நம் சமையலறையின் முதல் விருந்தாளியான தீப்பெட்டியை, சிவகாசிக்கு அடுத்தபடியாக, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில்தான் அதிகம் தயாரிக்கிறார்கள். வர்த்தக ரீதியாக ‘குட்டி சிவகாசி’ என்று பெயரெடுத்த குடியாத்தம் நகராட்சியில், மொத்தம் 36 வார்டுகள் இருக்கின்றன. 2011-ல், பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நகரமன்றத் தலைவர் பதவி, இந்தமுறை ஆண், பெண் போட்டியிடக்கூடிய வகையில் பொதுப்பிரிவுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த தேர்தலில், நகரமன்றத் தலைவர் பதவியை அ.தி.மு.க அலங்கரித்திருந்தது. அமுதா சிவப்பிரகாசம் என்பவர் தலைவராக இருந்தார். இது, அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ்ஸாக பார்க்கப்பட்டாலும், நகராட்சியை உள்ளடக்கிய சட்டமன்றத் தொகுதி தி.மு.க வசமிருக்கிறது. தி.மு.க-வைச் சேர்ந்த அமலு விஜயன் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார்.

சௌந்தர்ராஜன் – தி.மு.க

அதோடு, தி.மு.க ஆளும் கட்சியாக இருப்பதும், அந்தக் கட்சிக்கு கூடுதல் பலம். நகரமன்றத் தலைவர் பதவியை குறிவைத்து, தி.மு.க நகரப் பொறுப்பாளர் சௌந்தர்ராஜன் பிச்சனூரை உள்ளடக்கிய வார்டில் களமிறங்குகிறார். சௌந்தர்ராஜனின் சொந்த வார்டு 31. தனது வார்டு மகளிருக்கு ஒதுக்கப்பட்டதால், அவர் பிச்சனூரில் களமிறங்குகிறார். நகராட்சியைப் பொறுத்தமட்டில், செங்குந்த முதலியார் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். அடுத்தபடியாக இஸ்லாமியர்கள், ஆதிதிராவிட சமூக மக்கள் கணிசமாக இருக்கிறார்கள். சௌந்தர்ராஜன் செங்குந்த முதலியார் என்பதும் அவருக்கு ப்ளஸ். சௌந்தர்ராஜன் 2006 முதல் 2011 காலக்கட்டம் வரை குடியாத்தம் நகராட்சியின் துணைத் தலைவராகவும் இருந்ததன் காரணமாக, போட்டியிடக்கூடிய வார்டில் அவருக்கு செல்வாக்கு அதிகமாகவே காணப்படுகிறது.

அ.தி.மு.க-வைப் பொறுத்தமட்டில், 20 வார்டுகளை வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்துகிறார்கள். 2001 முதல் 2006 காலக்கட்டத்தில் அ.தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தது. அப்போது, எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க, குடியாத்தம் நகரமன்றத் தலைவர் பதவியைத் தட்டிச்சென்றது. 2006-ல் தி.மு.க ஆளும் கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சியாக இருந்த அ.தி.மு.க-வின் ஆர்.எஸ்.சிவப்பிரகாசம் நகரமன்றத் தலைவராக இருந்தார். சிலகால இடைவெளியில் சிவப்பிரகாசம் தி.மு.க-வுக்கு ஆதரவாக செயல்பட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு, தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

குடியாத்தம் நகராட்சி அலுவலகம்

அதைத் தொடர்ந்து, 2011-ல் நடைபெற்ற நேரடி தேர்தலிலும் குடியாத்தம் நகரமன்றத் தலைவர் பதவியை அ.தி.மு.க கைப்பற்றியது. நகருக்குள் இருக்கும் தங்களது பழைய செல்வாக்கை புதுப்பிக்கவும் அ.தி.மு.க வியூகம் வகுத்திருக்கிறது. பா.ஜ.க கூட்டணியிலிருந்தபோது, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வினரே அக்கட்சியின் வேட்பாளருக்கு ஓட்டுப்போடாத சூழ்நிலை நிலவியது. ஜமாஅத் யாரை ஆதரிக்கிறதோ, அவர்களையே அ.தி.மு.க-வில் பயணப்படும் இஸ்லாமியர்களும் ஆதரித்தனர். தற்சமயம், பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதால் இஸ்லாமியர்களின் ஆதரவையும் எளிதில் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காய் நகர்த்துகிறது, அ.தி.மு.க.

அதேபோல, ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்ற பெயரில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுபடி குடியாத்தம் நகரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அந்த வீடுகளை உள்ளடக்கியிருக்கும் நான்கைந்து வார்டு மக்களிடம் ஆளும்கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. இவர்களின் வாக்குகள் மடைமாறுவதும் அ.தி.மு.க-வுக்கு ப்ளஸ், என்றாலும் குடியாத்தம் நகராட்சியில் போட்டி கடுமையாக இருக்கும் என்பதே களநிலவரம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.