தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, எட்டயபுரம், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கயத்தார், ஸ்ரீவைகுண்டம் ஆகிய தாலுகாக்கள்ல 1.70 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது. கம்பு, பாசி, உளுந்து, சின்ன வெங்காயம், மக்காச்சோளம், மிளகாய், கொத்தமல்லி ஆகிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இந்தாண்டு ஆரம்பத்தில் மழை பெய்யாததாலும், பின்னர் வடகிழக்குப் பருவமழை அதிகமாகப் பெய்ததாலும் நன்கு வளர்ந்த நிலையிலுள்ள பயிர்கள் மழை நீரில் மிதந்தன.

மிளகாய் வத்தல்

எஞ்சியுள்ள பயிர்களைக் காப்பாற்றியும் போதிய விளைச்சல் இல்லை. ஏக்கருக்கு 3 முதல் 6 குவிண்டால் மகசூல் கிடைத்து வந்த மிளகாய், இந்தாண்டு ஒரு குவிண்டாலுக்கும் குறைவாகவே கிடைத்துள்ளது. ஒரு குவிண்டால் மிளகாய் வத்தல் ரூ.40,000-க்கு விலை போகும் நிலையில், விலைக்கேற்ற விளைச்சல் இல்லாததால் கவலை அடைந்துள்ளனர் விவசாயிகள்.

இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வரதராஜனிடம் பேசினோம். “விளாத்திகுளம் சுத்து வட்டாரப் பகுதியில 10,000 ஹெக்டேர் பரப்பளவுல மிளகாய் சாகுபடி நடந்துட்டு வருது. நீளச் சம்பா மிளகாயை விட, முண்டு மிளகாய்னு சொல்லுற உருண்டை மிளகாய்தான் அதிகமா சாகுபடி செய்யப்படுது. விளாத்திகுளம்னாலே முண்டு வத்தலைத்தான் அடையளாமா சொல்லுவாங்க. இந்த வருஷம் ரபி பட்டத்தின் தொடக்கத்துல விதைச்சும், மழை பெய்யாததுனால ரெண்டாவது தடவை உழுது விதைச்சோம். ஆனால், பயிர்கள் வளர்ந்தும் கருகிப்போச்சு. நம்பிக்கையைத் தளரவிடாம மூணாவது முறையாவும் விதைச்சோம்.

வரதராஜன்- கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தின் தலைவர்

மழைக்கஞ்சி, ஒப்பாரி, கொடும்பாவி எரித்தல்னு மழை பெய்யுறதுக்கான வழிபாடுகளைச் செஞ்சோம். மழையும் பெய்ஞ்சுது. பயிர்கள் ஓரளவு வளர்ந்த நிலையில அதிகமாப் பெய்ஞ்ச வடகிழக்குப் பருவமழையால எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம் சுத்து வட்டாரப் பகுதிகள்ல மழைநீர் தேங்கி நின்னுச்சு. மழைநீர் தேங்கி நின்ன இடங்கள்ல வடிகால்களோ, தாழ்வானப் பகுதிகள்ல பாலங்களோ இல்ல. இருக்கன்குடி அணைக்கட்டின் கால்வாய்களை சீரமைச்சா மட்டும்தான் மழைநீர் தேங்காம இருக்கும்.

தூர்ந்து போன இடங்கள்ல வடிகால்கள், தாழ்வான பகுதிகள்ல தரைப்பாலம் அமைத்திட அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் இல்ல. ஒவ்வொரு மழையின் போது மழை நீர் தேங்குறதும், பயிர்கள் மழைத் தண்ணியில மிதக்குறதும் அதைப்பார்த்து நாங்க கண்ணீரு விடுறதும் வாடிக்கையாப் போச்சு. அந்த மழையினால 10,000 ஹெக்டேர்ல 3,000 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த மிளகாய்ச் செடிகள் அழிஞ்சு போச்சு. மீதமிருந்த 7,000 ஹெக்டேரில் பயிரிட்டிருந்த மிளகாய்ச் செடிகள் போதிய தண்ணீர் கிடைக்காமல் வாடிய நிலையில இருந்துச்சு.

காய வைக்கப்பட்ட சம்பா மிளகாய்

இருக்குறதையாவது காப்பாத்தணும்னு பக்கத்துல இருக்குற ஊருணியில இருந்து மோட்டார் மூலமாவும், மினி தண்ணீர் லாரி மூலமாவும் தண்ணீர் பாய்ச்சினாங்க. தண்ணி பாய்க்கிற வசதியில்லாதவங்க எப்படியும் போட்டும்னு அப்படியே விட்டுட்டாங்க. வளர்ச்சியும், மகசூலும் சொல்லிக்கிற மாதிரி இல்ல. ஒரு ஏக்கருக்கு மூணுல இருந்து ஆறு குவிண்டாலுமா கிடைச்சுக்கிட்டிருந்த மகசூலு, இந்த வருசம் அதிக பட்சமா ஒன்றரை குவிண்டால்தான் கிடைச்சிருக்கு.

பெரும்பாலான விவசாயிங்களுக்கு ஒரு குவிண்டால் கூடக் கிடைக்கல. இதை வித்தா என்ன மிஞ்சும்? போன வரும் ஒரு குவிண்டால் மிளகாய் வத்தல், 23,000 ரூபாய்ல இருந்து அதிகபட்சமா 26,000 ரூபாய் வரைக்கும் விலை போச்சு. இந்த வருசம் ஒரு குவிண்டால், 40,000 ரூபாய் முதல் 42,000 வரைக்கும் விலை போயிக்கிட்டு இருக்கு. நல்ல விலை இருந்தும் போதிய விளைச்சல் இல்லேன்னு நினைக்கும் போதுதான் வருத்தமா இருக்கு.

மிளகாய் வத்தல்

வருசத்துக்கு ஒரு தடவை மட்டுமே மிளகாயை சாகுபடி செய்ய முடியும்கிறதுனால பல விவசாயக் குடும்பங்களுக்கு இந்த வருசம் பெருத்த ஏமாற்றம்தான். ரெண்டு வருசமா பட்ட கடனை இந்த வருசம் அடைச்சுடலாம்னு நினைச்சோம். ஆனா, அதுக்கு இயற்கை கை கொடுக்கல. கடந்த 2020-2021-ல் செலுத்திய கொத்தமல்லி, சின்ன வெங்காயம், மிளகாய்க்கு பயிர் காப்பீடுத் தொகையும் இன்னும் வரவில்லை. எனவே, அரசு நிலுவையிலுள்ள பயிர்க்காப்பீட்டுத் தொகையை வழங்கிட நடவடிக்கை எடுக்கணும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.