நடிகை பாவனா, தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் மற்றும் அது சார்ந்து தான் எடுத்த சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் குறித்தும், குறிப்பிட்ட அந்நிகழ்வால் தனக்கு என்ன மாதிரியான மனரீதியிலான பாதிப்புகள் ஏற்பட்டது, இந்த காலகட்டத்தில் என்னமாதிரியான சவால்களை தான் எதிர்நோக்க வேண்டியிருந்தது, `பாதிக்கப்பட்டவர்’ என்ற நிலையிலிருந்து `பாதிப்பிலிருந்து மீண்டவர்’ என்ற நிலைக்கு தான் வந்தது எப்படி என்பது குறித்தும் தற்போது பேசியிருக்கிறார். ஆங்கில் ஊடகமான `மோஜோ ஸ்டோரி’ என்ற செய்தி நிறுவனத்துக்கு மகளிர் தினத்துக்காக அளித்த சிறப்பு வீடியோ பேட்டியில் பாவனா இவற்றை பேசியுள்ளார். தற்போது இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் எந்த நடிகர்களின் பெயரையும் குறிப்பிடாமல் பாவனா பேசியுள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு தான் சில ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறியுள்ள நடிகை பாவனா, “அன்று ஒரே நாளில், என்னுடைய மொத்த வாழ்க்கையும் தலைகீழாக மாறியது. அந்த நிகழ்வுக்குப் பிறகு, நிறைய குழப்பங்களுக்கு நான் உள்ளானேன். `ஏன் எனக்கு இப்படி நிகழ வேண்டும்’ என்று எனக்கு நானே பலமுறை கேட்டுக்கொண்ட நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. `என்னுடைய மிக மோசமான நீண்ட கனவு இது’ என்று நினைத்து, விரைவில் இது முடிவுக்கு வருமென்று பல சூழ்நிலைகளின்போது நினைத்துள்ளேன். அப்படி நிகழாதபோது, என்னை நானே பலமுறை குற்றம் சாட்டிக் கொண்டிருந்தேன். பல சமயம், குறிப்பிட்ட அந்த ஒரு நாளுக்கு ஒரேயொரு முறை திரும்பிச் சென்று, அன்று எனக்கு நடந்த எல்லா மோசமான நிகழ்வுகளையும் தடுத்துவிட்டு, என் வாழ்வை மீண்டும் இயல்புக்கு கொண்டுவரமுடியுமா என்றும் யோசித்திருக்கிறேன்.

image

கடந்த 5 வருடம் என் வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் என்பது, மிக மிக கடினமானது. இந்த 5 வருடங்களில், `நீ ஏன் இரவு நேரத்தில் வெளியே சென்றாய்’ `நீ இப்படி வழக்கு தொடர்ந்திருக்க கூடாது’ `நீ அவர்களுக்கு வாய்ப்பு தந்திருக்க கூடாது’ என்றெல்லாம் எனக்கு முன்பின் அறிமுகமில்லாத பலபேர் சமூகவலைதளங்கள், செய்திகளில் என் மீது விமர்சனம் வைத்திருக்கின்றனர். நான்தான் பொய் வழக்கு போட்டிருக்கிறேன் என சொன்னவர்களும்கூட இருக்கிறார்கள். இப்படியாக எனக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக நான் குரல் கொடுத்ததற்காக, என்னையே பல பேர் குற்றம் சொன்னார்கள். சொல்லப்போனால், என்னுடைய பெற்றோரையும்கூட குறை சொன்னார்கள். அந்த நேரத்திலெல்லாம், என்னுடைய கண்ணியம் சுக்குநூறாக உடைக்கப்பட்டதை போல உணர்ந்திருக்கிறேன். அந்த நேரத்தில் என் குடும்பமும், நண்பர்களும் எனக்கு துணை இருந்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனாலும் நான் தனிமையில் இருப்பதை போலவே உணர்ந்தேன்.

பல சமயத்தில் இப்படி பேசியவர்கள் முன்னாடியெல்லாம் நின்றுகொண்டு, `என்னை என்னுடைய பெற்றோர் நீங்கள் சொல்வதுபோல வளர்க்கவில்லை’ என்று கத்தவேண்டும் போல இருந்திருக்கிறது. ஆனால் அப்போதுதான், `இப்படி பேசுபவர்கள் எல்லோருக்கும், என்னை மதிப்பிடுவதும், என் கேரக்டரை மதிப்பிடுவதும் ரொம்பவே எளிதாக இருந்தது’ என்பது எனக்கு புரிந்தது. அவர்களால் என்னுடைய தரத்தை மிக எளிதாக – போகிற போக்கில் கீழே தள்ளி மிதித்துவிட்டு போகமுடிந்தது. அந்த நேரத்தில் நான் சமூகவலைதளம் எதிலும் ஆக்டிவாக இல்லை என்பதால், ஓரளவுக்கு அந்த நெகடிவிட்டியிலிருந்து என்னால் தப்பிக்க முடிந்தது. 2019-ல் நான் இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கிய போதும், நேரடியாக எனக்கு மெசேஜ் செய்து `நீ ஏன் அந்த நேரத்தில் அங்கு சென்றாய்’ `உன்னாலெல்லாம் எப்படி வாழமுடிகிறது? போ, போய் தற்கொலை செய்துகொள்’ `நீ செய்துகொண்டிருக்கும் காரியத்துக்கு, இன்னும் மோசமான சம்பவங்களை அனுபவிப்பாய்’ என்று மோசமாக வார்த்தைகளால் என்னை தாக்கியவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

image

என்னுடைய கடந்த 5 வருடங்கள் முழுக்கவே, இப்படியான மோசமான வசைவுகளால்தான் இருந்துள்ளது. இதற்கிடையில் 2020-ல், 15 நாள்களுக்கு நான் நீதிமன்றத்துக்கு செல்லவேண்டிய சூழலும் ஏற்பட்டது. அந்த 15 நாள்களில், என்னிடம் 15 முறை இதுதொடர்பான விசாரணை நடந்தது. விசாரணை நடந்த இறுதிநாளின்போதுதான் நான் `பாதிக்கப்பட்டவள்’ இல்லை. மாறாக `பாதிப்பிலிருந்து மீண்டவள்’ என்பதை உணர்ந்தேன். `நான் எனக்காக மட்டும் போராடவில்லை; மாறாக என்னை போல தனக்கு நிகழ்ந்த அநீதிக்காக குரல் கொடுத்த அனைத்து பெண்ணுக்காகவும் போராடி வென்றிருக்கிறேன்’ என்றும் உணர்ந்தேன்.

அந்த உணர்தலுக்குப் பிறகு, `எனக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைக்காக நானே கேள்வி கேட்டேன்’ என்பதற்காக நானே என்னைப்பார்த்து பெருமைபட்டேன். கடந்த ஜனவரி 10-ம் தேதி, இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் நான் ஒரு பதிவிடவும் செய்திருந்தேன். அதில் சொல்வதையே இப்போதும் சொல்கிறேன். `பாதிக்கப்பட்டவர் என்பதிலிருந்து, மிண்டவர் என்ற இடைப்பட்ட காலத்துக்குட்பட்ட என்னுடைய இந்த பயணம், அவ்வளவு எளிதானதல்ல. இந்த 5 வருடங்களில், என்னுடைய பெயரும் – என்னுடைய அடையாளமும் முழுக்க முழுக்க அடக்குமுறைக்கு உள்ளானது. நான் எந்த தவறும் செய்யவில்லை என்றபோதிலும், பல நேரத்திலும் நான்தான் தண்டிக்கப்பட்டுள்ளேன்.

image

என்னை தூண்டிவிடவும், என்னை பேசாமல் இருக்க செய்யவும், என்னை தனிமைப்படுத்தவும் இங்கு பல விஷயங்கள் நடந்திருக்கிறது. எனக்காக குரல் கொடுக்க வெகுசிலர் மட்டுமே முன்வந்த நேரமும் உள்ளன. இன்று, பலர் எனக்காக குரல் கொடுக்கின்றனர். எனக்கு நிகழ்ந்த அநீதிக்கு குரல் கொடுக்க, நான் மட்டும் தனியாக இல்லை என்று உணர்ந்துள்ளேன். இன்னும் இப்பயணத்தில் நான் போராடுவேன். எனக்காக துணைநின்றவர்களுக்கு என் நன்றியும், அன்பும்.

மீண்டும் சொல்கிறேன். நான் இப்போது பாதிக்கப்பட்டவள் இல்லை. நான், சர்வைவர்!” என்றுள்ளார்.

சமீபத்திய செய்தி: ”விரைவில் இசைப் பயணத்தைத் தொடரலாம்” : ரஹ்மானுக்கு பதிலளித்த இளையராஜா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.