இ-காமர்ஸ் உலகின் இளம் புயல் `கேத்ரீனா லேக்-ன் (Katrina Lake) இ-காமர்ஸ் முன்னோடிகள் யார்?’ என்றதும் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசும், அலிபாபா நிறுவனர் ஜேக் மா-வும், பிளிப்கார்ட் நிறுவனர்களும் தவறாமல் நினைவுக்கு வருவார்கள். உண்மையில் இவர்களின் இந்த வரிசையில், இளம் நிறுவனர் கேத்ரீனா லேக்கையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். இன்னும் சரியாக சொல்வதானால், ஜெப் பேசோசுக்குப்பிறகு இ-காமர்சில் அடுத்த கட்ட பாய்ச்சலை ஏற்படுத்தியவர் என கேத்ரீனாவை வர்ணிக்கலாம்.

பேஷனையும், தொழில்நுட்பத்தையும் இணைத்து, பெண்கள் ஆடைகளை வாங்கும் விதத்தை இவர் மாற்றி அமைத்திருக்கிறார். அந்த வகையில் இவரது ஸ்டிச் பிக்ஸ் (Stitch Fix) நிறுவனம், திரைப்படங்களை பார்க்கும் விதத்தை மாற்றி அமைத்த நெட்பிளிக்ஸ் மற்றும் இசையை கேட்பதில் தொழில்நுட்பத்தை கொண்டு வந்த பேண்டோரா ஆகிய சேவைகள் இணைந்த கலைவை எனலாம்.

கேத்ரீனா லேக் பற்றியும், இ-காமர்ஸ் உலகில் அவர் செய்திருக்கும் புதுமையையும் பார்ப்பதற்கு முன், நிக்கோலஸ் நெக்ரபோன்டே பற்றியும் அவரது டெய்லி மீ பற்றியும் தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். நெக்ரபோன்டே கம்ப்யூட்டர் விஞ்ஞானி, எம்.ஐ.டி., மீடியா லேப் இணை நிறுவனர், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லேப்டாப் திட்ட நிறுவனர் என பல விதமான பெருமைகளையும், அடையாளங்களையும் கொண்டவர். எல்லாவற்றையும் விட, வருங்காலத்தில் எல்லாம் டிஜிட்டல்மயமாகும்என்பதை கணித்துச்சொன்ன முன்னோடிகளில் ஒருவராக அமைகிறார்.

எல்லாம் டிஜிட்டல்மயம்!

1995 ம் ஆண்டில் நெக்ரபோன்டே எழுதிய பியிங் டிஜிட்டல் புத்தகத்தில், அனலாக் யுகத்தில் இருந்து டிஜிட்டல் யுகத்திற்கு உலகம் மாறிக்கொண்டிருப்பதை துல்லியமாக விவரித்திருந்தார். நெக்ரபோன்டேவின் டிஜிட்டல் தீர்கதரிசனம் பற்றியே விரிவாக குறிப்பிடலாம் என்றாலும், இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிடும் எண்ணற்ற புதுமைகளில் ஒன்றான டெய்லி மீ கருத்தாக்கம் பற்றி மட்டும் இப்போது கவனம் செலுத்தலாம்.

image

ஒவ்வொருவரின் ரசனைக்கும் ஏற்ற தனிப்பட்ட இணைய நாளிதழ் எனும் சிந்தனையின் அடிப்படையில் நெக்ரபோன்டே டெய்லி மீ (Daily ME) கருத்தாக்கத்தை முன் வைத்தார். அதாவது இணைய யுகத்தில் செய்திகளை இணைய வடிவில் வாசிக்க முடியும் என்பது மட்டும் அல்ல, வாசகர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிப்பட்ட இணைய நாளிதழை வடிவமைத்துக்கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படை. நியூ மீடியா என்று சொல்லப்படும், புதிய ஊடகத்தின் தனித்தன்மையான அம்சங்களில் ஒன்றாகவும், இந்த தனிப்பட்ட இணைய நாளிதழை கருதலாம்.

இதே முறையில் பெண்கள் ஆடைகள் வாங்குவது தரவுகள் துணையோடு தனிப்பட்ட தன்மை கொண்டதாக உருவாக்கினால் எப்படி இருக்கும்…? இந்த யோசனையிலிருந்து பிறந்த கேத்ரீனா லேக்கின் ஸ்டிச் பிக்ஸ் இதை தான் செய்கிறது. அதாவது, ஆன்லைனில் ஆடைகள் வாங்கும் வசதியை அடுத்த கட்டத்திற்கு ஸ்டிச் பிக்ஸ் கொண்டு வந்துள்ளது. இந்த இடத்தில் இசை கேட்பு சேவையான பேண்டாரா தன்மையை நினைத்துப்பார்ப்பதும் பொருத்தமாக இருக்கும்.

பேஷனில் புதிய பாதை

பேண்டோரா-வை (PANDORA) குறிப்பிட்டு சொல்லக் காரணம், அது அடிப்படையில் இசை பரிந்துரை சேவை. ரசிகர்கள் விரும்பி கேட்கும் பாடல்களை கொண்டு அவர்கள் விரும்பி கேட்க கூடிய பாடல்களை தரவுகளை கொண்டு பரிந்துரைப்பதே பேண்டோராவின் தனித்தன்மை. மற்றபடி ரசிகர்கள் கேட்க வாய்ப்பில்லாத, ஆனால் நிச்சயம் அவர்களுக்கு பிடித்திருக்க கூடிய பாடல்களை பேண்ட்ரோரா பரிந்துரை செய்கிறது. நெட்பிளிக்சும் இதை திரைப்படங்களுக்குச் செய்கிறது.

எல்லாவற்றுக்கும் டேட்டா எனும் தரவுகள் தான் அடிப்படை. இ-காமர்ஸ் உலகிலும், பேஷன் சந்தையிலும் தரவுகள் பயன்பாடு வந்துவிட்டாலும், இவை பெரும்பாலும் விற்பனை நோக்கில் பயனாளிகள் விருப்பங்களை புரிந்து கொள்வதன் அடிப்படையிலேயே அமைகிறது. ஆனால், கேத்ரீனா லேக், பயனாளிகளுக்கு ஏற்ற தனிப்பட்ட ஆடை தேர்வுகளை மேற்கொள்ள தரவுகளை பயன்படுத்தியதோடு, நெட்பிளிக்ஸ் பாணியில் ஆடைகள் பயனாளிகளை தேடி வரவும் செய்தார். இவை எல்லாமும் சேர்ந்து தான் அவர் உருவாக்கிய ஸ்டிச் பிக்ஸ் சேவையை புதுமையானதாக மாற்றியுள்ளன.

image

டேட்டா சயின்ஸ் அல்லது டேட்டா அனாலசிஸ் என்றெல்லாம் குறிப்பிடப்படும் தரவுகள் சார்ந்த ஆய்வும் அலசலும் வர்த்தக துறையில் முக்கியமாக அமைந்தாலும், தனிப்பட்ட ஆடைத்தேர்வுக்கு இதை பயன்படுத்தலாம் என்பது புதுமையான சிந்தனை தான். இப்படி ஒரு சேவை தேவை என கேத்ரீனாவுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவமே ஸ்டிச் பிக்ஸ் இ-காமர்ஸ் நிறுவனமாக உருவானது. தரவுகள் காட்டும் வழி கேத்ரீனா லேக், அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவில் பிறந்து வளர்ந்தவர். அவரது அம்மா ஜப்பானில் இருந்து குடியேறியவர். அப்பா யுனிசெப் அமைப்பில் டாக்டராக இருந்தார். தந்தையின் தாக்கத்தால், அவர் தானும் டாக்டராக வேண்டும் என்றே முதலில் நினைத்தாலும், பின்னர் தொழில்முனைவு அவரை கவர்ந்திழுத்தது. ஸ்டான்போர்டு பல்கலையில் பட்டம் பெற்றவர் அதன் பிறகு ஆலோசகராக பணியாற்றினார். அதன் பிறகு அவர் ஹார்வர்டு கல்வி நிறுவனத்தில் நிர்வாகவியலில் முதுகலை பட்டம் பெற்றார்.

ஆலோசகராக பணியாற்றிய காலத்தில் தான் அவருக்கு சில்லறை விற்பனை துறையில் ஈடுபாடு உண்டானது. ரெஸ்டாரண்ட் மற்றும் சில்லறை விற்பனை தொடர்பான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதன் காரணமாக,அவர் சில்லறை விற்பனை துறை குறித்து அதிகம் யோசித்தார். அதிலும் குறிப்பாக ஆடைகள் வாங்கப்படும் முறை குறித்து அதிகம் யோசித்தார்.

பேஷன் உலகில் எத்தனையோ மாற்றங்களும் புதுமைகளும் வந்துவிட்டாலும், ஆடைகள் வாங்குவது என்பது பழைய பாணியில் உரைந்து கிடப்பதாக உணர்ந்தார். இணையம் மூலமே ஆடைகளை வாங்கும் வசதி இல்லாமல் இல்லை. மேலும் இ-காமர்ஸ் தளங்களில் விதவிதமான ஆடைகளை தேடிப்பார்த்து ஒப்பிட்டு தேர்வு செய்யும் வசதியும் இருக்கவே செய்கிறது. ஆனால், ஆடைகளை தேர்வு செய்து வாங்கும் முறையில் தான் மாற்றம் தேவை என நினைத்தார்.

என் வழி புது வழி

பயனாளிகள் நோக்கில் இருந்து பார்த்தால், இணையம் மூலம் ஆடைகளை வாங்குவது ஒரு சுமையாகவும், அலுப்பூட்டக்கூடிய அனுபவமாகவும் இருப்பதாக கேத்ரீனா நினைத்தார். ஏனெனில், பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஆடையை தேடி கண்டறிய எண்ணற்ற இ-காமர்ஸ் தளங்களில் மணிக்கணக்காக நேரத்தை செலவிட வேண்டியிருந்தது. ஆடைகள் நேர்த்தி, தரம் பற்றி அறிய சக பயனாளிகளின் விமர்சனங்களையும், சமூக ஊடக பகிர்வுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. இத்தனைக்கு பிறகும், தேர்வு செய்யும் ஆடை பொருத்தமானதாக, அதை அணிந்திருப்பவரை அசத்தலாக உணரச்செய்யுமா என்பதற்கு உறுதியில்லை.

image

இணையம் தனிப்பட்ட ரசனைக்கேற்ற விஷயங்களை அணுக வழி

செய்யும் ஆற்றல் கொண்டதாக அமைகிறது என்றால், ஆடைகள் வாங்கும் விஷயத்திலும் இத்தகைய நவீன அனுபவம் சாத்தியமாகவில்லை. ஆடைகள் வாங்குவதை பொருத்தவரை பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றே கேத்ரீனா நினைத்தார். 20 ஆண்டு காலத்திற்கு பின், ஜீன்ஸ் வாங்கும் எனுபவம் எத்தகையதாக இருக்க கூடும் என்றும் நினைத்துப்பார்த்தார். நிச்சயம் கடை கடையாக ஏறி இறங்கும் வகையிலோ அல்லது இணையத்தில் ஆயிரக்கணக்கான ஜீன்ஸ்களை பார்த்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கும் வகையிலோ இல்லாமல், வாடிக்கையாளர் விருப்பத்திற்கு ஏற்ற ஆடையை எளிதாக கண்டறியக்கூடியதாக அது இருக்கும் என்றும் நினைத்தார். அத்தகைய வாய்ப்பை அளிக்கும் ஒரு சில்லரை விற்பனை நிறுவனத்தில் பணியாற்றவும் விரும்பினார். ஆனால், இது போன்ற ஒரு நிறுவனம் இல்லாததால் தானே அந்த நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்றும் துணிந்து தீர்மானித்தார்.

தேடி வரும் ஆடைகள்

கேத்ரீனாவுக்கு தரவுகள் ஆய்வில் நல்ல அனுபவம் இருந்தது. அளவு, வண்ணம், பேஷன், நேர்த்தி என ஆடைகள் தொடர்பாக நூற்றுக்கணக்கான புள்ளிகளில் தரவுகளை சேகரிக்க முடியும் என அவர் அறிந்திருந்தார். இந்த தரவுகளோடு மனித கரங்களின் நேசமிகு பரிந்துரையும் இணைந்தால் எப்படி இருக்கும்? என யோசித்தார். அவரது சொந்த அனுபவமே இதற்கான ஊக்கமாக அமைந்தது. பேஷனில் ஆர்வம் கொண்ட சகோதரி அளிக்கும் பரிந்துரைகள் அடிப்படையில் தனக்கான ஆடைகளை தேர்வு செய்வது கேத்ரீனாவின் வழக்கம். இதே போலவே, தரவுகள் அளிக்கும் புரிதல் மற்றும் மனித பரிந்துரை இரண்டையும் கலந்து பொருத்தமான ஆடையை வாடிக்கையாளர்களுக்காக தேர்வு செய்து தர முடியும் என கேத்ரீனா உறுதியாக நம்பினார்.

இதனிடையே, நெட்பிளிக்ஸ் பாணியில் விவசாய பொருட்களுக்காக செயல்பட்ட ஒரு சேவையும் அவரது கவனத்தை ஈர்த்திருந்தது. கூட்டுறவு அடிப்படையில் செயல்பட்ட அந்த திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தினால், அவர்களுக்கு மாதந்தோறும் காய்கறிகள் தொகுப்பு வாரம் ஒரு முறை அனுப்பி வைக்கப்படும். ஆடைகள் தேர்வுடன் சந்தா முறையில் அவற்றை அனுப்பி வைக்கவும் திட்டமிட்டு ஸ்டிச் பிக்ஸ் சேவையை 2011 ம் ஆண்டில் கேத்ரீனா துவக்கினார்.

துவக்கத்தில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் மத்தியில் இந்த சேவையை சோதித்துப்பார்த்தார். அவர்களிடம் இருந்து ஆடைத்தேர்வு தொடர்பான தகவல்களை ஒரு படிவத்தின் மூலம் கேட்டறிந்து, தகவல்களை திரட்டினார். பின்னர் இந்த தகவல்களை ஆய்வுக்குட்படுத்தி அதன் அடிப்படையில் செயல்பட்ட அல்கோரிதம் மூலம் அவர்கள் விரும்பக்கூடிய ஆடைகளை தேர்வு செய்தார். இப்படி தேர்வு செய்தவற்றில் இருந்து ஐந்து ஆடைகளை ஒரு பெட்டியில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைத்தார்.

image

ஐந்து ஆடைகள்

பெட்டியில் வந்து சேர்ந்த ஐந்து ஆடைகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்தமானதை வாங்கி கொள்ளலாம். மற்ற ஆடைகளை திரும்பி அனுப்பி விடலாம். வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் அடிப்படையில் ஆடைகளை தேர்வு செய்ததால், அவை நிச்சயம் அவர்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். அதே நேரத்தில் ஆடைகள் வீட்டிற்கே வந்துவிடும் என்பதும், பிடிக்காத ஆடைகளை திரும்பி அனுப்பலாம் என்பதும் கூடுதல் அணுகூலங்களாக அமைந்தன. நட்பு வட்டத்தில் இந்த சேவைக்கு நல்ல வரவேற்பு கிடைத்த புதிய வாடிக்கையாளர்கள் பெருகிய நிலையில், ஸ்டிச் பிக்ஸ் சேவை முழுவீச்சில் அறிமுகமானது.

நிறுவனத்தை பொருத்தவரை, உறுப்பினர்கள் விருப்பத்தேர்வின் அடிப்படையில் ஆடைகளை வழங்கலாம் என்பது விற்பனைக்கான வழியாக அமைந்து வருவாயை கொடுத்தது. வாடிக்கையாளர்கள் 20 டாலர் கட்டணம் செலுத்தி சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம். பின்னர் அவர்கள் வாங்கும் ஆடைக்கான விலையில் இந்த தொகை கழித்துக்கொள்ளப்படும்.

வாடிக்கையாளர்களை பொருத்தவரை, அவர்கள் விருப்பம், ரசனைக்கேற்ற ஆடைகளை எந்தவித அலைச்சலும் இல்லாமல் வாங்க முடிந்தது. உறுப்பினர்களாக இணையும் போது, வாடிக்கையாளர்கள் அளிக்கும் விரிவான பதில்கள் மற்றும் அவர்களின் சமூக ஊடக பக்கங்களில் இருந்து திரட்டப்படும் தரவுகள் அடிப்படையில் அல்கோரிதம், அவர்கள் விரும்ப கூடிய ஆடைகளை தேர்வு செய்து பரிந்துரைக்கிறது. ஆனால் இது சேவையின் ஒரு பகுதி தான். அல்கோரிதமை மட்டும் அடிப்படையாக கொண்டு முடிவெடுக்காமல், இந்த பரிந்துரைகளை வைத்துக்கொண்டு,

பேஷன் கலையில் தேர்ச்சி மிக்கவர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற ஆடைகளை தேர்வு செய்தனர்.

சவால்கள், சாதனைகள்:

ஆக, கிட்டத்தட்ட வாடிக்கையாளர்கள் சார்பாக ஒருவர் தனிப்பட்ட முறையில் தேர்வு செய்தது போல இந்த சேவை செயல்பட்டது. வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் ஆடைகள், திரும்பி அனுப்பும் ஆடைகளுக்கு ஏற்ப அவர்களுக்கான தேர்வுகள் மேலும் கூர்மையாக அமைந்தன.

இப்படி தரவுகள் சார்ந்த ஆடை வாங்கும் அனுபவத்தை அளித்த ஸ்டிச் பிக்ஸ் புதுயுக பெண்களை கவர்ந்து வேகமாக பிரபலமானது. அடுத்த சில ஆண்டுகளில் கேத்ரீனா நிறுவனத்தை பங்குச்சந்தைக்கும் கொண்டு வந்து அதன் மதிப்பை உயர்த்தினார். மிகவும் இளம் வயதில் நிறுவனத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்த பெண்மணி எனும் பெருமையையும் அந்த கட்டத்தில் பெற்றார்.

image

ஆனால், கேத்ரீனாவின் வெற்றி பயணம் கடினமாகவே இருந்தது. முதலீட்டாளர்களை சம்மதிக்க வைப்பது உள்ளிட்ட விஷயங்களில் அவர் சவால்களை எதிர்கொண்டார். முற்றிலும் புதுவிதமான இ-காமர்ஸ் சேவை என்பதால் முதலீட்டாளர்களுக்கு அதை புரிய வைப்பது சிக்கலாக இருந்தது. ஆடை வாங்க 20 மில்லியன் டாலரா? என சில முதலீட்டாளர்கள் கேட்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இந்த யோசனை எல்லாம் சரிபட்டு வராது என நிரகாரித்தனர். மேலும் பெண் என்பதற்காகவும் அவர் நிறைய சங்கடங்களையும், சீண்டல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

எனினும், எதிர்கால இ-காமர்ஸ் சேவையை உருவாக்குகிறோம் எனும் நம்பிக்கையில் கேத்ரீனா இந்த சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். நிறுவனம் பங்குச்சந்தையில் அறிமுகமானது போது, பங்கு விற்பனை துவக்கி வைக்கும் நிகழ்வில், பக்கத்தில் கணவருடன், கையில் ஒரு வயது குழந்தையை தூக்கி வைத்துகொண்டு காட்சி அளித்த புகைப்படம் பல செய்திகளை உலகிற்கு உணர்த்தியது. அண்மையில், நிறுவன சி.இ.ஓ பொறுப்பில் இருந்து விலகி கொண்டாலும், தலைவராக நிறுவனத்தை வழி நடத்தி வருகிறார்.

முந்தைய அத்தியாயம்> ஸ்டார்ட் அப் இளவரசிகள்-20: சிறுசிறு வேலையை மற்றவர்களை செய்யக்கோரும் இணைய சேவை-சாதித்த லியா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.