திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி ராஜாவை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்திருந்தார். ஏற்கனவே திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக இருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் பணியில் முழு கவனம் செலுத்த வேண்டி இருப்பதால் இருப்பதால், அண்மையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை திமுக தலைமையிடம் அளித்ததாக கூறப்பட்டது.

டி.ஆர்.பி. ராஜா

இதனிடையே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு தனது பதவியை ராஜினாமா செய்ய மறைமுக அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும், திமுக தலைமைக்கும் அவருக்கும் ஏதோ உரசல் ஏற்பட்டதாகவும் பல தகவல்கள் பரவி வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பதவியை ராஜினாமா செய்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “அரசியல் களத்திலும் தகவல் தொடர்பையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, என் தொகுதியான மதுரை மத்திய தொகுதியில் இரண்டு முறை முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பணிகளிலும், சட்டமன்ற உறுப்பினராக நான் முன்னெடுத்த திட்டங்களிலும் என்னால் இயன்ற சிறிய மாற்றங்களை உண்டாக்க முயற்சித்துள்ளேன்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக இருப்பது, அற்பணிப்புடன் பணியாற்றிய, அறிவார்ந்த திறன் வாய்ந்த இளம் தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒன்றிணைந்து உருவாக்கிய இந்த அணியின் தனித்துவம் வாய்ந்த கொள்கைகள், சுயமரியாதை பண்பு மற்றும் திராவிட கொள்கையின் மீது கொண்ட பற்றே ஆகும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெளி நாடுகளில் பணிபுரிந்து பல சாதனைகளை படைத்த போதிலும், நம் அணியின் முன்னேற்றம் என்ற சாதனை தான் எனக்கு மிகப்பெரிய மனநிறைவையும், பெருமையையும் அளித்துள்ளது. அதற்காகவும், தங்களின் தொடர் உழைப்புக்காகவும், உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை கூற கடமைப்பட்டுள்ளேன்.

தன்னிடம் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுப்பதே ஒரு சிறந்த நிர்வாகியின் அடையாளம். கடந்த சில மாதங்களாக, ஒரு சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் நான் ஆற்ற வேண்டிய கடமைகளுடன், நான் மேற்கொள்ள வேண்டிய தகவல் தொழில்நுட்ப அணியின் பணிகளையும் ஒருசேர கவனிப்பது கடினமாக இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு நம் மாநிலத்தின் நிதிநிலை வெகு வேகமாக சீரழிந்தது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

உண்மையில், பொது நிர்வாகமும் அதற்கு இணையாக பெரும் சீர்கேடுகளை சந்தித்தது. இந்த சூழ்நிலையில், நமது முதல்வரின் சிறந்த வழிகாட்டுதலின் , எங்கள் முழு கவனத்தையும், திறன்களையும் பயன்படுத்தி இந்த நிலைமையை பெருமளவில் சரிசெய்ய முடியும் என்று நான் நம்புகிறேன். இது போன்ற சூழலில், நிர்வாக ரீதியாக நான் ஆற்ற வேண்டிய கடமையின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளராக தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக இருந்தது. முழு அர்ப்பணிப்புடன் பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலில் பெருமைக்காக பதவிகளில் ஒட்டிக்கொள்வது எனது இயல்பு அல்ல என்பது என்னை நன்கு அறிந்தவர்களுக்கு தெரியும். அதன் பொருட்டு, நம் கழகத் தலைவரிடம் என் பொறுப்பு விலகல் கடிதத்தை வழங்கினேன். அவரும் பெருந்தன்மையுடன் அதை ஏற்றுக்கொண்டார்.

ஒருவருடைய வாழ்வின் உண்மையான மதிப்பு அவர் மறைந்த பிறகே உணரப்படுகிறது என்ற உண்மையை 2006-ல் என் தந்தையின் இறுதிச் சடங்கில் நான் அறிந்து கொண்டேன். அது போல இந்த அணியை மேம்படுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளின் பலன்களை, டி.ஆர்.பி ராஜா, MLA அவர்களின் புதிய தலைமையின் கீழ் எவ்வளவு சிறப்பாக அணி செயல்படுகிறது என்பதை வைத்து மதிப்பிட்டுவிடலாம். அவருடன் இணைந்து பணியாற்றி நம் அணியை மென்மேலும் வளர்ச்சியடைய செய்யுமாறு உங்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்டாலின்

இதுவரை நாம் உருவாக்கிய நன்மதிப்பை ஒருங்கிணைத்து, பாதுகாக்கும் அதே வேளையில், டிஆர்.பி ராஜா புதிய முன்னெடுப்புகளை செயல்படுத்தி அணிக்கு வலு சேர்ப்பார் என்றும் நம்புகிறேன். வருங்காலத்தில், நீங்கள் அனைவரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் வெற்றிகளில் பங்கேற்று நானும் மகிழ்ச்சியடைவேன்.

திராவிட கொள்கையை வலுப்படுத்த, பதவிகளை கடந்து, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, மீண்டும் அந்த பணியில் நம்மை அர்பணித்துக்கொண்டு, மற்றுமொரு நூற்றாண்டுக்கான அரசியலை உருவாக்க தொடர்ந்து உழைப்போம்” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Also Read: பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஹிட்லிஸ்டில், எடப்பாடியின் 6 மாஜிக்கள்.. வெள்ளை அறிக்கை அட்டாக்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.