தமிழக அரசு 2022-23 -ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. இதில் என்னவெல்லாம் இடம்பெற வேண்டும்? இதில் உடனடியாக இடம்பெற வேண்டிய அம்சங்கள் என்னென்ன? தங்களுடைய மிக முக்கிய எதிர்பார்ப்புகள் குறித்து விவசாயிகள் சில கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள்.

ஈசன், நிறுவனர், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.

“திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்த மிகவும் முக்கியமான வாக்குறுதிகள் இதுவரையிலும் நிறைவேற்றப்படவே இல்லை.

வழக்கறிஞர் ஈசன்

கொள்முதல் விலையாக கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாய், நெல் குவிண்டாலுக்கு 2,500 ரூபாய் வழங்குவோம் என்றார்கள். தமிழக அரசு கடந்த ஆண்டு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டிலேயே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்து, ஏமாந்துப் போனோம்.

இந்த ஆண்டு தாக்கல் செய்யவுள்ள வேளாண் பட்ஜெட்டிலாவது கண்டிப்பாக இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என நம்புகிறோம். `விவசாயத்திற்கு 24 மணிநேரமும் தங்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும்’ என தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போது பெரும்பாலான நேரம் விவசாயத்திற்கு இருமுனை மின்சாரம்தான் வழங்கப்படுகிறது.

இதனால் `போர்வெல்’ மோட்டார்களை இயக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடுகிறார்கள். 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு இந்த பட்ஜெட்டிலாவது இடம்பெற வேண்டும்.”

ஜீவக்குமார், விவசாய சட்ட ஆலோசகர்.

“ஏற்கெனவே உள்ள நீர்நிலைகளுக்கு புத்துயிர் கொடுப்பதற்கும், புதிய நீர்நிலைகளை ஏற்படுத்துவதற்கும் தமிழக வேளாண் பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நெல் கொள்முதலில் ஆன்லைன் நடைமுறையை கைவிட்டு, ஏற்கெனவே உள்ள நடைமுறையை கடைப்பிடிக்க அறிவிப்பு செய்ய வேண்டும். டெல்டா மாவட்டங்களில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்திற்கான தெளிவான, விரிவான திட்டம் இதுவரையிலும் இல்லை.

ஜீவக்குமார்

இது தொடர்பான அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் நிச்சயம் இடம் பெறும் என எதிர்பார்க்கிறோம். காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக சட்டம் இயற்றப்பட்ட பிறகும் கூட ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி கொண்டிருக்கின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும். வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் கொண்டு வருவதற்கான அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்.”

சுந்தர விமலநாதன், செயலாளர், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்.

“இயற்கை வேளாண்மையை உலகம் முழுவதும் கொண்டு சென்ற நம்மாழ்வாருக்கு நினைவு மண்டபம் அமைத்து அதன் மூலம் பெருமை தேடிக்கொள்ள வேண்டிய பொறுப்பும் கடமையும் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்.

சுந்தர விமலநாதன்

இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி புதிதாக தொடங்கப்படவில்லை. அதேசமயம் நிர்வாக சீர்கேடுகளால் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் பல மூடப்பட்டுள்ளன. எனவே விவசாயிகளின் நலன் கருதி, வருவாய் கிராமங்கள் தோறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட வேண்டும். விவசாயிகளின் உற்பத்தி செலவை குறைப்பதற்கு, நஞ்சில்லாத உணவு உற்பத்தியை பரவலாக்கவும், தமிழக அரசு பசுமை விகடனுடன் இணைந்து, மாவட்டம் தோறும் இயற்கை வேளாண் பயிற்சி வகுப்புகளை நடத்த வேண்டும்.

விவசாயிகளின் ஒட்டுமொத்த பயிர் கடன் தேவையில் 18 சதவிகிதத்தை மட்டும்தான் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வழங்கி வருகின்றன. இதை 36 சதவிகிதமாக இரட்டிப்பு செய்ய வேண்டும். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, விவசாய மின் இணைப்புக்காக பதிவு செய்து, 4,52,000 விவசாயிகள் காத்திருந்தார்கள். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அதில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மீதியுள்ள விவசாயிகளுக்கும் விரைவாக விவசாய மின் இணைப்பு வழங்க வேண்டும்.’’

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.