கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெறுவதற்கு அந்தந்த நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களுக்கும், ஜாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் போன்றவற்றைப் பெறுவதற்கு தாலுகா அலுவலகங்களுக்கும் பொதுமக்கள் அலைய வேண்டி இருந்தது.

இ- சேவை மையத்தை துவங்கி வைத்த அமைச்சர் சிவசங்கர்

இதற்காக, தொலைதூர குக்கிராமங்களிலிருந்து பேருந்து பிடித்து அரசு அலுவலகங்களுக்கு அலைவது என்பது கஷ்டமாக இருந்தாலும், அங்கு வந்த பிறகும் உரியப் படிவங்களைப் பெறுவதற்கு விண்ணப்பம் எழுதி, நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டி அதில் தேவையான ஆவணங்களை இணைத்துச் சமர்ப்பிப்பதும் சிரமமாகவே இருந்தது.

எனவே, படித்த பட்டதாரிகள் முதல் படிக்காத பாமரர்கள் வரை இது போன்ற சான்றிதழ்களைப் பெறுவதற்கு அதிகாரிகளை விட அரசு அலுவலகங்களுக்கு வெளியில் சுற்றித்திரிந்த புரோக்கர்களையே நம்பி இருந்தனர். அவர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாந்தவர்களும் ஏராளம்.

இலவச இ-சேவை மையம்

பிறகு, ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ் அரசு மற்றும் தனியார் இ சேவை மையங்கள் துவக்கப்பட்ட பிறகு அது போன்ற சிரமங்கள் குறைந்து விட்டாலும் கூட, ஒவ்வொரு சேவைக்கும் தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்வது, ஆன்லைனில் பதிவேற்றம்செய்வது போன்ற விசயங்களுக்காக இ சேவை மையங்களில் ஒவ்வொரு வகையான சான்றிதழ்களுக்கும் தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

தவிர, ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற சேவைகளுக்காக அரசுக்கே குறிப்பிட்ட கட்டணத்தைத் தனியாக ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்

ஆனால், அரசுக்குச் செலுத்த வேண்டியதாக இருந்தாலும் சரி, சேவைக் கட்டணமாக இருந்தாலும் சரி, இவை எதுவுமே இல்லாமல் முற்றிலும் இலவசமாக இயங்கும் ஒரு இ சேவை மையத்தைத் தனது எம்.எல்.ஏ. அலுவலகத்திலேயே திறந்து வைத்திருக்கிறார் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர்.

அமைச்சரின் இந்த நடவடிக்கை குறித்து சமூக ஆர்வலர் காசிநாதனிடம் பேசினோம். “அமைச்சர் சிவசங்கர் முன்னெடுத்திருப்பது வரவேற்கக் கூடிய ஒன்று. அதுவும், அரசுக்குச் செலுத்த வேண்டிய தொகையாக இருந்தாலும், அதையும் தானே செலுத்தி முழுக்க முழுக்க இலவசமாகச் சேவையைத் தருவது பொதுமக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர்

சுண்ணாம்புக் கல் சுரங்கம் ( குவாரிகள்) நிறைந்த பெரம்பலூரில் விவசாயம் என்பதே பெரிய அளவில் நடைபெறவில்லை. மாவட்டத்தில் கல்வியறிவு 70 சதவீதத்துக்கு மேல் இருந்தாலும், அரசுப் பணிகளில் சேர்வதற்குத் தேவையான போட்டித் தேர்வு மையங்களில் பயில்வதற்குச் சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும் நிலையே இருக்கிறது. அங்கு சென்றாலும் தேவையான கட்டணங்களைக் கட்டுவதற்கும் விவசாய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

சிவசங்கர் ஏற்கனவே, கடந்த 2014-ம் ஆண்டு வாக்கில் அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கும் போது இலவச கம்ப்யூட்டர் சென்டர் துவங்கி அதில் அனைத்து மாணவர்களுக்கும் எம்.எஸ்.ஆபீஸ், ஜாவா போன்ற கம்ப்யூட்டர் பயிற்சியையும் இலவசமாகவே வழங்கினார். அதில், ஏராளமான மாணவ, மாணவிகள் பயனடைந்தனர். அதே போல், மாணவர்கள் அரசு வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெரும் வகையில் குரூப் – 2, குரூப் – 4 தேர்வு இலவச போட்டித் தேர்வு மையத்தைத் தொடங்கினால் அது இங்குள்ள மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.