பெரும்பாலும் திருமணம் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்வுகள் மண்டபம், திருமண கூடம், திறந்தவெளி பூங்கா மாதிரியானவற்றில் நடக்கும். இத்தகைய சூழலில் தமிழ்நாட்டை சேர்ந்த தம்பதியர் தங்களது திருமண வரவேற்பு நிகழ்வை மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தின் துணையுடன் அரங்கேற்ற உள்ளனர். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்தும் சாத்தியம் என்ற சூழலில் இதனை சாத்தியம் செய்துள்ளனர் தினேஷ் மற்றும் ஜனக நந்தினி தம்பதியர். 

image

வரும் பிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிறு அன்று தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் இவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அதே நேரத்தில் அவர்களது திருமண வரவேற்பு நிகழ்வு டிஜிட்டல் வடிவில் ஹோஸ்ட் செய்யப்பட உள்ளது. 

“மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பத்தில் எங்களது திருமண வரவேற்பு நிகழ்வை நடத்த நான் விரும்பினேன். இந்த ஐடியாவை எனது இணையர் நந்தினியிடம் சொன்ன போது அவரும் சம்மதம் சொன்னார். கிரிபட்டோ மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் எனக்கு அனுபவம் உள்ளது. கிரிப்டோகரன்சி வகைகளில் ஒன்றான எத்திரியம் காயினை மயின் செய்த அனுபவமும் உண்டு. இதில் பிளாக்செயின்தான் மெட்டாவெர்ஸின் அடிப்படை.

எனக்கு திருமணம் நிச்சயமானதும் இதை முடிவு செய்தேன். இதில் எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் அவதாரை உருவாக்கி, விர்ச்சுவல் ரியாலிட்டி மூலமாக எங்களுக்கு பிடித்த ஹாரி பாட்டர் யுனிவர்ஸ் தீமில் இந்த வரவேற்பு விழா நடைபெற உள்ளது” என சொல்கிறார் மணமகன் தினேஷ். 

இவர் மெட்ராஸ் ஐஐடி-யில் புராஜக்ட் அசோசியேட்டாக பணியாற்றி வருகிறார் என தெரிகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த மணமகள் ஜனக நந்தினியின் தந்தை உருவத்தையும் சேர்க்க உள்ளாராம் தினேஷ். 

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் விருந்தினர்கள் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேக லாக்-இன் விவரங்களை கொண்டு இணைந்து, அதில் தங்களுக்கு பிடித்த அவதாரை தேர்வு செய்து கொண்டு இந்நிகழ்வில் பங்கேற்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதில் விருந்தினர்கள் அடுத்தவர்களுடன் கலந்துரையாடலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதில் தம்பதியர் பாரம்பரிய முறையில் உடை அணிந்திருப்பார்கள் என தெரிகிறது. 

image

மெட்டாவெர்ஸ்?

META UNIVERSE என்ற வார்த்தைகளை இணைத்து உருவானதுதான் METAVERSE. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜ உலகத்திற்கு அப்பால் இருக்கும் டிஜிட்டல் அல்லது மெய்நிகர் உலகு என்பது தான் இதன் அர்த்தம்.

மெட்டாவெர்ஸ் என்ற பதம் முதன்முதலில் 1992-ஆம் ஆண்டு நீல் ஸ்டீபன்சன் என்ற எழுத்தாளரின் Snow Crash என்ற அறிவியல் கதையில் வெளியானது. மக்கள் தங்களுக்கென அவதார்களை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் மெய்நிகர் உலகம் தான் மெட்டாவெர்ஸ் என அவர் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த மெட்டாவெர்ஸ் கோட்பாடு அடிப்படையில் உருவான மற்றொரு நாவல் தான் ரெடி பிளேயர் ஒன். இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இதனை 2018-ஆம் ஆண்டு திரைப்படமாகவும் வெளியிட்டிருந்தார். தற்போதுள்ள Roblox, Fortnite ஆகிய ஆன்லைன் வீடியோ கேம்களும் மெட்டாவெர்ஸ் அடிப்படையில் உருவானவையே. நாம் இருக்கும் சூழலை கற்பனை சூழலாக மாற்றும் ஆக்மெண்ட் ரியாலிட்டி, அந்த கற்பனை சூழலில் நாமே இருப்பதாக உணரச் செய்யும் விர்ச்சுவல் ரியாலிட்டி. இந்த இரண்டையும் இணைத்து நிஜ உலக மனிதர்களை விர்ச்சுவலாக வாழ செய்யும் இடம் தான் மெட்டாவெர்ஸ்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.