‘அடிமைகள் அரச குடும்பத்தோடு சரிக்கு சமமாக அமர்ந்து சாப்பிடக் கூடாது’ என்று கட்டப்பா சொன்னதும், ‘இந்த ஆயுதக் கிடங்கின் தலைவன்.. நீ அடிமையா?’ என வியப்புடன் கேட்பார் ஆயுத வியாபாரியாக வரும் சுதீப். தன்னுடைய வீரத்தால் மிரட்டிய கட்டப்பாவை சுதீப் சாப்பிட அழைத்த போதுதான் தான் அடிமை என்று கூறியிருப்பார் சத்யராஜ். ‘யுத்தத்தின் போது ஆயுதங்கள் தயார் செய்ய வேண்டும். உயிரைக் கொடுத்தாவது மன்னரின் உயிரை காக்க வேண்டும். யுத்தத்திற்கு பின் அரசரின் காலடியில் கிடக்க வேண்டும்’ இதுதான் கட்டப்பா வம்சத்தினரின் வேலை. உங்களை என்ன விலை கொடுத்தாவது தான் விடுவிக்கிறேன் என சுதீப் கேட்டதற்கு, ‘என் வம்சத்தில் பிறந்த அனைவரும் மகிழ்மதியின் அரியாசனத்திற்கு அடிமையாக இருப்போம் என என் முன்னோர்கள் எப்போதோ வாக்கு கொடுத்துவிட்டார்கள்’ என்று கட்டப்பா கூறுவார்.  இது பாகுபாலி முதல் பாகத்தில் இடம்பெற்ற மிக முக்கியமான காட்சி.

மற்றொரு காட்சி. தேவசேனையாக நடித்திருக்கும் அனுஷ்கா சுள்ளிகள் சேகரித்துக் கொண்டிருக்கும் போது, ‘உத்தரவு கொடுங்கள் உங்களை விடுவிக்கிறேன்’ என்று கேட்பார் கட்டப்பா. அப்போது, தன்னுடைய மகன் வருவான், வந்து தன்னை விடுவிப்பான் என ஆக்ரோஷமாக கூறுவார் தேவசேனை. தன்னால் விடுவிக்க முடியும் என கட்டப்பா உறுதியாக கூறிய பின்னும் தன்னுடைய மகனுக்காக காத்திருப்பார் தேவசேனை.

Bahubali 2 Scene by Scene Part 9: Flying Swan Boat! And the Kiss That Was  Cut | dontcallitbollywood

இந்த நேரத்தில் இந்த காட்சிகளை நினைவூட்டுவதற்கு மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.

தமிழ் சினிமாவுக்கு என்ன ஆச்சு? – அனல்பறக்கும் விவாதம்

தெலுங்கு, கன்னட சினிமாவைப் போல் தமிழில் பிரம்மாண்டமான சினிமாக்கள் எடுக்கப்பட முடிவதில்லை என புதிய விவாதம் ஒன்று சூடுபறக்க கிளம்பியிருக்கிறது. இந்த விவாதம் பெரிய அளவில் கிளம்பியதற்கு முக்கியமான காரணம் இயக்குநர் இமயம் பாரதிராஜாவே இந்த கருத்தினை அழுத்தம் திருத்தமாக ஒரு நிகழ்ச்சியில் சொல்லியிருப்பதுதான். அதே நிகழ்ச்சியில் நடிகர் அருண் பாண்டியன் காட்டமான விமர்சனத்தை முன் வைக்க, அவருக்கு அமீர் பதில் சொல்ல, இருவரது கருத்துக்களை முன் வைத்து பாரதிராஜா பேசினார். அதாவது, தெலுங்கு சினிமாவில் பாகுபலி, புஷ்பா, ஆர் ஆர் ஆர் போன்ற திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. அதேபோல், கர்நடக சினிமாவில் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. முதல் பாகமும் ஏற்கனவே எக்குதப்பான வரவேற்பை பெற்றது. இந்தப் படங்கள் அனைவரும் தென்னிந்திய மொழிகளை கடந்து இந்தி சினிமா மார்க்கெட்டையும் அதிர வைத்துள்ளது. அருண்பாண்டியன் பேசியபோது நடிகர்களின் சம்பளம் குறித்து பேசினாலும், பாரதிராஜா சம்பளத்தை தவிர்த்து படம் தயாரிப்பதற்கான சிக்கலை மட்டும் முன் வைத்தார். இந்த இடத்தில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எல்லோர் மனதில் ஒருமித்து இருந்தது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட சினிமாக்களை ஏன் எடுக்க முடியவில்லை?

image

எது பிரம்மாண்ட சினிமா: 

இந்த இடத்தில்தான் பிரம்மாண்ட சினிமா என்பதற்கான அர்த்தம் குறித்து புரிதல் தேவைப்படுகிறது. அதற்கு, எந்தவொரு கலை குறித்தும் நம்முடைய புரிதல் என்னவாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு கலை என்பது இரண்டு அம்சங்களை கொண்டுள்ளது. ஒன்று உள்ளடக்கம். மற்றொன்று உருவம். அதாவது, ஒரு சினிமாவோ, கவிதையோ, நாவலோ எந்தவொரு கலையாக இருந்தாலும் அது எப்படி எடுக்கப்படுகிறது என்பது வடிவம். அதாவது ஒரு சினிமா என்றால் அதன் திரைக்கதை எவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது, பின்னணி இசை எப்படி இருக்கிறது, நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங் இவையெல்லாம் எவ்வளவு தூரம் சிறப்பாக உள்ளது என்பதுதான் வடிவம் சம்பந்தப்பட்டது. மற்றொன்று, ஒரு திரைப்படம் என்ன பேச வருகிறது என்பது. அது உள்ளடக்கம். ஒரு கலையின் உருவம், உள்ளடக்கம் இரண்டும் ஒரு மனிதனின் இரண்டு கண்கள் போன்றதுதான். ஆனால், இதில் உள்ளடக்கம் தான் ஒரு படி மேலானது. ஒரு நல்ல கதையை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உருவம் முக்கியமானதாக உள்ளது. ஏனெனில் எவ்வளவும் சிறப்பான கருத்தாக இருந்தாலும் சரியான மேக்கிங் இல்லையெல்லால் படம் சொதப்பிவிடுகிறது. மக்கள் மனதில் ஆழமாக பதிய வைக்க முடியாமல் போகிறது.

பிரம்மாண்டம் என்பதை ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை மட்டுமே வைத்தே பலரும் கருத்துக்களை முன் வைப்பதாக தெரிகிறது. பாகுபலியோ, புஷ்பாவோ, கே.ஜி.எஃபோ அந்த படம் எடுக்கப்பட்ட விதத்திற்காகவே அதிகம் பாராட்டப்படுகிறது. எவ்வளவு பொருட்செலவில் எடுக்கப்படுகிறது, எவ்வளவு தூரம் சிஜி தொழில்நுட்பத்தில் பிரம்மிப்பை உருவாக்குகிறார்கள் என்பதை வைத்தே பிரம்மாண்ட படம் என்பது தீர்மானிக்கப்படுகிறது. கதையின் பிரம்மாண்டம் குறித்து இங்கு பெரிய அளவில் பேசப்படுவதே இல்லை. அதனால் நாம் பிரம்மாண்டம் என நினைக்கும் படத்திற்குள் இருக்கும் கருத்தினை ஆழ்ந்து பார்க்க முடியாமல் போய்விடுகிறது.

USA Box Office: 'RRR' Vs 'Bahubali-The Conclusion'

ராஜமௌலியின் இரண்டு முக்கியமான படங்களை நாம் இங்கு எடுத்துக் கொள்ளலாம். ஒன்று பாகுபலி. மற்றொன்று மகதீரா. இவை இரண்டும் ராஜமௌலி இயக்கத்தில் உருவான பிரம்மாண்ட படங்கள் என்று சொல்லப்படுபவைதான். இரண்டுமே பார்வையாளர்களுக்கு மிரட்டலான அனுபவத்தை நிச்சயம் கொடுத்தது என்பதில் சந்தேகமேயில்லை. பீரியட் காட்சிகளை மிகப்பெரிய பொருட்செலவில் எடுத்து நம் கண்களுக்கு விருந்து கொடுத்திருப்பார்கள். ஆனால், இங்கு படம் எடுக்கப்பட்ட விதத்தை தாண்டி அது பேசும் கருத்தினை நாம் கொஞ்சம் அலசிப்பார்க்க வேண்டும்.

இந்த இரண்டு படங்களும் மன்னர் காலத்து வாழ்க்கை முறையை நமக்கு எடுத்து சொல்கிறது.  மன்னர் காலத்து நியாய தர்மங்களை உயர்த்தியே இந்தப் படங்கள் எடுக்கப்பட்டிருக்கும். இது ஒரு பீரியட் திரைப்படம் தானே அந்த காலத்தில் உள்ள நடைமுறைகளை தானே வைக்க முடியும் என்று சொல்லலாம். பாகுபலி மக்களின் அரசனாக உயர்ந்து நிற்பார். ஆனால், ஒரு போதும் கட்டப்பாவால் பாகுபலி ஆக முடியாது. ஏன் ஒரு சுதந்திர மனிதனாக கூட இருக்க முடியாது. சுள்ளி பொறுக்கும் காட்சி சொல்ல வருவது என் ரத்த வாரிசு வந்து காப்பாற்றுவான் என்பதுதான். எவ்வளவு திறமையும் இருந்தாலும் கட்டப்பா அடிமைதான். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பல்வாள்தேவன் அரசன் தான்.

Magadheera About Baahubali | Baahubali Updates

மகதீரா படத்திலும் ராம்சரண் மிகப்பெரிய வீரனாக இருந்தாலும், ஒரு பணியாள் போன்று கீழ் தரமாகத்தான் நடத்தப்படுவார். ‘குரல் கொடுத்தால் ஓடி வந்து நாக்கை தொங்க போடும் வேலையாள் ராஜகுமாரிக்கு நீ வில்வித்தை கற்பிப்பதா?’ என்று வில்லன் கதாபாத்திரம் ராம்சரணை பார்த்து சொல்லும் காட்சி அதற்கு சான்று. மன்னருக்காக சண்டையிட்டு உயிரை விட வேண்டும் அவ்வளவுதான் அவர்களது பணி. தன் சொந்த நாட்டிற்கு ஒருவர் விஸ்வாசமாக இருப்பது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், அடிமையாக இருப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால், ஒரு வீரன் என்பவன் எப்படி விஸ்வாசமாக இருந்து நாட்டிற்காக தன்னுடைய உயிரையும் கொடுக்க வேண்டும் என்பதை காட்சிப்படுத்தியதற்காகத்தான் படம் வரவேற்பை பெற்றது. 

11 Years for Magadheera: A look back at Ram Charan and Kajal Aggarwal  starrer | The Times of India

பாகுபலியையும், மகதீராவையும் மக்கள் தங்கள் மொழி கடந்து மனதுக்கு நெருக்கமாக உணரக் காரணமும் உள்ளது. மக்களை கொடுமை படுத்தும் மன்னனுக்கும், மக்களுக்காக பாடுபடும் மன்னனுக்கும் உள்ள வித்தியாசம் தான் பல்வாள் தேவனின் சிலைக்கு மேலாக பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் பாகுபலியின் உருவம். மன்னன் என்பவன் மக்களுக்காக இருக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்க தக்கதே. இரண்டாம் பாகத்தில் வரும் பாகுபலி மக்களுக்கான மன்னனாக இருப்பதால்தான் மக்களுக்கு நெருக்கமாக படம் மாறிவிடுகிறது. இதுதான் இங்கு முக்கியமானது. ஒரு படத்தில் பிரம்மாண்டமான வடிவமைப்பையும் தாண்டி உணர்வுபூர்வமான கதையின் அம்சமே முழு வெற்றிக்கு காரணமாக அமைகிறது. 

Prabhas pics, Logo reveal, Bahubali movie

மக்களை கவரும் எல்லா பிரம்மாண்ட படங்களுக்கு பின்னாலும் இப்படியான ஒரு கதைக்களம் இருக்கத்தான் செய்கிறது. அவஞ்சர்ஸ், பெண்டாஸ்டிக் போர், ஸ்பைடர் மேன், பேட் மேன், சூப்பர் மேன், ஐயன் மேன் போன்ற ஹாலிவுட்டின் பிரம்மாண்ட படங்களை எடுத்துக்கொண்டாலும் எல்லாவற்றிலும் நல்லவர்கள் கெட்டவர்களை அழிப்பார்கள். நல்ல சக்திக்கும் தீய சக்திக்கும் இடையிலான ஒரு போராட்டமே கதைக்களமாக அமைக்கப்பட்டிருக்கும். அவதார் படத்திலும் பழங்குடி மக்களை நாகரீகம் என்ற பெயரில் அழிப்பவர்களை நினைவு படுத்தும் வகையில் கதைக்களத்தை அமைத்திருப்பார்கள். ஒரு படம் எடுக்கப்பட்ட விதம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்தப் படத்தில் விவாதிக்கப்படும் கருத்தும் முக்கியமானது. அதற்கு தற்போது வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் வரை நிறைய உதாரணங்கள் உண்டு.

image

தற்போது, பிரம்மாண்ட படங்கள் குறித்த விவாதம் எழ காரணமாக இருக்கும் கே.ஜி.எஃப் குறித்து பார்க்கலாம். கே.ஜி.எஃப் கதைக்களத்தை பொறுத்தவரை ராக்கி பாய் எப்படி டான் ஆக உருவாகி கேஜிஎஃப்-ஐ கைப்பற்றினார், கைப்பற்றிய பின்னர் உருவாகும் சவால்களை எப்படி சமாளித்தார் என்பதே இரண்டு பாகங்களின் மொத்த கதை. படம் எடுக்கப்பட்ட விதத்தில் இரண்டு பாகங்களுமே ரசிகர்களுக்கு விருந்து வைத்துவிட்டது. ஆனால், முதல் பாகத்தில் இருந்த ஒரு விஷயம் இரண்டாம் பாகத்தில் விடுபட்டுவிட்டது. கே.ஜி.எஃப் முதல் பாகம் எல்லோருக்கும் பிடிக்க முக்கியமான காரணம் தொடக்கம் முதலே ராக்கி பாயை சாதாரண மக்களின் ஹீரோவாக காட்டுவதுதான். சாப்டர் ஒன்றின் முதல் பாகத்தில் ராக்கி பாய்க்குதான் பில்டப் அதிகமாக இருக்கும், ஆனால், கேஜிஎஃப்க்குள் கதை நகர்ந்த பின்னர் வேறொரு உலகத்திற்கு நம்மை கதைக்களம் கொண்டு சென்றுவிடும். கேஜிஎஃப் சுரங்கத்தில் அடிமைகளாக இருக்கும் மக்களுக்கு விடிவெள்ளியாக ராக்கி பாய் உருவாவாரா என்பதுதான் அந்த எதிர்பார்ப்பு. அதற்கு வலுசேர்ப்பது பிளாஷ் பேக்கில் வரும் தாயின் காட்சிகள் தான். தாய் சொல்வதே தனது தாரக மந்திரமாக கொண்டு ராக்கி பாய் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்.

இரண்டு விஷயங்கள் அவன் தாய் சொல்லியிருப்பாள், சாகும் போது மிகப்பெரிய பணக்காரனாக இருக்க வேண்டும் என்பது, மற்றொன்று கஷ்டப்படும் ஏழை ஜனங்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அதுதான் சுத்தியலை கையில் எடுக்கும் முன்பு வரும் பிளாஷ்பேக் காட்சியில் இடம்பெற்றிருக்கும். அடிமைபட்டும் கிடக்கும் மக்களை ராக்கிபாய் விடுவிப்பான் என்ற எண்ணம்தான் அவனை மிகப்பெரிய ஹீரோவாக மாற்றுகிறது. ஆனால், இரண்டாம் சாப்டரில் மிகப்பெரிய குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. கதையின் தொடக்கத்தில் அவன் அங்கு வாழும் மக்களுக்கு எல்லாம் செய்து கொடுப்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால், படம் ஆரம்பித்த அரைமணி நேரத்திற்கு மேல் தங்கத்தை வெட்டி எடுக்க வேண்டும் என்ற வெறியின் அடிப்படையிலேயே கதை அமைக்கப்பட்டிருக்கும். அதனால், ஒரு கதையாக அவனுக்கான பில்டப் மட்டுமே நிறைய இடங்களில் வந்து போகிறது. படத்தில் மேக்கிங் அடிப்படையில் மிரட்டலான காட்சிகள் ஏராளமாக உள்ளது. ஆனால், உணர்வான ஒரு நூலிழை மிஸ்ஸிங்.

KGF' and rowdy Thangam: How influenced by real life is the series? | The  News Minute

அதனால், படம் எடுக்கும் விதங்களில் பாகுபலி, மகதீரா, புஷ்பா, கேஜிஎஃப் போன்ற மிரட்டலாக தான் உள்ளது. ஆனால், கதை அளவில் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.

இப்பொழுது தமிழ் சினிமா குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமா என்றாலே இயக்குநர் ஷங்கரைத்தான் பிரம்மாண்டங்களின் நாயகன் என்று சொல்கிறார்கள். ஆனால், அதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது. பிரம்மாண்ட சினிமாக்களை எடுப்பதாக சொல்லப்படும் ஷங்கரின் திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக அபத்தமான கருத்துகள் இடம்பெற்று வருகின்றன. அது ஜெண்டில்மேன் படத்திலேயே தொடங்கிவிடுகிறது. ஒரு சமுதாய அமைப்பை முழுமையாக புரிந்து கொள்ளாமல் போவதன் விளைவு அது.

How Vikram has always pushed the boundaries of Tamil cinema: 7 best  performances | IndiaToday

உண்மையில் ஒரு பிரம்மாண்டமான சினிமா என்பது ஒரு முக்கியமான விஷயத்தை உட்கருவாக கொண்டிருக்க வேண்டும். பாட்ஷா, தளபதி, நாயகன் போன்ற படங்கள் பிரம்மாண்ட படங்களாக சொல்லப்படுகிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் அதன் நாயகர்கள் மக்களின் நாயகர்களாக உள்ளார்கள். அவர்கள் மக்களின் டான் ஆக உள்ளார்கள்.

தமிழ்சினிமாவில் சமீப கால திரைப்படங்கள்: 

கர்நாடக, தெலுங்கு மொழி படங்களுடன் ஒப்பிடும் போது தென் இந்திய சினிமாவிலேயே அதிக கருத்திய ரீதியான படங்கள் வெற்றிப்படங்களாக எடுக்கப்படுவது தமிழ், மலையாள சினிமாவில் தான். மிகக்குறைவான பட்ஜெட்டில் பிரமிக்க வைக்கும் படங்களை மலையாள சினிமாக்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. த்ரிஷியம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். ஒரு சாதாரண மனிதனின் அறிவு எப்படி அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கு சவால் விடுகிறது என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதை அவ்வளவு சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார்கள்.

கடந்த சில பத்தாண்டுகளில் விசாரணை, வடசென்னை, சார்ப்பேட்டா பரம்பரை, பரியேறும் பெருமாள், கர்ணன், காக்கா முட்டை, அங்காடித் தெரு, காதல், வழக்கு எண் 18, அருவி, விக்ரம் வேதா, தர்மதுரை, சூப்பர் டீலக்ஸ், சூரைப்போற்று, இறுதிச்சுற்று, ஆரண்ய காண்டம், தெகிடி, உறியடி போன்ற எண்ணற்ற சிறந்த படங்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டேதான் இருக்கிறது.

image

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் போன்ற பிரம்மாண்ட சினிமாவை மற்ற மொழிப்படங்களில் அவ்வளவு எளிதில் எடுக்க முடியாது. படம் எடுக்கப்பட்ட விதத்திலும் கதை அம்சத்திலும் மிக முக்கியமான திரைப்படம். குறிப்பாக இண்டர்வெல் சண்டைக்காட்சி, வயலில் பன்றியை கொல்ல முயலும் காட்சி. இவையெல்லாம் மிக நேரத்தியாக உலக தரத்தில் எடுக்கப்பட்டிருக்கும். மேக்கிங் விதத்தில் வட சென்னை படமும் நான் லீனியர் டைப்பில் எடுக்கப்பட்டிருக்கும். ஆடுகளம் படத்தின் சேவல் சண்டை காட்சி பிரம்மிக்க வைக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.

image

விக்ரம் வேதா திரைப்படமும் கதை சொன்ன விதத்திலும் கதைக் கருவிலும் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும். பிரம்மாண்டம் என்று சொன்னால் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் பாகுபலிக்கு முன்பே வந்துவிட்டது. அதனால், விஷயம் வடிவத்தில் பிரம்மாண்டம் என்பது அல்ல; நல்ல சினிமாக்கள் உருவாவதுதான். சார்ப்பட்டா பரம்பரை திரைப்படமும் மேக்கிங் வகையில் மிரட்டி இருப்பார்கள். அதேபோல், கருத்தளவிலும் நல்ல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். அழகர்சாமியின் குதிரை, வெண்ணிலா கபடிக் குழு, ஜீவா போன்ற நேர்த்தியான படங்களை சுசீந்திரன் கொடுத்துள்ளார். இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். பரதேசி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்குநர் பாலா கொடுத்துள்ளார். 

Bala's 'Paradesi' audio release on November 25

அவர்கள் கட்டப்பாவின் வாரிசுகள். வெறும் வணிக நோக்கில் இல்லாமல் வாழ்வியல் அடிப்படையில், சமுதாயம் பேச துணியாத கதைக்களத்தை தமிழ் சினிமா இயக்குநர்கள் கையாண்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவின் ஹீரோக்கள் பாகுபலிகள் அல்ல. பிரம்மாண்டம் என்று சொல்லி சிறந்த படங்களை நாம் தடுத்துவிட வேண்டாம். அதிக பொருட்செலவில் படங்கள் எடுக்கப்படுவதை காட்டிலும் அர்த்தமுள்ள பார்க்க சுவாரஸ்யமான படங்கள் தான் தேவையாக உள்ளது.

உண்மையில் சிறந்த படங்களை உருவாக்குவதில் சிக்கல் இருந்தால் அது குறித்து நல்ல விவாதங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பிரம்மாண்டம் என்பதை தவறாக, ஒற்றைத்தன்மையாக நாம் புரிந்து கொண்டால் இந்த சிக்கலை நம்மால் சரி செய்யவே முடியாது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.