ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த கவிஞர் கண்ணதாசன் நகர் 3-வது வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (61). ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி வளர்மதி (55). இவர்களின் மகள்கள் இருவரும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கணேசன் நேற்று ஒரு வேலை விஷயமாக வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அந்தநேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் வளர்மதி கழுத்தில் அணிந்திருந்த தங்க நகையை பறிக்க முயற்சித்துள்ளார். அதனைத் தடுக்க வளர்மதி கத்திக் கூச்சலிட, கையில் வைத்திருந்த கத்தியால் அந்த மர்ம நபர் வளர்மதியில் கழுத்து, முதுகு, மார்பு பகுதி என 5 இடங்களில் சரமாரியாகக் குத்திக் கொலை செய்துவிட்டு 6 பவுன் தாலிக்கொடி மற்றும் தங்கச் செயின் ஒன்றையும் பறித்துச் சென்றுள்ளார்.

கொலையான வளர்மதி

இந்நிலையில், வேலைக்குச் சென்ற இடத்தில் இருந்து மனைவி வளர்மதிக்கு கணேசன் ஃபோன் அடிக்க, எதிர்முனையில் எந்த பதிலும் இல்லாமல் இருந்திருக்கிறது. இதில் பதறிப்போன கணேசன் வீட்டிற்கு போய் பார்த்தபோது வளர்மதி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து கதறியழுதவர் உடனடியாக சித்தோடு போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு போலீஸார், வளர்மதியில் சடலத்தைக் கைப்பற்றி பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையான வளர்மதி

மேலும், சம்பவ இடத்திலிருந்த கைரேகை தடயங்கள், மோப்ப நாய் மற்றும் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து குற்றவாளியைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில், பவானி காளிங்கராயன் பஸ் ஸ்டாப்பில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த ராஜா (எ) நிக்கோலஸ் (40) என்பவரை போலீஸார் விசாரித்துள்ளனர். விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக அவர் உளறியிருக்கிறார். ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து வந்த முறைப்படி விசாரிக்க, நகைக்காக வளர்மதியைக் கொன்றது நான் தான் என ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், விசாரணையில், “எனக்கும் வளர்மதி குடும்பத்துக்கும் நல்ல பழக்கம். 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டுத் தான் வளர்மதி அக்கா வீட்டுக்குப் போனேன். காசு இல்லைன்னு சொல்லி ஒருமாதிரி அவங்க சொல்லவும், எனக்கு கோபம் வந்துடுச்சி. அதனால தான் ஆத்திரத்துல என்ன செய்றதுன்னு தெரியாம கொலை பண்ணிட்டேன்” என்றிருக்கிறார்.

கொலையாளி ராஜா (எ) நிக்கோலஸ்

இதுசம்பந்தமாக விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். “உயிரிழந்த வளர்மதி குடும்பத்திற்கும், கொலை செய்த ராஜா (எ) நிக்கோலஸ் குடும்பமும் ஏற்கனவே நல்ல பழக்கத்துடன் தான் இருந்துள்ளனர். வளர்மதியின் கணவர் பேராசிரியர் கணேசனின் மாணவியாக கொலையாளி ராஜாவின் மனைவி படித்துள்ளார். மேலும், பேராசிரியர் கணேசனின் நண்பரான எட்வின் சுந்தரம் என்பவரின் அக்கா மகன் தான் இந்த கொலையாளி ராஜா. சம்பவத்தன்று கொலையாளி ராஜா 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டு வளர்மதியை அணுகியிருக்கிறார். ‘எப்ப பார்த்தாலும் கடன் கேட்டுக்கிட்டே இருக்க. உனக்காகத் தான் நான் சம்பாதிச்சி வச்சிருக்கனா’ என்றிருக்கிறார் வளர்மதி. `இவ்ளோ பெரிய கோடீஸ்வரியா இருக்க. நிறைய நகை போட்ருக்க. ஒரு 3 ஆயிரம் ரூபாய் கடன் கேட்டா கொடுக்க மாட்டியா!’ என கோபத்தில் அருகிலிருந்த கத்தியை எடுத்து வளர்மதியை கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

அதன்பிறகு வளர்மதி கழுத்திலிருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடி மற்றும் தங்கச் செயின் ஒன்றையும் பறித்துக் கொண்டு சென்றுள்ளார். கொலை செய்றத பிறகு ‘எனக்கு 3 ஆயிரம் ரூபாய் காசு இல்லைன்னு சொன்னல்ல. உன் தாலிக் கொடியை வச்சி என் 3 லட்சம் கடனை அடைக்கப் போறேன்’னு ராஜா சொல்லியிருக்கார். முழுக்க முழுக்க இது பணத்துக்காக எதிர்பாராதவிதமாக நடந்த கொலை என்று தான் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மற்ற வேறு காரணங்கள் ஏதாவது இருக்கிறதா என விசாரித்து வருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.