முதல் படமென்பது நடிகர்களுக்கு ஆசிட் டெஸ்ட் போலதான். வெகு சிலருக்குத்தான் அந்த முதல் வாய்ப்பே ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஒன்றாக மாறும். 1950களில் வெளியான பராசக்திக்குப் பிறகு அப்படி ஒரு பெரிய ஓப்பனிங் அமைந்த அறிமுக நடிகர் கார்த்திதான். பருத்தி வீரன் மூலம் அந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. தமிழ்சினிமாவில் செட்டிலாக சூர்யா எடுத்துக்கொண்ட நேரம் கூட தம்பி கார்த்திக்கு தேவைப்படவில்லை. முதல் படத்திலேயே இறங்கி அடித்தார்.

தாடிக்கு நடுவே கொஞ்சமாக தெரியும் முகம், முறுக்கிய மீசை, இழுத்து இழுத்து பேசும் வட்டார மொழி என முதல் படத்துக்கான தடயமே தெரியாத அளவிற்கு நடிப்பில் உச்சம் தொட்டிருப்பார் கார்த்தி. அப்போது முதன்முதலாக கார்த்தியைப் பார்த்த ரசிகர்கள், ‘கிராமத்துக்காரர் போல’ என நினைக்கும் அளவுக்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். அந்த மெனக்கெடலுக்கான அங்கீகாரமாக அவரது கைக்கு வந்து சேர்ந்தது ஃபிலிம்பேர் விருதும், தமிழக அரசின் விருதும். ஆனால், பருத்தி வீரன் படத்திற்கு முன்னதாகவே, இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்தபோது, அவரது அண்ணன் சூர்யா நடிப்பில் வெளியான ஆயுத எழுத்து படத்தில் சிறிய ரோல் ஒன்றில் நடித்திருப்பார் கார்த்தி. அது தான் அவரது முதல் ஸ்கிரீன் ப்ரசன்ஸ்.

image

காரத்தியை எடுத்துக்கொண்டால் கட்டுடல் மேனியோ, வசீகரமான முகமோ, கால்களை சுழட்றி ஆடும் நடன வித்தையோ அவரிடம் இல்லை. ஆனால், ஒரு கதாபாத்திரத்துக்கு என்ன மீட்டர் தேவையோ அந்த மீட்டரில் கச்சிதமாகப் பொருந்தக்கூடியவர். அப்படித்தான் முத்து கதாபாத்திரத்தில் கூலி வேலைப்பார்க்கும் ஒருவனாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்திருப்பார். படம் க்ளைமேக்ஸை நோக்கி நகர நகர, முத்து கதாபாத்திரம் உருமாறிக்கொண்டு செல்லும். அதற்கான நியாயத்தை சரியாக செய்திருப்பார் கார்த்தி.

முதல் இரண்டு படங்களும் டார்க், எமோஷன் வகையறாவைச் சேர்ந்தவை. ‘இதுக்கு மேல் பாடி தாங்காது’ என்ற நிலையில், ஜாலியான, ரொமாண்டிக் கதையை அவர் தேர்வு செய்துதான் ‘பையா’ படம். அதுவரை, அழுக்கு பனியனையும், முதல் இரண்டு பட்டன்கள் போடாத சட்டையையும் போட்டு நடித்தவருக்கு முதல் முதலாக டெனிம் சட்டை வழங்கப்படுகிறது. கூடவே கார் ஒன்றும். பின் சீட்டில் மனதிற்கு பிடித்த பெண் ஒருத்தி. அதுவரை பார்த்த கார்த்தியிலிருந்து முற்றிலும் வேறான ஒரு கார்த்தியை பையா படத்தில் காட்டியிருந்தார் லிங்குசாமி. பையா படத்தின் பாடல்கள் இந்தியா முழுவதும் ஒலித்தது. அப்போது காலர் ட்யூன்ஸ் பிரபலம். இந்திய அளவில் அதிகமானோர் வைத்த காலர் ட்யூன் ‘துளி துளி மழையாய்’ பாடல்தான் என்றது ஏர்டெல்.

image

கிராமத்து இளைஞராகவும், நகரத்து கூலிதொழிலாளியாகவும், எலைட் யங்க்ஸ்டராகவும் தன்னை மாற்றி அதில் பொருந்தி நடிக்கும் திறன் கார்த்திக்குக் கைகூடிவருவதை ரசிகர்கள் உணர்ந்தனர். ஒவ்வொரு படத்திலும், தன் கதாபாத்திரத்தில் புதுமையைப் புகுத்திப்பார்ப்பது ஒருவரின் கேரியரை மேலும் சுவாரஸ்யமாக்கும். அப்படித்தான் சிறுத்தையில் காவல்துறை அதிகாரியாக களமிறங்கி, டபுள் ஆக்ட்டில் கலக்கினார். தமிழ் ரசிகர்கள் அவரை ஏற்று பெரிய ஹீரோக்கள் மட்டுமே ஆளும் பாக்ஸ்ஆபிஸ் ஏரியாவுக்குக் கொண்டு சேர்த்தனர். சிறுத்தையுடன் விஜய்யின் காவலனும், தனுஷின் ஆடுகளும் வெளியானது. இரண்டையும் முந்தி பொங்கல் வின்னர் ஆனது சிறுத்தை. திரையரங்கம் தாண்டி, தொலைக்காட்சியிலும் சிறுத்தை உறுமல் பல ஆண்டுகள் டீ.ஆர்.பி.க்கு உதவியது.

அடுத்து வடசென்னையிலிருந்து ஒரு காளியாக தனது உரிமையைப் பேசினார் கார்த்தி. அவரது திரைப்பயணத்தில் மற்றொரு முக்கியமான படமாக அமைந்தது மெட்ராஸ். அந்தப் படத்தின் மூலம் சென்னை மக்கள் அவரை நம்ம வீட்டு பிள்ளையாக பார்க்கத்தொடங்கினர்.

மெட்ராஸில் துருதுருவென சுற்றித்திரிந்து சண்டை போட்டுக்கொண்டிருந்தவரை, க்ளீன்ஷேவ் செய்ய வைத்து, ‘ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் இவ்ளோ கேப் கொடுக்கணும்’ ‘குறிப்பா அதிகமா பேசவேக்கூடாது’ என ‘காற்று வெளியிடை’ படத்தில் ஏர்போர்ஸ் பைலட்டாக மாற்றியிருப்பார் மணிரத்னம். மீசையை வேறு ஷேவ் செய்துவிட்டார் மணி. கார்த்தியின் மிகப்பெரிய ப்ளஸே ஒரு மாதிரியான கதாபாத்திரத்தையும், கதையையும் தேடியலையாமல் வித்தியாசத்தை பற்றிக்கொள்வது. அப்படிதான் அமைந்தது தீரன் அதிகாரம் ஒன்று படமும், கைதியும். கார்த்தியின் கரியரின் மிக முக்கியமான ஆக்‌ஷன் படம் நான் மகான் அல்ல. அதையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

image

ஒருகட்டத்தில் அவர் பேமிலி ஆடியன்சை நோக்கி நகர ஆரம்பித்தார். கடைக்குட்டி சிங்கம், கொம்பன், தம்பி, தோழா, சகுனி, உள்ளிட்ட படங்கள் அவருக்கு பேமிலி ஆடியன்ஸை பெற்று தந்தன. கார்த்தியைப் பொறுத்தவரை அவருக்கான ரசிகர்கள் கூட்டம் என்பது பி மற்றும் சி ஆடியன்ஸ் தான். இதன்காரணமாகவே கார்த்தி நடித்த படங்களை தியேட்டர் விநியோகஸ்தர்கள் போட்டிப்போட்டுக்கொண்டு எடுக்க ஆரம்பித்தனர்.

இடையில் அலெக்ஸ்பாண்டியன், ஆல் இன் ஆல் அழகுராஜா, பிரியாணி, காஷ்மோரா, தேவ், படங்களை அவர் தவிர்த்திருக்கலாம் என்றாலும், அவரது பிலிமோகிராபியை எடுத்துப்பார்த்தால் அது ஒரு வளைந்து நீண்ட வில்லைப்போலத்தான் இருக்கும். அலெக்ஸ்பாண்டியனுக்கு பிறகு மெட்ராஸில் நடித்தார். தேவ் படத்துக்கு பிறகு கைதியை தேர்ந்தெடுத்தார். ஒரே இயக்குநரிடம் இரண்டு படங்களில் பணியாற்றாத தனது கொள்கையை ‘விருமன்’ ‘பொன்னியின் செல்வன்’ படங்களின் மூலம் தளர்த்திருக்கிறார்.

image

கமர்ஷியல் ரூட், கண்டெண்ட் ரூட் என இரண்டு பாதைகள் தமிழ் சினிமாவுக்கு உண்டு. இரண்டிலுமே தவிர்க்க முடியாத நடிகராகக் கார்த்தியைச் சொல்லலாம்.

15 ஆண்டுகள் என்ன ப்ரோ… நீங்கள் தொடப்போகும் உயரங்களும், போகப்போகும் பாதையும் பெரியது; நீண்டது. வாழ்த்துகள்!

சமீபத்திய செய்தி: ‘ஆண்களை குறைசொல்ல முடியாது… ஆனால்’ – நடிகர் மாதவன் பேசிய சமத்துவம்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.