பிரபலமான ஹிந்தி பாடலான ‘நாகின்’ இசைக்கு நாக பாம்பு ஒன்றுடன் நடனமாடிய நபர் கைது செய்யப்பட்டிருக்கிறார். நாக பாம்பு போன்ற விஷமுள்ள பாம்புகளை வளர்ப்பதும் கேளிக்கைக்குப் பயன்படுத்துவதும் வன உயிர் பாதுகாப்பு சட்டம் 1972 பட்டியல் 2-ன் படி சட்டத்திற்குப் புறம்பானது.

ஒடிசா மாநிலம் மாயூர்பஞ்ச் (Mayurbhanj) மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திருமண நிகழ்வு ஒன்றில் திருமண வீட்டாரும் பாம்பு வளர்ப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நபரும் பிரபல ஹிந்தி பாடலான ‘நாகின்’ இசைக்கு மத்தளங்கள், மகுடி சத்தத்திற்கு இடையே நடனமாடியுள்ளனர். இதனைக் கண்டு பயந்த கிராமத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். பாம்பு வளர்த்தவர் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து மகுடி வாசித்தவரை கைது செய்துள்ளனர்.

பாம்பைத் தலை மீது வைத்துக் கொண்டு ஆடும் காட்சி

மூங்கில் கூடையில் பாம்பை உயர்த்தி பிடிப்பது, நடுவில் இருக்கையில் வைத்துவிட்டு சுற்றி ஆடுவது எனக் கடுமையான சத்தங்களை எழுப்பி பாம்பை அச்சுறுத்துவதாக இருக்கும் இந்த வீடியோ காண்போரை கலங்கச் செய்யும். இது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது விஷம் நீக்கப்பட்ட நாக பாம்பாக இருக்கலாம் எனவும் இப்படி விஷம் நீக்குவது சட்டப்படி குற்றம் எனவும் தெரிவிக்கிறார்கள். வனத்துறை அவரிடம் இருந்து பாம்புகளை பத்திரமாக மீட்டனர். இது போன்ற நிகழ்வு நீண்ட நாள்களுக்குப் பிறகு நடந்துள்ளது. அதீத சத்தத்துக்கு இடையே பாம்பை வைத்து வித்தைக் காட்டுவதும், அதற்காக பாம்புகளைப் பழக்குவதும் சட்டத்திற்கு புறம்பானது மற்றும் ஆபத்தானது.

“பாம்பு மிரள்வதைக் காண முடிகிறது. இது போன்ற நிகழ்வை அனுமதித்த திருமண வீட்டார் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.