பிக் பாஸ் டீமின் எடிட்டிங் திறமை பற்றி பலமுறை நான் வியந்து குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அல்டிமேட் சீஸனில் ஏனோ சொதப்புகிறார்கள். பெரும்பாலோனோரால் 24×7 ஸ்ட்ரீமெங்கை நிச்சயம் பார்க்க முடியாது. தினசரி இரவு அப்டேட் ஆகும் மெயின் எபிசோடை மட்டுமே பலரால் காண இயலும். ஆனால் இதில் முக்கியமான நிகழ்வுகளில் சில சரியாக கோர்க்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு நேற்றைய எபிசோடில் பாலாஜி டிரெண்டிங் பிளேயர் ஆனது, அபிராமி மற்றும் சுருதிக்கு தரப்பட்ட ‘இரட்டையர் தண்டனை’ போன்ற காட்சிகள் திடீரென இடையில் வந்தன. ப்ரமோக்களைப் பார்த்தால் மட்டுமே இவை சற்று புரியும். இந்த மாதிரியான குளறுபடிகளை பிக் பாஸ் எடிட்டிங் குழு சரி செய்ய வேண்டும். “நான் வீட்டுக்குப் போகணும். என்னை எல்லோரும் கார்னர் பண்றாங்க” என்று வாக்குமூல அறையில் வனிதா அழுததுதான் நேற்றைய ஹைலைட். வனிதாவைப் பார்க்க கொஞ்ஞூண்டு பரிதாபமாகத்தான் இருந்தது. ஆனால் “பேச்சாடா… பேசின?!” என்கிற டயலாக்தான் மைண்டில் ஓடியது. அத்தனை கடுமையான வசைகளை மற்றவர்களின் மீது இறைத்து அவர்களின் மனங்களைப் புண்படுத்தியதெற்கெல்லாம் யார் பொறுப்பு? கோபம், அகங்காரம், திமிர் போன்றவையெல்லாம் உள்ளார்ந்த அச்சத்தின் வெளிப்பாடுகள். வெளிப் பார்வைக்கு வீறாப்பாக உலவும் பல ஆசாமிகள் உள்ளே பயத்திலும் பதட்டத்திலும் இருக்கிறார்கள் என்றே பொருள். வனிதா தனிமையில் அழுதது இதைத்தான் காட்டுகிறது.

நாள் 23-ல் நடந்தது என்ன?

ஒரு டாஸ்க்கில் பங்கு பெறுவதற்காக நிரூப் பணிவாக அழைக்க, வழக்கம்போல் காட்டமாக மறுத்து விட்டார் வனிதா. “சும்மா.. சும்மா வந்து கேட்காத. என்னால விளக்கம் சொல்ல முடியாது. இந்த உலகத்தில் யாராலயும் என்னை கட்டாயப்படுத்த முடியாது. இந்த கேம் உங்களுக்கு வேணா பெரிசா இருக்கலாம்.. எனக்கு இல்ல” என்று எரிச்சலுடன் நிரூப்பை துரத்தி விட்டார் வனிதா. “நான் யாரு.. எங்க இருக்க வேண்டிய. என் கெரகம்”.. என்கிற ரேஞ்சிற்கு தன்னை கருதிக் கொண்டிருக்கும் வனிதா, ஏன் இந்த கேம் ஷோவிற்குள் வந்தார் என்று தெரியவில்லை.

“நான் யாரு.. எங்கே இருக்க வேண்டியவ.. என் கெரகம்”

பிறகு பாலாஜியை ஏவலாளி போன்ற தொனியில் ‘இங்க வா..” என்று அழைத்த வனிதா “இந்த M……ராண்டிக. எல்லாம். யாரு.. நூத்தியெட்டு நொட்டு சொல்றான்ங்க.. ஏதோ கமல் சார் மூஞ்சிக்குத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இவங்க… மூஞ்சிக்காகவா வந்தேன்?’ என்றெல்லாம் சக போட்டியாளர்களைப் பற்றி ஏக வசனத்தில் எகிறித் தள்ளினார்.

வனிதாவின் இப்போதைய மனச்சிக்கல் இதுதான். கேப்டன்சி டாஸ்க்கில் தனக்கு அனைவருமே குறைந்த மதிப்பெண் அளித்தார்கள் என்கிற கோபத்தில் மேடம் இருக்கிறார். “இந்த மார்க்கை நம்பி நான் வரலே.. இந்த மார்க்குல்லாம் எனக்கு முக்கியமில்ல” என்று கமல் எபிசோடில் கெத்தாக சொல்லி விட்டு பின்பு அதைப் பற்றியே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருக்கும் வனிதாவைப் பார்க்கும் போது, தன்மையில் கண்ணாடி முன்பு நின்று அழும் ‘ரவுடி’ விவேக் காமெடி காட்சிதான் நினைவிற்கு வருகிறது.

வனிதா

தலைவர் போட்டியின் இறுதிக்கட்டம். ஷாரிக் வெளியேறி விட்டதால் அடுத்த நிலையில் இருக்கும் தாமரைக்கும் பாலாவிற்கும் இடையே போட்டி நடக்கும். அதே ‘பொம்மை’ போட்டிதான். ஆனால் விதிமுறைகள் வேறு. ‘யார் தலைவராக வர வேண்டும்?’ என்கிற அடிப்படையில் வீடு இரண்டாகப் பிரிய வேண்டும். பாலா மற்றும் தாமரையின் பொம்மைகள் தனித்தனியாக தொட்டிலில் இருக்கும். ஒரு அணி, இன்னொரு அணியின் பொம்மையை யாரும் பார்க்காத நேரத்தில் திருடினால் அந்த அணி ஆதரவளிக்கும் நபர் தலைவராகி விடலாம். யாராவது பார்த்து விட்டால் பொம்மையை திருப்பி வைத்து விட வேண்டும். இதுதான் ரூல்.

தாமரைக்கு வனிதா, சிநேகன், ஜூலி போன்றவர்கள் ஆதரவு. பாலாவிற்கு நிரூப், அனிதா, சுருதி போன்றவர்கள் ஆதரவு. இந்தப் போட்டியில் தொண்டர்களுக்குத்தான் அதிக வேலை. தலைவர் ‘ஹாயாக’ உட்கார்ந்திருக்கலாம். (வெளியே நடக்கும் தேர்தலும் அப்படித்தானே?!). இரண்டு அணிகளும் கொட்டக் கொட்ட இரவில் விழித்திருந்தார்கள். “எள்ளுதான் வெயில்ல காயணும். எலிப்புழுக்கை எதுக்கு காயணும்?” என்று அவர்களின் மைண்ட் வாய்ஸ் ஓடினாலும் தரப்பட்டிருக்கும் டாஸ்க்கை முடித்தாக வேண்டுமே?

சிநேகன் – வனிதா

“நிரூப் அபிராமியை வெச்சு நல்லா டிராமா பண்றான். இந்த வீட்டில் எல்லோருமே ஃபேக்கா இருக்காங்க” என்று சிநேகனிடம் அனத்திக் கொண்டிருந்தார் வனிதா. இன்னொரு சமயத்தில், தனக்கு குறைவாக மதிப்பெண் அளிக்கப்பட்டதைப் பற்றியும் புலம்பினார். (ஓஹோ. அப்ப இதுதான் மேடத்திற்கு பிரச்சினையா?!) “நான் ஜூலியோட பொருட்களை திரும்ப வாங்கிக்கிட்டதைப் பத்தி அனிதா வந்து புகார் சொன்னா.. அது எங்க ரெண்டு பேர் நடுவுல இருக்கற விஷயம்” என்று சிநேகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார் வனிதா.

பிக் பாஸ் வீட்டில் எதுவுமே ‘பர்சனல் இல்லை’. ஜூலியை பொதுவில் வைத்து ‘உன்னையெல்லாம் உள்ளே விட்டதே தப்பு’ என்பது முதல் டிசைன் டிசைனாக திட்டி விட்டு “அது எங்க ரெண்டு பேருக்குள்ள” என்று வனிதாவால் எப்படித்தான் அபத்தமாக லாஜிக் பேச முடிகிறதோ? அதிலும், ‘நான் கொடுத்த பொருட்களையெல்லாம் திருப்பிக் கொடு’ என்பதையெல்லாம் இந்தக் காலத்தில் எல்கேஜி பிள்ளைகள் கூட செய்வதில்லை.

“நிரூப்பு.. உன் பிரச்னைதான் என்ன?,”

இன்னொரு பக்கம், கெளதம் வாசுதேவன் படம் மாதிரி நிரூப்பும் அபிராமியும் தனியாக உட்கார்ந்து ஆங்கில உரையாடல்களில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார்கள். “பழைய அபிராமியை எனக்கு நல்லாத் தெரியும். ஏன் அப்படி என்கூட பேச மாட்டேன்றே?” இது நிரூப்பின் கேள்வி. “முன்னாடி நீ பாய் பிரெண்டா இருந்தே. இப்ப இல்லை. அந்த மாற்றம் நிச்சயமா இருக்கும். புரிஞ்சுக்கோ.. ஆனா உன் கிட்ட பேசிட்டுதானே இருக்கேன்” என்பது அபிராமியின் விளக்கம். “இருந்தாலும் நீ என் கிட்ட சரியா பேசறதில்லை” என்று நிரூப் மறுபடி மறுபடி கேட்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தார். அபிராமி கேட்கும் அதே கேள்விதான் நம் மைண்டிலும் வந்தது. “ஏம்ப்பா.. நிரூப். உன் பிரச்னைதான் என்ன?”

நிரூப் – அபிராமி

இரண்டு அணிகளும் பொம்மைகளை வைத்து இரவு முழுக்க தேவுடு காத்துக் கொண்டிருந்ததில் விடிந்தே விட்டது. ‘எவ்வளவு நேரம்தான் இந்த டாஸ்க்கை இழுப்பது?’ என்று இரு அணிகளுக்குமே சலிப்பு வந்து விட்டது. ‘தலைவர்’ போட்டியில் இருக்கும் பாலா உள்ளே நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் நிரூப் ஒரு காரியம் செய்தார். எதிரணி சற்று அசந்திருக்கும் நேரம் பார்த்து அவர்களின் கண் எதிரேயே பொம்மையைத் தூக்கிக் கொண்டு ஓட “நாங்க.. பார்த்துட்டோம். இது செல்லாது” என்று ஜூலியும் பாலாஜியும் ஒருசேர கத்தினார்கள். என்றாலும் “காமிரா கிட்ட காண்பிச்சுப் பார்ப்போம். பிக் பாஸ் ஒருவேளை ஓகே சொல்லலாம்” என்கிற நப்பாசை நிரூப்பிற்குள் இருந்தது. ஆனால் இந்த அசட்டு சாகச முயற்சியை பிக் பாஸ் நிராகரித்து விட்டார்.

“நைட்ல இருந்து நாங்க விடிய விடிய காவல் காத்துக்கிட்டு உக்காந்திருக்கோம். நீங்க பாட்டுக்கு திடீர்னு கேமை ஸ்பாயில் செஞ்சா எப்படி? நான் விளையாட வரலை” என்று சிநேகன் கோபித்துக் கொள்ள “அண்ணே.. இல்லண்ணே.. சும்மா ஒரு முயற்சி செஞ்சு பார்த்தேன்.. அதான் ரிஜக்ட் ஆயிடுச்சே” என்று நிரூப் கெஞ்சியும் சிநேகன் இறங்கி வரவில்லை. சிநேகனைப் பார்த்து ஜுலியும் கோபம் கொண்டு “நானும் விளையாட வரலை.. தூங்கப் போறேன்” என்று கிளம்பி விட்டார். நிரூப் மற்றவர்களிடம் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு வாசல் வழியாக வந்த ஜூலி எதிரணியின் பொம்மையை நைசாக எடுத்து காமிரா முன் தெரிவித்து விட்டார். இதனால் அவர்களின் அணி வெற்றி பெற்று தாமரை வீட்டின் தலைவர் ஆனார்.

BB Ultimate

ஜூலி ஜாலியாக செய்த PRANK

“விளையாட வரலை” என்று கோபத்துடன் கிளம்பிய ஜூலி, இப்படி ஏமாற்றியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிரூப், இதைப் பற்றி ஜூலியிடம் விசாரிக்க “நான் Prank பண்ணேன்” என்று ஜாலியாக கூறினார் ஜூலி. இதனால் எரிச்சல் ஆன நிரூப், ‘பொய்யன்’ என்று பொருள் வரும்படியான ஒரு லோக்கல் வார்த்தையால் ஜூலியை விளித்து விட்டார். இது பின்னால் பிரச்சினையானது. ‘நிரூப் என்னிடம் மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்று ஜூலி பிராது கொடுக்க பஞ்சாயத்து கூடியது. “நீ ஏமாத்தி ஜெயிச்சதுலாம்.. எனக்குப் பிரச்சினையில்ல. ஆனா ‘விளையாட வர மாட்டேன்.. தூங்கப் போறேன்.. ன்னு சொல்லிட்டு பொம்மையை எடுத்தது.. எல்லாமே ஆரம்பத்துல இருந்து பிளானா?” என்று கேட்டு உறுதிப்படுத்திக் கொண்ட நிரூப் “நான் அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமத்தான் சொன்னேன்.. அது வெளில நான் அடிக்கடி பயன்படுத்தற வார்த்தை. பொய் சொல்றவங்களை அப்படிச் சொல்வாங்க” என்று விளக்கம் அளித்து விட்டு மன்னிப்பு கேட்க பிரச்னை முடிவிற்கு வந்தது.

ஜூலி

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். “அந்த வீடியோல அஞ்சு செகண்ட் முன்னாடி ஓவியா சொன்னா… அது இருக்கு சார்..” என்று முதல் சீசனில் அழும்பு செய்த ஜூலி இன்னமும் பெரிதாக மாறவில்லை என்றே தோன்றுகிறது. ஜூலி கோபித்துக் கொண்டு விளையாடாமல் போன விஷயம் வரைக்கும் உண்மையாக இருக்கும். ஆனால் அதற்குப் பிறகு திடீர் என்று மனதை மாற்றிக் கொண்ட ஜூலி, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு பொம்மையைத் தூக்கிவிட்டார். ஆனால் இப்படி சட்டென்று திட்டமிட்ட விஷயத்தை “முதல்ல இருந்தே பிளானா?,” என்று நிரூப் விசாரிக்கும்போதும் “:ஆமாம்..” என்று ஜூலி மழுப்பும் போதே அதில் உண்மையில்லை என்று தெரிகிறது.

‘டுபாக்கூர்’ என்கிற வார்த்தையை நிரூப் உபயோகித்திருக்கலாம். நிரூப் சொன்னது தவறுதான். ஆனால் இதற்கு பஞ்சாயத்து கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிற ஜூலி, வனிதாவின் அத்தனை கடுமையான வசைகளுக்கு என்ன செய்தார் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

“என்னை எல்லோரும் கார்னர் பண்றாங்க பிக் பாஸ்”

விடிந்தவுடன் வாக்குமூல அறைக்குச் சென்ற வனிதா, பிக் பாஸிடம் ஒரு நீளமான புலம்பலை நிகழ்த்தினார். “என்னை இங்க எல்லோரும் கார்னர் பண்றாங்க. டார்கெட் பண்றாங்க.. இங்க க்ருப்பிஸம் இருக்கு. எல்லோருமே பொய்யா இருக்காங்க. கேம் தெரிஞ்சுதான் வந்தேன். இருந்தாலும் மூன்று வாரத்திற்கு மேல முடியல. என் பெயரை வெச்சு இவங்க பப்ளிசிட்டி தேடறாங்க. போன சீசன்ல நல்ல பெயரோட போனேன். (எதே?!) என்னை பல பெண்கள் முன்னுதாரணமா நினைக்கறாங்க. அந்தப் பெயர் இப்ப கெட்டுடும் போல இருக்கு.” என்றெல்லாம் வனிதா புலம்பியதை பொறுமையாகக் கேட்ட பிக்பாஸ், “காலைல ஏதாச்சும் சாப்பிட்டீங்களா?” என்று கேட்டார். “வயசான காலத்துல பிரஷரா இருக்கும். சாப்பிடுங்க. சரியாயிடும்” என்பதுதான் அதன் பொருள் போலிருக்கிறது.

“இல்ல பிக்பாஸ். நான் வீட்டுக்குப் போறேன்.. இந்த பாலாஜி பய கூட என்னை எதிர்த்துப் பேச ஆரம்பிச்சிட்டான்.” என்று வனிதா அழுது புலம்ப “நம்பிக்கையா இருங்க. நல்லாத்தான் விளையாடறீங்க.. எல்லாமே முதல் பிரச்னை. முதல் தீர்வு’ என்று பிக் பாஸ் ஆறுதல் சொல்ல, அதைப் பிடித்துக் கொண்ட வனிதா “ஓகே. உங்க மூஞ்சிக்காக இன்னும் கொஞ்ச நாள் பார்க்கறேன்.. இல்லைன்னா திரும்பி வருவேன். ஓகேவா..?” என்று உத்தரவாதம் வாங்கிக் கொண்டு கிளம்பினார். டாஸ்க் விளையாட மறுப்பது உள்ளிட்ட பல அழிச்சாட்டியங்களை வனிதா செய்தாலும், ஷோவின் சர்ச்சைக்கு வனிதா முக்கியம் என்பதால் பிக் பாஸ் பொறுமை காத்துத்தான் ஆக வேண்டும்.

வனிதா

வனிதா முதல் அனிதா வரை அனைவருமே நாமினேஷன்

இந்த வாரத்திற்கான நாமினேஷன் சடங்கு தொடங்கியது. வீட்டின் தலைவர் தாமரையை நாமினேட் செய்ய முடியாது. அதைப் போலவே ட்ரெண்டிங் பிளேயரான பாலாவையும் நாமினேட் செய்ய முடியாது. ஒவ்வொருவரும் மூன்று நபர்களை நாமினேட் செய்ய வேண்டும். முதலில் வந்த வனிதா “சில பேர்களை நாமினேட் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டதால….” என்று ஆரம்பித்தார். எனில் அவரின் கொலைவெறி டார்க்கெட்டுகள் பாலா மற்றும் தாமரை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது. நிரூப், அபிராமி, சுருதி ஆகிய மூவரையும் நாமினேட் செய்தார் வனிதா. “பெண்களின் எமோஷன்களை வைத்து நிரூப் விளையாடுகிறார். நண்பர்களின் உதவியால் அபிராமி எஸ்கேப் ஆயிட்டே இருக்காங்க. ஒருமுறை மக்களை சந்திக்கட்டும். சுருதி சேஃப் கேம் ஆடறாங்க” என்பது வனிதா சொன்ன காரணம்.

பாலா

அபிராமிக்கு வனிதா சொன்ன காரணத்தையே பின்னர் வந்த பலரும் சொன்னார்கள். ‘ஒரு முறை நாமினேட் ஆகி வரட்டும்’ என்பது. பரஸ்பரம் ஒருவரையொருவர் ரகளையாக குத்தியதால் வனிதா முதல் அனிதா வரை வீட்டில் உள்ள அனைவருமே – பாலா, தாமரை தவிர – எவிக்ஷன் லிஸ்ட்டிற்கு வந்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை தொகுத்தளிக்க இனி கமலும் இல்லை. வீட்டின் உள்ளே சுவாரசியமும் அதிகமில்லை. ஒரே ரணகளச் சண்டை. அல்டிமேட் சீஸன் முடிவதற்குள் நாம் பாயைப் பிறாண்ட ஆரம்பித்து விடுவோம் போலிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.