இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க முடியாதபடி தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும், அந்த மாநில அலங்கார ஊர்திக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கேரளாவுக்கும் இதேபோல நேர்ந்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் முதல்வர்களால் ஆளப்படும் இந்த மூன்று மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இந்த விஷயம் நடந்திருப்பது, ‘இதன் பின்னால் அரசியல் இருக்கிறது’ என்ற கூக்குரல் எழுவதற்குக் காரணமாக இருந்தது.

குடியரசு தின அலங்கார ஊர்தி அணிவகுப்பு

தமிழகத்தின் பெருமைக்குரிய சுதந்திரப் போராட்ட வீரர்களான பாரதியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வேலு நாச்சியார், தீரன் சின்னமலை போன்றவர்களைத் தாங்கிய இந்த அலங்கார ஊர்தி, சென்னையில் நடைபெறும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் என ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். மேலும், மக்கள் பார்ப்பதற்காக தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அனுப்பப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

இதேபோல நிராகரிக்கப்பட்ட மேற்கு வங்காள அலங்கார ஊர்தியில் நேதாஜி இடம்பெற்றிருந்தார். ஜனவரி 23-ம் தேதி நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இந்த ஊர்தி இடம்பெறும் என மம்தா அறிவித்திருக்கிறார்.

இவை நிராகரிக்கப்படக் காரணம் என்ன? இதன் பின்னால் அரசியல் இருக்கிறதா? அலங்கார ஊர்திகளை யார் தேர்வு செய்கிறார்கள்?

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினக் கொண்டாட்டத்தில் இடம்பெறும் அணிவகுப்பு பிரசித்தமானது. யாரேனும் ஒரு வெளிநாட்டு ஆட்சியாளர் சிறப்பு விருந்தினராக வருவார். அவர் முன்னிலையில் டெல்லி ராஜ்பாத்தில் நிகழும் இந்த அணிவகுப்பில், கண்கவர் அலங்கார ஊர்திகள் பவனி வரும். இதற்கான தேர்வு, முந்தைய ஆண்டு செப்டம்பர் மாதமே துவங்கிவிடும்.

மத்திய பாதுகாப்பு அமைச்சகம்தான் குடியரசு தின அணிவகுப்பைப் பொறுப்பேற்று நடத்துகிறது. அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வதும் இந்த அமைச்சகத்தின் பணிதான். மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவையே அலங்கார ஊர்திகளை அனுப்பிவைக்கும் உரிமையுள்ளவை. அலங்கார ஊர்திகளில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தக் கூடாது, சூழலுக்கு உகந்த இயற்கையான மூலப்பொருட்களையே பயன்படுத்த வேண்டும். புகழ்பெற்ற நிறுவனங்கள், தகுதிவாய்ந்த வடிவமைப்பாளர்களை வைத்தே இதை உருவாக்க வேண்டும் என்று ஏகப்பட்ட நிபந்தனைகள் உண்டு.

குடியரசு தின விழா: தமிழக அலங்கார ஊர்தி

ஒவ்வோர் ஆண்டும் ஏதேனும் ஒரு பொதுவான ‘தீம்’ வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் அலங்கார ஊர்திகளை வடிவமைக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் கேட்டுக்கொள்ளும். இந்த ஆண்டு 75வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, சுதந்திரப் போராட்டம், இந்தியாவின் சாதனைகள், சுதந்திர இந்தியா ஏற்றுக்கொண்ட உறுதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் அலங்கார ஊர்தி மாதிரியை அனுப்புமாறு கேட்டிருந்தனர்.

சினிமா விருது, இலக்கிய விருதுகளுக்குக் குழு இருப்பது போல, இந்த அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்ய ஒரு நிபுணர் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவே ஊர்திகளை மதிப்பீடு செய்யும். கலை, பண்பாடு, ஓவியம், சிற்பம், இசை, நடனம், கட்டட வடிவமைப்பு என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்தக் குழுவில் இருப்பார்கள். அவர்கள் ஆறு ஏழு கட்டங்களாக பரிசீலனை செய்து, அணிவகுப்பில் இடம்பெறும் ஊர்திகளை முடிவு செய்வார்கள்.

2021 செப்டம்பர் 16-ம் தேதி இந்த ஆண்டுக்கான அணிவகுப்பு குறித்து முதல் கடிதம் எல்லா மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. செப்டம்பர் 27-ம் தேதிக்குள் மாநிலங்கள் தங்கள் மாதிரிகளை சமர்ப்பித்தன. கட்டடம் கட்டுவதற்கு அங்கீகாரம் வாங்க சமர்ப்பிக்கும் பில்டிங் பிளான் போல, அலங்கார ஊர்தியின் ஒரு ஸ்கெட்ச்சை முதலில் அனுப்பி வைக்க வேண்டும்.

அக்டோபர் இரண்டாம் வாரத்தில் நிபுணர் குழு இந்த ஸ்கெட்ச்களைப் பார்வையிட்டது. மொத்தம் 56 ஸ்கெட்ச்கள் வந்திருந்தன. அவற்றில் செய்ய வேண்டிய திருத்தங்களைக் குறிப்பிட்டு பல்வேறு மாநிலங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இப்படி முதல்கட்டப் பரிசீலனையில் தேர்வான மாதிரி வடிவத்தை, ஒரு மினியேச்சர் வடிவத்தில் செய்து அடுத்ததாக அனுப்ப வேண்டும். நிபுணர் குழு சொல்லியிருக்கும் திருத்தங்களையும் அதில் செய்திருக்க வேண்டும். அதை திரும்பவும் அந்தக் குழு பார்வையிட்டு முடிவு செய்யும். வெளிநாட்டுத் தலைவர்களையும் கவரும் விதத்தில் அது இருக்குமா, பார்வையாளர்களிடம் வரவேற்பு பெறுமா, கலைநயத்துடன் இருக்கிறதா என்று பல்வேறு அம்சங்களை அந்தக் குழு பரிசீலனை செய்யும். தேவைப்படும் திருத்தங்களையும் சொல்லும்.

குடியரசு தின விழா

அடுத்தடுத்த கூட்டங்களில், அலங்கார ஊர்தி வரும்போது இசைக்கப்படும் இசை, கலைஞர்கள் வெளிப்படுத்தும் நடனம் ஆகியவை பற்றியும் அலசப்படும். இந்த எல்லா அம்சங்களும் திருப்தியாக இருந்தால் மட்டுமே ஓர் ஊர்திக்கு அனுமதி கிடைக்கும். இதனால்தான் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இந்தத் தேர்வு நடக்கிறது.

இந்த ஆண்டு வந்த 56 பரிந்துரைகளில் வெறும் 21 மட்டுமே ஏற்கப்பட்டுள்ளன. இவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அலங்கார ஊர்திகள் 12. மத்திய அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறைகளின் ஊர்திகள் ஒன்பது.

Also Read: அகிலேஷ் யாதவ் குடும்பத்திலிருந்து பா.ஜ.க-வில் இணைந்த அபர்ணா யாதவ்! – யார் இவர்? பின்னணி என்ன?

“எல்லா பரிந்துரைகளையும் ஏற்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒவ்வொரு கட்டப் பரிசீலனையிலும் சில ஊர்திகள் நிராகரிக்கப்படும். அதற்கு முறையான காரணங்கள் இருக்கும். திருத்தங்களைச் செய்து பல கட்டங்களைத் தாண்டி விட்டதாலேயே ஓர் ஊர்தி கண்டிப்பாக அணிவகுப்பில் இடம்பெறும் என்று சொல்லிவிட முடியாது. கடைசிக்கட்டம் வரை தேர்வாகியுள்ள இந்த 21 ஊர்திகளில் கூட, எல்லாமே அணிவகுப்பில் வரும் என்று உறுதி கிடையாது. இறுதியாக அங்கீகரிக்கப்பட்ட மாதிரியைப் போல அது இல்லையென்றால், கடைசி நிமிடத்தில்கூட நிராகரிக்கப்படலாம். இதில் நிபுணர் குழுவின் முடிவே இறுதியானது. பாதுகாப்பு அமைச்சகமோ, மத்திய அரசோ, பிரதமரோ இதில் தலையிடுவதே இல்லை” என்பது பாதுகாப்பு அமைச்சகம் சொல்லும் விளக்கம்.

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய பதில் கடிதம்

ஆனால், “நிபுணர் குழுவில் இருப்பவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் உண்டு. குழுவை அமைத்தவர்கள் என்ன சொல்கிறார்களோ, அதன்படியே அவர்கள் நடப்பார்கள் என்பது தெரியாதா? மிகச்சிறந்த அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டதும் உண்டு, தகுதியே இல்லாத ஊர்திகள் அணிவகுப்பில் இடம்பிடித்ததும் உண்டு. எதன் அடிப்படையில் நிராகரிக்கிறார்கள் என்பதில் வெளிப்படைத்தன்மை எதுவுமே இல்லை” என்கிறார்கள் இந்த நடைமுறையை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர்.

கேரளாவின் அலங்கார ஊர்தி 2018 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இடம்பெற்றது. மேற்கு வங்காளத்தின் அலங்கார ஊர்தி 2016, 2017, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இடம்பெற்றது. 2016-ல் அவர்களின் அலங்கார ஊர்தி முதல் பரிசு வாங்கியது. தமிழகத்தின் அலங்கார ஊர்தி 2016, 2017, 2019, 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் இடம்பெற்றது.

கடந்த 2020-ம் ஆண்டில் மேற்கு வங்காளம் மற்றும் மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டபோது, ‘அரசியல் பழிவாங்கல் நடப்பதாக’ இப்போது போலவே சர்ச்சை எழுந்தது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.