ஒவ்வொரு வருடமும், மழைக்காலம் முடிந்த பின்னர் டெங்கு, மலேரியா போன்ற கொசுக்களால் பரவக்கூடிய நோய் வகைகள் மிக வேகமாகப் பரவி மக்களை மிகுந்த அச்சத்துக்குள்ளாகுகின்றன. எத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் ஒவ்வொரு வருடமும் இந்த நோய்கள் நம்மை தாக்குவதும், நாம் அவற்றுக்கு எதிராகப் போராடுவதும் தொடர்கதையாகவே உள்ளது. டெங்கு குறித்து பல விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தினாலும், அந்த நோயை முழுதாக இன்னும் போக்க முடியவில்லை. முக்கியமாக டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் நம் நாட்டை போன்ற வெப்ப மண்டல நாடுகளில்தான் அதிகமாகப் பரவுகிறது என்பது, அதிர்ச்சியளிக்கும் உண்மை.

ஏன் இந்த நோய் வகைகள் வெப்ப மண்டல நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன, இவற்றிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றி விளக்குகிறார், திருச்சியை சேர்ந்த அவசர சிகிச்சை நிபுணர், மருத்துவர் அ. முகமது ஹக்கீம்.

அவசர சிகிச்சை மருத்துவர் முகமது ஹக்கீம்

“மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவக்கூடிய நோய்கள் வெப்ப மண்டல நாடுகளின் சாபம் என்றே கூட சொல்லலாம். கொசுக்கள் அதிகமாகக் காணப்படுவது இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்தான். கொசுக்கள் இந்த வெப்ப மண்டல நாடுகளின் பகுதிகளைச் சார்ந்தவைதான்.

ஒரு காலத்தில் மலைப் பகுதிகளை ஒட்டியிருந்த கொசு வகைகள் இன்று எங்கும் நிறைந்திருக்கின்றன. இரவானால் நாம் கொசு மட்டைகளை தூக்குவதும், கொசுவத்திகளை ஏற்றுவதுமாக இருக்கிறோம். கொசு பெருக்கத்துக்குக் காரணம், மனிதனால் உருவாக்கப்படும் குப்பைகளும் அவை சார்ந்த அஜாக்கிரதைகளும்தான். டயர், பிளாஸ்டிக் போன்ற நீர் தேங்கக்கூடிய குப்பைகள் உள்ளிட்ட அஜாக்கிரதைதான் கொசு உற்பத்தி செய்யும் இடமாக நம் இருப்பிடங்களை மாற்றுகிறது.

இன்னொரு பக்கம், நீர் வடிய சரியான கால்வாய்களும், வடிகால்களும் இல்லாததும், நீர் வடியும் பாதையை குப்பைகளும், கட்டடங்களும் ஆக்கிரமிப்பதும் கொசுப் பெருக்கத்துக்குத் துணை போகின்றன” என்பவர், கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு நோய்கள் குறித்தும், அதிலிருந்து காக்கும் வழிகள் குறித்தும் கூறினார்.

“மலேரியா, டெங்கு… இந்த இரண்டிற்குமான ஒற்றுமை… கொசுக்களால் பரவுவது.

மலேரியா என்பது Plasmodium falciparum எனப்படும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. இந்தக் கிருமி ரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்கி பாதிப்படையச் செய்துவிடும். காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, ரத்த சோகை, மண்ணீரல் பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். பாதிக்கப்பட்ட நபர் அதிகக் காய்ச்சல், அதனால் ஏற்படும் வலிப்பு என பாதிப்பு தீவிரமாகும்போது உயிரிழக்கக்கூட நேரிடும்.

Patient at Hospital (Representational Image)

டெங்கு, வைரஸ் வகை சார்ந்த கிருமி. இது ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets) தாக்கி, தட்டணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிடும். தட்டணுக்களின் எண்ணிக்கை அதிகம் குறைவதால், ரத்தத்தின் உறையும் தன்மை குறைந்து, ரத்தம் குடலில் கசிந்து, ரத்த அழுத்தம் இயல்பான அளவைவிட பல மடங்கு குறைந்துவிடும். ரத்த அழுத்தம் குறைவதால் உடல் உறுப்புகளுக்கு போதிய ரத்தம் செல்லாமல் செயல் இழக்கும். ரத்தம் கசிவதால் ரத்த சோகையும் உண்டாகும். இந்தப் பிரச்னைகள் தீவிர நிலையில் உயிரிழப்புவரை ஏற்படுத்தலாம்.

மலேரியா, அனோஃபிளஸ் (Anopheles) என்ற கொசு வகையால் பரவுவது. இந்தக் கொசு குப்பை, மற்றும் சாக்கடை தண்ணீரில் முட்டை இட்டுப் பெருகும்.

டெங்கு, ஏடிஸ் (Aedes) என்ற கொசு வகையால் பரவுவது. இது வீட்டைச் சுற்றி உள்ள பொருள்களில் தேங்கி இருக்கும் சுத்தமான நீரில் அதிகளவில் முட்டையிட்டுப் பெருகும்.

மலேரியா, டெங்கு என இரண்டு நோய்களை ஏற்படுத்தும் கொசுக்கள் பரவ, நீர் தேங்குவதே முதன்மைக் காரணமாக இருக்கிறது. இந்த இரு நோய்களிடமிருந்தும் நம்மை பாதுகாக்க பின்வரும் வழிகளைப் பின்பற்றலாம்..

* வசிப்பிடத்துக்கு அருகில் நீர் தேங்காமலும், தேங்கிய நீரை வடியச் செய்யவும் வேண்டும்.

Also Read: Doctor Vikatan: கண்களில் கிளக்கோமா பாதிப்பு; பார்வையிழப்பைத் தவிர்க்க வழி உண்டா?

* வசிப்பிடத்துக்கு அருகில் ப்ளாஸ்டிக், டயர்கள் போல தண்ணீர் தேங்கும் பொருள்களை அப்புறப்படுத்த வேண்டும்.

* நீர் வடிகால்களைத் தூர்வாரி, அங்கெல்லாம் கழிவு நீர்த்தேக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

* கொசுவலைகள், கொசுவத்தி சுருள்கள், கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம்.

* வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முடிந்தவரை வீட்டிலேயே சாப்பிடுவது டெங்கு, மலேரியா சீஸனில் முக்கியம்.

* தண்ணீரை கொதிக்கவைத்துக் குடிக்க வேண்டும்.

* மழைக்காலத்தை தொடர்ந்து காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அசட்டை செய்யாமல் மருத்துவரின் ஆலோசனையை உடனடியாகப் பெற வேண்டும். இந்த கொரோனா அலையில் டெங்கு, மலேரியா அறிகுறிகளைத் தவறவிடாமல் இருக்க வேண்டியது முக்கியம்.”

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.