தமிழக விவசாயிகளின் நலன் கருதி, நடப்பாண்டு மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தித்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று நடைப்பெற்ற மின்சாரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவசாதத்துக்கு பதில் அளித்து பேசிய இத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி “தமிழகத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கவும், விளைநிலங்களின் பரப்பை அதிகப்படுத்தவும், விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடனும் நடப்பாண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். விவசாய மின் இணைப்பு என்பது, தற்போதைய சூழலில் விவசாயிகளின் அத்தியாவசிய தேவையாக உள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜி

இந்நிலையில் தமிழக அரசின் அறிவிப்பு பற்றி பேசிய தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், “தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து பல லட்சம் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இது கிடைக்காததால் விவசாயிகள் சந்தித்து வரும் இடர்பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. நிலத்தடி நீரை அதிகம் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள விவசாயிகள் பெரும் வேதனையைச் சந்தித்து வருகிறார்கள். இது தொடர்பாக தமிழக அரசை தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற தி.மு.க. அரசின் கவனத்திற்கு விவசாயிகளின் எதிர்பார்ப்பை பல வகைகளிலும் கொண்டு சென்றோம். மற்ற விவசாய சங்கங்களும் இக்கோரிக்கைக்காக குரல் கொடுத்தன. அதன் பலனாகத்தான் கடந்த ஆண்டு தமிழக அரசு ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கியது. ஒரே அறிவிப்பில் அதிக எண்ணிக்கையில் விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டதென்பது அதுதான் முதல்முறை.

அதற்காக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தோம். காத்திருக்கக்கூடிய மற்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பை விரைவாகப் பூர்த்தி செய்யும் வகையில், இந்த ஆண்டும் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும் என தமிழக முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இரு தினங்களுக்கு முன்பு கும்பகோணத்தில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

சுந்தர விமலநாதன்

இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில் நடைபெற்ற மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது, நடப்பாண்டு 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். விவசாயிகளின் எதிர்பார்த்தது ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள். தற்போது அறிவிக்கப்பட்டிருப்பது 50,000 விவசாய மின் இணைப்புகள்.

ஆனாலும் கூட தமிழக அரசுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டில் தற்போது மின்சார பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை நிலவக்கூடிய நெருக்கடியான நிலையிலும் கூட, விவசாயிகளின் நலன் கருதி, 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருப்பதென்பது பாராட்டுக்குரியது.

இதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.