சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த உத்தரவை நாளை மறுநாள் முதல் அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதை தடுக்க, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை நாளை மறுநாள் முதல் அமல்படுத்த தமிழக வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வனவிலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013ம் ஆண்டு சத்தியமங்கலம் விலங்குகள் சரணாலயம் என்பது, புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்த சரணாலயத்தில் புலிகள் மட்டுமல்லாமல், சிறுத்தை, யானை, மான், காட்டெருமை போன்ற விலங்குகளும் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனுதாரர், சரணாலயத்தின் வழியே பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் மோதி வனவிலங்குகள் பலியாவதாக குறிப்பிட்டுள்ளார்.

24 மணி நேரமும் கனரக வாகனங்களும், இலகு ரக வாகனங்களும் என ஒரு நாளைக்கு 5000 வாகனங்கள் வரை இந்த சாலையில் செல்வதாகவும், கடந்த 2012 முதல் 2021ம் ஆண்டு வரை 8 சிறுத்தை, ஒரு யானை, 71 மான்கள், 55 மயில்கள் என 155 வன விலங்குகள் வாகனங்கள் மோதி பலியாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.

அதனால் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வானங்கள் போக்குவரத்துக்கும், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பிற வாகனங்கள் போக்குவரத்துக்கும் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

image

இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வனத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து 2019ல் ஈரோடு ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், மக்கள் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தவில்லை என்றும், ஏற்கனவே இதுசம்பந்தமான வழக்கில் உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்களின் கூட்டம் நடத்தி சுமூக தீர்வு காண உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மக்கள் எதிர்ப்பு காரணமாக, மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்தவில்லை என்ற வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார் என்ற போதும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும், அதை மீறுவோரின் பெயர் பட்டியலை அளிக்கவும் உத்தரவிட்டனர்.

image

மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை அமல்படுத்தாததால் ஏற்பட்ட விலங்குகளின் மரணத்துக்கு வனத்துறை அதிகாரிகளை ஏன் பொறுப்பாக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உத்தரவை அமல்படுத்த முடியவில்லை என்றால் ஊதியம் எதற்கு? என்றும், வனத்துறை அதிகாரிகள், வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கவே நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதித்த உத்தரவை நாளை மறுநாள் (10ம் தேதி) முதல் அமல்படுத்த வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்ட நீதிபதிகள், இதுவரை இந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்தது ஏன் என விளக்கமளிக்கவும் வனத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.