சென்ட்ரல் அருகே பல்லவன் இல்லத்தில் தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல‌ அமைப்பு சார்பாகத் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் தமிழகத்தின் கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டனர்.

போராட்டம்

ஓய்வுபெற்ற அரசுப்போக்குவரத்து ஊழியர்களுக்கு 77 மாதங்களாக ஓய்வூதியம் அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை. அதேபோல, மற்ற அரசுத் துறை ஓய்வூதியர்கள்போலப் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. மேலும், இறந்த ஓய்வூதியர்கள் குடும்பத்துக்கான நிதியுதவி ரூபாய் 50,000 இவர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தச் சிக்கல்கள் களைய வேண்டும் எனக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற நல அமைப்பு சார்பாகப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டம், எஸ்.கிருஷ்ணன் (தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல‌ அமைப்பு தலைவர்) தலைமையில் வரும் மே மாதம் 6-ம் தேதி வரை தொடரவிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் போராட்டத்தில் துரை பாண்டி (மத்திய அரசு ஊழியர் மகாசபை சம்மேளனத்தின் பொதுச்செயலாளர்) போக்குவரத்து ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தற்போதுள்ள இந்திய அரசியல் நிலவரம் குறித்தும் பேசினார். “இன்று இந்தியாவில் பணவீக்கம் பெரும் பிரச்னையாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையால் காய்கறி, எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. படித்த இளைஞர்களுக்குத் தகுந்த வேலை இல்லாமல் உணவு டெலிவரி வேலை செய்கிறார்கள். ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் ஒன்றிய அரசின் பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இருக்கிறார்கள். ஒன்றிய அரசு மதவாத அடிப்படையில் செயல்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவாத அமைப்புகளைத் தடைசெய்ய வேண்டும்” என்றார்.

போராட்டம்

அவரைத் தொடர்ந்து பேசிய தேவராஜ் (த‌மிழ்நாடு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர்), “ஓய்வூதியர்களுக்கான அகவிலை உயர்வு குறித்து சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னதுரை, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பிரின்ஸ், ம.தி.மு.க எம்.எல்.ஏ ரகுராம் ஆகியோர் கேள்வி எழுப்பினர். ஏப்ரல் மாதம் 26-ம் தேதியன்று மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் எங்கள் கோரிக்கையை முன்வைத்தோம். அவர் முதலமைச்சரிடம் கொண்டு செல்கிறேன் என்றார். எங்கள் கோரிக்கையை நாங்கள் போராட்டம் மூலம் வலியுறுத்தலாமா என்றபோது தாராளமாகச் செய்யுங்கள் என்றார். அதைத் தொடர்ந்துதான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.