஆனால் இது பாதிக்கப்பட்ட நபருக்கு மேலும் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்ன்னு தெரியாது. சிலர் அடுத்தவங்க சூழ்நிலையை தங்களுக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு நயவஞ்சகமான ஆறுதல் வார்த்தைகளை சொல்வாங்க. அடிக்கடி கஷ்டமான சூழ்நிலைக்குள்ள போறவங்களை சிலர் அவமானப்படுத்தவும், குற்றப்படுத்தவும் செய்யுறாங்க.

நேர்மறை நச்சு பேச்சுக்களை ஏன் அபாயகரமானதுன்னு சொல்றாங்க?

கடினமான சூழ்நிலையில போறவங்களுக்கு இந்த நேர்மறை நச்சு பெரும்பாலும் தீமைகளைத்தான் கொடுக்குங்க. மனித உணர்ச்சிகளை பகிர்ந்துகிட்டு, கொஞ்சம் ஆதரவை மட்டும் எதிர்பார்க்குற பலரோட உணர்வுகள் இங்க நிராகரிக்கப்படுது. இல்லேன்னா அந்த நபரே புறக்கணிக்கப்படுறார்.

image

ஒருவர் கஷ்டப்படும்போது அவரோட உணர்ச்சிகளுக்கு மதிப்பு இருக்குதுன்னு அவருக்கு புரியவைக்கணும். அதுக்கு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆதரவா இருக்கணும். அதுவே டாக்சிக் பாசிட்டிவிட்டியா இருந்தா ஒருவரோட உணர்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்படாம நெருங்கினவங்களாலேயே நிராகரிக்கப்படுது.

கடினமான சூழ்நிலைல நேர்மறையான எண்ணங்களை கொண்டுவர முடியலைன்னா ஏதோ தப்பா நடக்குதுன்னு யோசிக்க ஆரம்பிச்சுடுவாங்க. அது கடின சூழ்நிலையை காட்டிலும் மோசமான விளைவுகளை சந்திக்க வெச்சுடும்.

உணர்ச்சிகள் பிறரால நிராகரிக்கப்படுறப்போ, சிலர் அதை தனக்குள்ளேயே மறைச்சுவைக்க நினைப்பாங்க. இது அவங்களுக்கு ஒரு அசௌகரியத்தை உருவாக்கிடும். இதனால சிலர் தனக்குள்ளேயே குழம்பிபோய், தன்னோட உணர்ச்சிகளை தானே நிராகரிச்சு தன்னைத்தானே ஏமாத்திட்டு இருப்பாங்க.

இதனால வலி தர்ற செயல்களை பலரும் தவிர்த்திடுவாங்க. இது வாழ்க்கைல சவால்களை சந்திக்கிற மனப்பாங்கே இல்லாம பண்ணிடும். இதனால் வாழ்க்கைல வளர்ச்சியடைய முடியாதுன்னு நிறையப்பேர் சிந்திக்கிறது இல்லை.

image

ஒவ்வொண்ணுக்கும் ஒரு காலம் இருக்குது. அழ ஒரு காலம் இருந்தா, சிரிக்க ஒரு காலம் இருக்கும்ன்னு சொல்வாங்க. எனவே வேலையிழப்பு, பொருளாதார பிரச்னை, உடல்நலமின்மை, காதல் தோல்வி, பிரிவுகளை சந்திக்கும்போது உணர்ச்சிகளை அனுபவிக்கணும். அதுதான் முழுமையா அதிலிருந்து வெளிய வர்றதுக்கான நிரந்தர தீர்வா அமையும். அதேபோல, ஒருத்தர் தன்னோட கஷ்டத்தை சொல்லும்போது உடனே அதிலிருந்து வெளியா வான்னு சொல்லாம, அந்த நேரத்துல அந்த நபரை சமாளிக்காம சூழ்நிலைய சமாளிக்க வழிய சொல்லுங்க. அதுவே பெரிய ஆறுதலா இருக்கும். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதிலிருந்து சீக்கிரம் மீண்டுவர வழிகளை சொல்லுங்க.
பிரச்னைகளை காதுகொடுத்து கேட்கறதே நிறைய நேரங்கள்ல பெரிய ஆறுதல்தான். ஸோ, இனிமேல் யாராவது கஷ்டத்தை பகிர்ந்துகிட்டா, அவர்களுடைய பிரச்னையை முழுமையா கேளுங்க.

சிலருடைய வார்த்தைகள் துக்கத்தை அதிகரிச்சா, அவங்ககிட்ட ஷேர் பண்ணுறதை நிறுத்திக்கிறது நல்லது. இது கஷ்டத்தை மேலும் அதிகரிக்காம இருக்க உதவும். உங்களோட உணர்ச்சிகளுக்கு கண்டிப்பா மதிப்பு இருக்குண்ணு புரிஞ்சுக்கோங்க.

’’Your emotions are very important. They are valid. So Think positive and Be Positive’’ – மாத்தி யோசிப்போம்!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.