’ஜெய் பீம்’ படத்தில் நடித்ததிலும் சூர்யாவுடன் பெருமைப்படுகிறேன் என்று நடிகர் ராவ் ரமேஷ் கூறியுள்ளார்.

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ’ஜெய் பீம்’ கடந்த நவம்பர் மாதம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. மணிகண்டன்,லிஜோ மோல், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.இவர்களுடன் தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் அட்டர்னி ஜெனரலாக நடித்து கவனம் ஈர்த்தார். தெலுங்கில் 120 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ராவ் ரமேஷ், ‘ஜெய் பீம்’ படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

”அட்டர்னி ஜெனரல் கதாபாத்திரத்துக்கு நான்தான் பொருத்தமாக இருப்பேன் என்று இயக்குநர் ஞானவேல் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதற்கு, சூர்யா சார் ஒத்துக்கொண்டதும் நன்றிக்குரிய விஷயம். ஆனால், படத்தில் நடித்தால் நானே டப்பிங் பேசுவேன் என்று அன்பான கோரிக்கை வைத்தேன். ’எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் எந்த மொழியாக இருந்தாலும், நம் மாடுலேஷனில் பேசினால்தான் ஜீவன் இருக்கும்: அந்தக் கேரக்டர் மேம்படும் என்ற கருத்து கொண்டவன் நான்’. அதற்கு இயக்குநர் ஒப்புக் கொண்டதும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். அது மட்டுமல்லாமல் தமிழ் ஒரு அழகான மொழி. அதனால்தான், தமிழ் நாட்டுக்கு வந்து வாழும் எந்த மாநிலத்தவராக இருந்தாலும் தமிழிலேயே பேச ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் முழுக்க முழுக்க வளர்ந்தது சென்னையில் தான். தி.நகர் ராமகிருஷ்ணாவில் தான் பள்ளிக்கல்வி படித்துவிட்டு புகைப்படக் கலைஞராக பணிபுரிந்தேன்.

image

அதனால், பிறமொழிக் கலப்பு இல்லாமல் சுத்தமாகவும் தமிழ் பேச முடியும். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியானதில் அத்தனை மொழி ரசிகர்களும் பாராட்டுவது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களே பாராட்டுவதுபோல் இருக்கிறது. ரசிகர்கள் என்றில்லாமல் பல துறை சேர்ந்தவர்களும் குறிப்பாக, சட்டத்துறை நிபுணர்களும் என்னிடம் “அட்டர்னி ஜெனரல் என்றால் இப்படித்தான் இருப்பார்கள். எப்படி உங்களால் அப்படி நடிக்க முடிந்தது?” என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதற்குக் காரணம், முழுக்க ஞானவேல் சார்தான். என் கதாபாத்திரத்தை அணு அணுவாக என்னுள் ஏற்றினார். எவ்வளவு சிரிக்க வேண்டும், எவ்வளவு கோபம் வேண்டும் என்றெல்லாம் அந்த ஸ்கேல் மாறாமல் என்னிடம் நடிப்பை வாங்கினார்” என்றவர், சூர்யாவுடன் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

image

“உண்மையில் என் நடிப்பு மிளிர்ந்ததற்குக் காரணம் சூர்யா சாரின் இயல்பான தன்மைதான். ஒரு முன்னணி ஹீரோ என்ற பந்தாவோ, பகட்டோ அவரிடம் இல்லை. செட்டில் எல்லோருடனும் மிக இயல்பாக மரியாதையுடன் பழகினார். அந்தத் தன்மைதான் என்னை மட்டுமல்லாமல் எல்லோரையும் நன்றாக நடிக்க வைத்தது. சூர்யா சார் சிறந்த மனிதர். அவரின் அகரம் பவுண்டேஷன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் உயர் கல்வி பெறுகிறார்கள் என்பதை அறிந்தபோது பிரமிப்பாக இருந்தது. இப்போது, இந்தப்படத்தின் மூலம் ஒரு தயாரிப்பாளராக சமூக மேம்பாட்டுச் செய்தி சொன்னவர், இதில் கிடைத்த லாபத்தில் ஒரு கோடியைப் பழங்குடி இன மக்களின் நல்வாழ்வுக்கு வழங்கி இருக்கிறார். இந்த உயர்ந்த உள்ளம் யாருக்கு வரும்? அவர் குடும்பத்தில் அனைவருமே கண்ணியமானவர்கள். ’ஜெய் பீம்’ படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவருடன் நடித்ததில் பெருமைப்படுகிறேன். ‘ஜெய் பீம்’ பார்த்துவிட்டு பெரிய இயக்குநர்கள் பேசியுள்ளார்கள். அந்தப் படங்கள் முடிவானதும் சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று பெருமையுடன் பகிர்ந்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.