– சுவாமி சுகபோதானந்தா

`அன்புகாட்டு, ஆனால் அடிமையாகாதே!’ என்ற வார்த்தைகளில் புதைந்திருக்கும் பொருள் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதைக் கடைப்பிடிப்பது எத்தனை பேர் என்பதுதான் கேள்வி. கணவனிடமும் குழந்தைகளிடமும் ஒரு பெண் அன்புகாட்டுவது இயல்பு. ஆனால் என்னதான் ஆசைக் கணவனாக, அருமை பிள்ளைகளாக இருந்தாலும், சிலர் இந்த அன்பை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அன்புகாட்டுகிறவரை அடிமுட்டாளைப் போல நடத்துவதை சில இடங்களில் பார்க்க முடிகிறது.

பாதிக்கப்படுகிற பெண்களே, `ஆமாம், எனக்கு கணக்கு வழக்கெல்லாம் தெரியாது. பேங்க் விவகாரமெல்லாம் புரியாது’ என்று தங்கள் மீது குத்தப்பட்ட financial illiterate முத்திரையை ஏதோ பல்கலைக்கழகப் பட்டம் மாதிரி பெருமையோடு சுமந்துகொண்டு, தங்கள் சம்பளப்பணம் முதற்கொண்டு அனைத்தையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, நூறுக்கும் இருநூறுக்கும் கணவரிடம் கையேந்துவதையும் பார்க்கிறோம்.

“அதீதமாக ஏதேதோ கற்பனை செய்து கொள்கிறாய்?”

“இல்லாத விஷயத்தை எல்லாம் பூதாகரப்படுத்துகிறாய்”

`ஓவர் சென்சிட்டிவ்வாக இருக்கிறாய்” என்று ஆரம்பித்து,

“சுட்டுப் போட்டாலும், இந்த வாகன நெரிசலில் உன்னால் டூவீலர் ஓட்ட முடியாது.”

“ஆட்டோவோ, அல்லது பஸ்ஸோ பிடித்து தனியா ஓரிடத்துக்குப் போய்வரத் தெரியாது”

“அறிமுகமில்லாதவர்களிடம் தைரியமாகப் பேச முடியாது”

Woman (Representational Image)

“ஸ்மார்ட்போனை எல்லாம் ஆபரேட் பண்ணத் தெரியாது” என்பதுவரை, `உனக்கு அதெல்லாம் தெரியாது. புரியாது. வராது.’ என்று சொல்லிச்சொல்லி மட்டம் தட்டப்படுகிற பெண்கள் ஏராளம். சில சமயங்களில், இந்தப் பொய்களை எல்லாம் திரும்ப திரும்பச் சொல்வது தாங்கள் அதிகம் நம்பும் மேலதிகாரியாகவோ, தோழமையாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளும் சுயநலம்மிக்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகவோ… ஏன் கட்டிய கணவனாகவோ அல்லது பெற்றெடுத்த பிள்ளையாகவோ இருப்பதால், பல பெண்கள் தங்களைப் பற்றி தாங்களே தாழ்வான ஓர் அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆங்கிலத்தில், `கேஸ் லைட்டிங்’, என்ற ஒரு வார்த்தை உண்டு. இது நான் இங்கே குறிப்பிட்ட மூளைச்சலவையையும் தாண்டியது. இல்லாத ஒன்று இருப்பதைப் போல மாயத்தோற்றத்தை உருவாக்கும் கண்கட்டு வித்தை அது.

இந்த வார்த்தை ஓர் ஆங்கில நாவலில் இருந்து உருவானது. இந்த நாவலின் நாயகியை பைத்தியக்காரி என்று நிறுவ நினைக்கும் அவளின் கணவன் தன் பொறியியல் மூளையைப் பயன்படுத்தி, கேஸ் லைட்டரை தானாகவே ஒளிரச்செய்துவிட்டு தள்ளி உட்கார்ந்து கொள்வான். இதைப் பார்த்து மனைவி பதறும்போது, `பைத்தியக்காரி போல பேசாதே. என்னிடம் சொன்னதைப் போல வெளியில் யாரிடமும் சொல்லிவிடாதே. கைக்கொட்டி சிரிப்பார்கள்’ என்று கேலி செய்வான். நாளடைவில் அவள் இது மனப்பிரமை என்று ஆழமாக நம்பிவிடுவாள். அதன் பிறகு, மனைவியின் நடவடிக்கைகள், அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் கணவனாக அவன் மெள்ள மெள்ள மாறுவான் என்று கதை நகரும்.

குட்டியாக இருக்கும்போது யானையை சிறிய தாம்புக் கயிற்றால் கட்டிப்போடுவார்கள். அதை அறுத்துக் கொண்டு ஓடுவதற்கு அந்த யானை குட்டி தொடர்ந்து முயலும். ஒரு கட்டத்தில் முடியாது என்று விட்டுவிடும். அதன் பிறகு அது பிரமிக்கத்தக்க அளவுக்கு பிரமாண்டமாக வளர்ந்த பிறகும், தன்னை கட்டியிருக்கும் சிறிய கயிற்றை அறுக்க முயற்சி செய்யாது. யானைக்குட்டியை, யானைப் பாகன் மூளைச்சலவை செய்து வைத்திருப்பதைப் போலத்தான் இன்று அப்பாவிப் பெண்கள் சிலர், மூளைச்சலவை செய்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். முட்டாள் என்ற முத்திரை குத்தி வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

Woman (Representational Image)

Also Read: மகிழ்ச்சி எங்கே மறைந்திருக்கிறது? – சுவாமி சுகபோதானந்தா – பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

“யாராக இருந்தாலும் சரி, டூ வீலர் பழகுகிறவர்கள், கற்றுக் கொள்ளும் புதிதில் வண்டியை ஒன்றிரண்டு முறை கீழே போடத்தான் செய்வார்கள். `நான்தான் அப்பவே சொன்னேனே. இதெல்லாம் உனக்கு வராது.” என்று யார் சொன்னாலும் அதை நம்பாதீர்கள். `கணக்கில் புலியாக இருப்பவர்கள்கூட, ஐம்பது நூறு என்று சில சமயம் பணத்தை தொலைப்பதும் இழப்பதும் சாதாரணம்தான்’. தவறு செய்தால்தான், அடுத்த முறை எப்படி தவறு செய்யாமல் இருப்பது என்று கற்றுக் கொள்ள முடியும். அதனால் பணப் பரிவர்த்தனையோ, அல்லது டூ வீலர் டிரைவிங்கோ தவறு செய்வதில் தவறில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்மார்ட் போனோ, அல்லது கம்ப்யூட்டரோ அது எவ்வளவு விலை மதிப்புடையதாக இருந்தாலும் சரி, நீங்கள் தவறுதலாகவே ஆபரேட் செய்தால்கூட அது வெடித்துச்சிதறிவிடாது. அதனால் தன்மையான நபர்களிடம் ஒன்றுக்கு நான்கு முறை கேட்டுத் தெரிந்துகொண்டு அவற்றை எல்லாம் பயன்படுத்த தொடவங்குவதில் தவறே இல்லை.

“யாருமே நெருங்க முடியாத ஆள் அரவமற்ற வனாந்திரமான காட்டின் நடுவே படிக்கட்டுக்களே இல்லாத ஒரு கோபுரத்தின் உச்சியில் இருக்கும் உப்பரிகையில் சிறைவைக்கப்பட்ட ரப்பன்சேல் கதை தெரியும்தானே. அவளை சிறைப்படுத்திய சூனியக்கார கிழவி, ரப்பன்சேலிடம்,`நீ அவலட்சணமானவள். அசிங்கமாக இருக்கிறாய்’ என்று திரும்ப திரும்பச் சொல்ல, அந்த கோபுரத்தில் ஒரு கண்ணாடி கூட இல்லை என்பதால் ரப்பன்சேல் அதை உண்மை என்று நம்பி, சுய கழிவிரக்கத்தில் தவியாய் தவித்த கதை இன்றும் பல ரூபங்களில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. ரப்பன்சேல் போலத்தான், இங்கே பல பெண்கள் தங்களைப் பற்றி தாங்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு கூனிக்குறுகிக் கிடக்கிறார்கள். காட்டுக்கு வேட்டையாட வந்த இளவரசன், ரப்பன்சேல் அழகில் மயங்கி அவளை கோபுரச்சிறையில் இருந்து மட்டுமல்லாது அறியாமையில் இருந்தும் மீட்டதைப் போல சுய சிறையில் அடைப்பட்டுக் கிடக்கும் பெண்களை மீட்க எந்த இளவரசனும் வரமாட்டான். இந்தச் சிறையை அவரவர்தான் உடைத்தெறிய வேண்டும்.

சுவாமி சுகபோதானந்தா

Also Read: `இந்த மீனவரின் கதையில்தான் உங்கள் மகிழ்ச்சிக்கான ரகசியம் இருக்கிறது!’ – பெண்ணே ரிலாக்ஸ் ப்ளீஸ் 3.0

இப்படிச் சொல்வதால், பார்க்கும் எல்லோரையும் பயத்தோடும் சந்தேகத்தோடும் எடை போடத் தேவையில்லை. பாசமிக்கவர்களை எல்லாம் சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தேவையில்லை. `ஒரு பெண் அப்பாவியாகவோ அப்பிராணியாகவோ இருந்துவிடக்கூடாது’ என்பதுதான் இங்கே நான் வலியுறுத்த விரும்புகிற செய்தி. பாசம் கண்களை மறைத்துவிடக்கூடாது. யார் மீதும், எந்தத் தருணத்திலும் குருட்டு நம்பிக்கை வைக்காமால் அலர்ட்டாக இருக்கும் பெண்களை யாராலும் ஏமாற்றவோ, அடிமைப்படுத்தவோ ஆதிக்கம் செலுத்தவோ முடியாது.

காட்டில் உலவும் கொடிய மிருகங்கள்கூட திடகாத்திரமான காளைகளையோ, மின்னலைப் போல ஓடும் மான்களையோ குறிவைக்காது. உடலும் மனமும் பலவீனமான பிராணிகளைத்தான் குறிவைக்கும். காட்டுக்குப் பொருந்தும் விதி நாட்டுக்கும் பொருந்தும்.

– சிந்திப்போம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.