ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் இன்று குழுமியிருந்த ரசிகர்கள் திருவிழா கொண்டாட்டத்தில் திளைத்தனர். ஒரே காரணம், காட்டாற்று வெள்ளமாக கட்டுப்பாடின்றி அடித்து துவைத்த க்ளென் மேக்ஸ்வெல்லே. பிக் பேஷ் லீக் சீசன் 11-ல் ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஆடிய மேக்ஸ்வெல் 64 பந்துகளில் 154 ரன்களை அடித்திருக்கிறார். பேட்டை தூக்கினாலே பவுண்டரியும் சிக்சருமாக அடித்து வெளுத்த மேக்ஸ்வெல் பல சாதனைகளை உடைத்தெறிந்திருக்கிறார்.

Maxwell

பிக் பேஷ் லீக் சீசன் 11 இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸ் போட்டிகள் விரைவிலேயே தொடங்க இருக்கின்றன. இந்நிலையில் ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை ஏற்கெனவே இழந்துவிட்ட மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி தனது இறுதி லீக் போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸுடன் இன்று மோதியிருந்தது. டெட் ரப்பராக பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில்தான் மேக்ஸ்வெல் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணியின் கேப்டனான மேக்ஸ்வெல் இந்தத் தொடரின் தொடக்கத்திலேயே ஒரு சதம் அடித்திருந்தார். சிட்னி சிக்சர்ஸுக்கு எதிராக அந்த சதம் அடிக்கப்பட்டிருந்தது. அந்த போட்டியில் 57 பந்துகளில் 103 ரன்களை அடித்திருந்தார். ஸ்ட்ரைக் ரேட் 180+. தனியாக பார்த்தால் இதுவே ஒரு வெறித்தனமான இன்னிங்ஸ்தான். ஆனால், மேக்ஸ்வெல் இன்று ஹோபர்ட்டுக்கு எதிராக அடித்திருக்கும் சதத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் அந்த 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் வந்த சதமே கொஞ்சம் சுமாரான இன்னிங்ஸாகத்தான் தோன்றும். அந்தளவுக்கு ஹோபர்ட் பௌலர்களை புழுதியில் விட்டு புரட்டி எடுத்திருக்கிறார்.

ஜோ க்ளார்க்கோடு ஓப்பனிங் இறங்கிய மேக்ஸ்வெல் தொடக்கத்திலிருந்தே அல்ட்ரா ஸ்பீட் மோடில்தான் ஆடியிருந்தார். ஆர்சி ஷார்ட் வீசிய இரண்டாவது ஓவரில் பவுண்டரி மற்றும் சிக்சரோடு தொடங்கிய மேக்ஸ்வெல், சந்தீப் லமிச்சானே வீசிய 3 வது ஓவரில் 4 பவுண்டரிகளோடு 18 ரன்களை சேர்த்திருந்தார். லமிச்சானின் பந்துகளை மேக்ஸ்வெல் குறிவைத்து அடித்துக் கொண்டிருந்தார். பென்ச்சில் இருக்கும் வீரர்களை இறக்கி ஃபீல்டிங் நிறுத்தினாலும் அதிலும் ஒரு கேப்பை கண்டுபிடித்து 360* டிகிரி ஷாட் ஆடிவிடும் ஆக்ரோஷமான மனநிலையிலேயே மேக்ஸ்வெல் இன்று காணப்பட்டார்.

Maxwell | மேக்ஸ்வெல்

பவர்ப்ளேயான முதல் 4 ஓவர்களில் மட்டும் மெல்பர்ன் அணி 63 ரன்களை எடுத்திருந்தது. மேக்ஸ்வெல் மட்டும் 41 ரன்களை எடுத்திருந்தார். இந்த பிக் பேஷ் சீசனில் பவர்ப்ளேயில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக பதிவானது.

பவர்ப்ளேயின் 4 ஓவர்களிலும் 4 வெவ்வேறு பௌலர்களை பயன்படுத்தியிருந்த ஹோபர்ட்டின் கேப்டன் மேத்யூ வேட் பவர்ப்ளேக்கு பிறகும் தொடர்ந்து பௌலர்களை மாற்றிக்கொண்டே இருந்தார். மொத்தமாக 20 ஓவர்களை வீசுவதற்கு 8 பௌலர்களை மேத்யூ வேட் பயன்படுத்தியிருந்தார். ஆனால், எந்த பௌலர்களாலுமே மேக்ஸ்வெல்லை கட்டுப்படுத்த முடியவில்லை. ரிவர்ஸ் ஸ்வீப், ரிவர்ஸ் ஹிட் எனத் தனது வழக்கமான பாணியில் வெளுத்தெடுத்தார். இடம் கொடுத்து வீசினால் எளிதில் ஷாட் ஆடுகிறார் என்பதால் யார்க்கராக வீச முயன்றால் அதையும் துல்லியமாக பிக் செய்து பௌலரின் தலைக்கு மேல் பவுண்டரியாக்கினார். தொடக்கத்தில் அடிபட்டு விட்டு கடைசியில் லமிச்சான் மீண்டும் வந்த போதும் மேக்ஸ்வெல் அவரை விட்டுவைக்கவில்லை. 18 வது ஓவரில் மட்டும் 5 பவுண்டரிகளோடு 22 ரன்களை சேர்த்திருந்தார். லமிச்சானே மொத்தமாக 4 ஓவர்களில் 52 ரன்களை கொடுத்திருந்தார். அதில் மேக்ஸ்வெல் மட்டும் 49 ரன்களை அடித்திருந்தார்.

Maxwell

என மேக்ஸ்வெல்லின் ஆட்டத்தை கமெண்ட்ரி பாக்ஸிலிருந்த கில்கிறிஸ்ட் வர்ணித்திருந்தார். பௌலர்களை யோசிக்கவே விடாமல் தான் ஆடும் ஆட்டத்திற்குத் தாளம் போட வைத்த மேக்ஸ்வெல் 20 பந்துகளில் அரைசதத்தைக் கடந்திருந்தார். 41 பந்துகளில் சதத்தைக் கடந்திருந்தார். இறுதியாக 64 பந்துகளில் 154 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். 22 பவுண்டரிக்களையும் 4 சிக்சர்களையும் அடித்திருந்தார். மெல்பர்ன் அணி 20 ஓவர்களில் 273 ரன்களை எடுத்திருந்தது. அதை சேஸ் செய்த ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியிருக்கிறது.

இந்த இன்னிங்க்ஸ் மூலம் எக்கச்சக்க ரெக்கார்டுகளை மேக்ஸ்வெல் உடைத்திருந்தார். அவர் அடித்த இந்த சதம் பிக் பேஷ் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட இரண்டாவது சதமாக பதிவானது. மேலும், பிக் பேஷ் வரலாற்றில் ஒரு தனிப்பட்ட வீரரின் அதிகபட்ச ஸ்கோரும் இதுவே. இதற்கு முன் ஸ்டாய்னிஸ் 147* ரன்களை அடித்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மேக்ஸ்வெல் இன்று 154* ரன்களை அடித்தபோது எதிர்முனையில் நான் ஸ்ட்ரைக்கராக நின்றது ஸ்டாய்னிஸ்தான் என்பது கூடுதல் சுவாரஸ்யம். அவர் பங்குக்கு அவரும் 31 பந்துகளில் 75 ரன்களைக் குவித்திருக்கிறார்.

இத்தனை ஆண்டுகளில் எந்த ஒரு அணியும் பிக் பேஷில் 250 ரன்களைக் கடந்ததே இல்லை. முதல் முறையாக மேக்ஸ்வெல்லில் அதிரடியால் மெல்பர்ன் அணி அந்தச் சாதனையை செய்திருந்தது. பல சாதனைகளை உடைத்து மேக்ஸ்வெல் சதமடித்த இந்தப் போட்டி பிக் பேஷில் அவரின் 100வது போட்டி என்பது எதேச்சையாக அரங்கேறிய சுவாரஸ்யம்.

Maxwell

தொடரை விட்டு வெளியேறிய பிறகு எந்த அழுத்தமும் இல்லாமல், மெல்பர்ன் ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் ஒரு கொண்டாட்டமான இன்னிங்ஸை மேக்ஸ்வெல் ஆடி அசத்தியிருக்கிறார். ஐ.பி.எல் க்கு இன்னும் சில மாதங்கள் இருந்தாலும் இப்போதே மேக்ஸ்வெல்லின் இந்த இன்னிங்ஸை வைத்து ஆர்சிபி ரசிகர்களும் உற்சாகமடைய தொடங்கிவிட்டனர்.

எல்லாருமே ஹேப்பி மேக்ஸி!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.