வருமானத்திற்கு அதிகமாக ரூ. 11.32 கோடி சொத்து குவித்ததாக முன்னாள் அமைச்சர் கேபி.அன்பழகன், மனைவி உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தர்மபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்.

இவர், உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டமான 2016 முதல் 2021ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

image

அதனடிப்படையில் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணையில் கே.பி.அன்பழகன் தேர்தலின் போது கணக்கு காட்டபட்ட சொத்துக்களின் மதிப்பை வைத்து விசாரணை நடத்தினர்.

ஆப்போது அவர் பெயரிலும், அவரது உறவினர் பெயரிலும் பல கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகள் குவித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பாக்கியலட்சுமி தியேட்டர்ஸ், புளூ மெட்டல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் 50 சதவீத பார்ட்னராக செயல்பட்டதும், மகன் சசிமோகன் பெயரில் ஏ.எம்.பிஎஸ் நிறுவனம், சந்திரமோகன் பெயரில் அன்பு ஸ்பெஷலிட்டி மருத்துவமனை நடத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சரஸ்வதி பழனியப்பன் என்ற பெயரில் டிரஸ்ட் நடத்தி வந்ததும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சொத்துக்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2016 ஆம் ஆண்டு கே.பி.அன்பழகனின் வங்கி இருப்பு, சொத்து மதிப்பு, நகைகள் என அவரது சொத்து மதிப்பு ஒரு கோடியே 60 லட்சத்து 50 ஆயிரத்து 859 ரூபாய் என இருந்ததாகவும், 2021 ஆம் ஆண்டின் போது அவரது சொத்துமதிப்பு 23,03,86,277 ரூபாயாக உயர்ந்துள்ளது.

image

அதாவது அவரது வருமானத்தை அடிப்படையாக வைத்து கணக்கீட்டு பார்த்தால் அவரது தற்போதைய சொத்துமதிப்பு 10,10,39,663 இருந்திருக்க வேண்டும். ஆனால் வருமானத்திற்கு அதிகமாக கே.பி அன்பழகன் 11,32,95,755 ரூபாய் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அன்பழகனின் மருமகன் ரவிசங்கர் பெயரில் தர்மபுரியில் கலவை ஆலை மற்றும் கல்குவாரி ஆலை, மைத்துனர் பெயரில் எம் சாண்ட் நிறுவனம், அசோசியேட் அங்குராஜ் பெயரில் புளூ மெட்டல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதும் தெரியவந்தது. சென்னை கோபாலபுரத்தில் அன்பழகனின் தங்கை பெயரில் கணேஷ் கிரனைட் நிறுவனமும் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் கே.பி.அன்பழகன் அவரது பெயரிலும், அவரது உறவினர்களின் பெயரிலும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் பல கோடி ரூபாய் சொத்துக் குவித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில் இன்று சென்னை, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள கே.பி அன்பழகனுக்கு சொந்தமான 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் 6ஆவது அமைச்சராக கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.