சின்னத்திரையில் தொடர்ந்து பல தொடர்களில் நடித்து வந்தவர் வீணா வெங்கடேஷ். கொரோனா பலருடைய அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டதுபோல இவரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது. `சித்தி 2′, `காற்றுக்கென்ன வேலி’ போன்ற தொடர்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட அந்தத் தொடரில் இருந்து விலக வேண்டியதாகிவிட்டது. தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம்.

வீணா

நான் மீடியாவிற்குள் வந்து கிட்டத்தட்ட 15 வருஷமாச்சு. நான் கிளாசிக்கல் சிங்கர் & டான்சர். குழந்தைகளுக்கு எல்லாம் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தேன். அப்ப ஒரு நிகழ்ச்சியில குழந்தைங்ககூட சேர்ந்து டிராமால சின்ன கேரக்டர் ரோலில் நடிச்சேன். அந்த நிகழ்ச்சிக்கு பல பிரபலங்கள் வந்திருந்தாங்க. அதில் என்னைப் பார்த்துட்டு நடிக்க கூப்பிட்டாங்க. கன்னட மொழியில்தான் என் கரியரை ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம் தொடர்ந்து பல படங்கள், சீரியல்னு பண்ண ஆரம்பிச்சிட்டேன். இதுவரைக்கும் சிறந்த அம்மா, சிறந்த வில்லி, சிறந்த துணை கதாபாத்திரம்னு 5 விருதுகள் வாங்கியிருக்கேன்.

`ராடான்’ தயாரிப்பு நிறுவனத்தின் `வாணி ராணி’ சீரியலில் நடிச்சேன். அதுதான் தமிழில் என் முதல் சீரியல். தொடர்ந்து தமிழில் பல சீரியல்களில் நடிச்சேன். `மோகினி’ படத்தில் பெண் அகோரியாக நடிச்சிருப்பேன். சமீபத்தில் `காற்றுக்கென்ன வேலி’, `சித்தி 2′ தொடரில் நடிச்சிட்டு இருந்தேன். ரெண்டுமே எனக்கு பிடிச்ச கதாபாத்திரம். `காற்றுக்கென்ன வேலி’ விஜய் டிவியில் என் முதல் சீரியல். அந்த சீரியலில் `மீனாட்சி’ ன்னு பெரியம்மா கேரக்டரில் நடிச்சேன். ரொம்ப பிடிச்சு ரசிச்சு, ரசிச்சு அந்தக் கேரக்டரில் நடிச்சேன். சொல்லப்போனா பெரியம்மாவாகவே வாழ்ந்தேன்னு சொல்லலாம். அதே மாதிரி, `சித்தி 2′ வில் எனக்கு பிடிச்ச காமெடி ரோலில் நடிச்சேன். இயல்பாகவே காமெடி கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ‘வடிவேலு’வின் தீவிர ரசிகை. மனசுக்கு நெருக்கமான அந்த ரெண்டு சீரியலில் இருந்தும் திடீர்னு விலகுவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கல.

வீணா

திடீர்னு எனக்கு கொரோனா வந்துடுச்சு. ரெண்டு சீரியலிலும் என் கேரக்டர் வெயிட் பண்ண முடியாதுங்கிறதனால ஆள் மாற்றம் பண்ண வேண்டியதாகிடுச்சு. கொரோனா மனதளவிலும், உடலளவிலும் ரொம்ப மன அழுத்தத்தைக் கொடுத்த நேரத்தில் இதுவும் நடந்துச்சு. என் கணவர், குழந்தைங்கன்னு எங்க ஃபேமிலியில் எல்லாருக்கும் கொரோனா வந்துடுச்சு. பண ரீதியாவும், உடல் ரீதியாகவும் ஃபேமிலியில் மிகப்பெரிய அடி விழுந்துச்சு. ரெண்டு சீரியலும் கைவிட்டுப் போகும்போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இங்க நிறைய போட்டி இருக்கு. ஒருத்தர் இல்லைன்னா அந்த இடத்துக்கு வர பலர் தயாரா இருக்காங்க. கிடைச்ச நல்ல வாய்ப்பை தக்க வச்சுக்க முடியாம போச்சேன்னு ரொம்ப கஷ்டப்பட்டு அழுதேன்.

என்னதான் நடிச்சிருந்தாலும் இப்ப நான் மறுபடியும் என் மீடியா வாழ்க்கையை ஜீரோவில் இருந்துதான் ஆரம்பிச்சாகணும். இவங்கதான் இந்தக் கேரக்டருக்கு செட் ஆவாங்கன்னு என்னைத் தேடி கண்டிப்பா வாய்ப்பு வரும் என்கிற நம்பிக்கையில் காத்துட்டு இருக்கேன். என் ஃபேமிலி எனக்கு மிகப்பெரிய சப்போர்ட். என் அம்மாவுக்கு நான் செலிபிரிட்டி ஆகணும்னு ஆசை. அவங்களுக்காகத்தான் இந்தத் துறைக்குள் வந்தேன். இப்ப அவங்க என்கூட இல்லைன்னாலும் அவங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு என்னைக்குமே இருக்கும்னு நம்புறேன்.

வீணா

படங்களில் அம்மா கேரக்டரில் நடிக்கணும்னு ஆசை. அதற்கான முயற்சிகளையும் எடுக்க ஆரம்பிச்சுருக்கேன். தெலுங்கு, மலையாளத்தில் வாய்ப்புகள் வந்துச்சு. கன்னட, தமிழ் படங்களில் கவனம் செலுத்தலாம் என்கிற முடிவில் இருக்கேன். அடுத்த ப்ராஜெக்ட் பெரிய பிரேக்கிங் ஆக இருக்கணும்னு நினைக்கிறேன். கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா நடிக்கலைன்னாலும் இன்னும் மறக்காம, `உங்களை ரொம்ப மிஸ் பண்றோம் மேம்!’னு இன்ஸ்டாகிராமில் கமென்ட் பண்ற உறவுகளைச் சம்பாதிச்சிருக்கேன்னு ரொம்பவே சந்தோஷமா இருக்கு. இன்னும் நான் நடிச்ச தொடர்களில் அவங்களுக்கு பிடிச்ச கேரக்டர் பெயர் சொல்லி தான் என்னைக் கூப்பிடுறாங்க. அவங்களுக்காகவாச்சும் சீக்கிரம் நடிக்கணும்” எனப் புன்னகைத்தாலும் அவர் குரல் உடைவதை உணர முடிந்தது!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.