Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசிகளின் காலாவதி தேதி அண்மையில் நீட்டிக்கப்பட்டதாலும், புதிய காலாவதி தேதியை முந்தைய தடுப்பூசிகளில் அச்சிட பாரத் பயோடெக் முயன்றதாலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

எங்கே தொடங்கியது பிரச்னை?

15-18 வயது வரையிலான சிறார்களுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அப்படி தன்னுடைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தச் சென்ற இடத்தில், காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட கோவாக்சின் போடப்படுவதை அறிந்த ட்விட்டர் பயனாளி ஒருவர், அந்த விவரங்களை அப்படியே ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.

  • அதில், கோவாக்சினின் காலாவதி தேதி நீட்டிக்கப்பட்ட விவரங்கள் இருக்கவே, “அப்படியெனில் பழைய தடுப்பூசிகளைத்தான் சிறார்களுக்கு செலுத்துகின்றன்றனரா?” எனப் பலரும் கேள்வி எழுப்பினர்.

  • மேலும், பெங்களூருவில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், விரைவில் காலாவதியாகவிருக்கும் கோவாக்சின் தடுப்பூசிகளை திரும்ப எடுத்துக்கொண்டு, அவற்றில் புதிய காலாவதி தேதியை அச்சிட்டு மீண்டும் அந்த மருத்துவமனைகளுக்கே வழங்கும் வேலைகளிலும் பாரத் பயோடெக் நிறுவனம் இறங்கியிருக்கிறது.

இந்த இரண்டு சம்பவங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, உடனே விவகாரம் பெரிதானது. இதைத் தொடர்ந்துதான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கமும் அளித்தது.

ஏன் தடுப்பூசிகளின் காலாவதி தேதிகள் மாற்றப்படுகின்றன?

  • இந்தியாவின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டிற்குமே, காலாவதி தேதியை மாற்ற மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது.

  • கோவிஷீல்டின் கால அளவை 6 மாதங்களிலிருந்து 9 மாதங்களாக உயர்த்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமும், கோவாக்சினின் கால அளவை 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்த கடந்த நவம்பர் மாதமும் CDSCO அனுமதியளித்திருக்கிறது.

  • ஏன் இப்படி காலாவதி தேதிகள் மாற்றப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள `Stability data’ பற்றி சுருக்கமாக தெரிந்துகொள்ளவேண்டும். ஒரு தடுப்பூசியின் காலாவதி தேதியானது இந்த Stability Data-வை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது. இது என்ன?

  • தடுப்பூசிகளின் கால அளவைத் தீர்மானிப்பதில் முக்கியமான காரணி, அதன் செயலாற்றும் தன்மைதான். ஒரு தடுப்பூசியின் நோக்கம், குறிப்பிட்ட வைரஸூக்கு எதிராக தேவையான அளவு ஆன்டிபாடிகளை உருவாக்குவதே.

  • இது எவ்வளவு நாள்கள் வரை, சிறப்பாக செயலாற்றும் என்பதை உறுதிசெய்ய, தடுப்பூசிகள் பல்வேறு வெப்பநிலைகளில், பல்வேறு கால அளவில் பரிசோதிக்கப்படும். இதில் எப்போதிருந்து, அதன் செயலாற்றும் திறன் குறைக்கிறதோ, அதுவரைதான் அதற்கான காலாவதி தேதியும் நிர்ணயிக்கப்படும்.

  • இந்த Stability ஆராய்ச்சிகள் தடுப்பூசிகளுக்கு தொடர்ந்து நடத்தப்படும். இதில், முன்பு கிடைத்ததைவிடவும், புதிய தகவல்கள் கிடைக்கும்போது, அந்த Stability Data-வை CDSCO-விடம் விண்ணப்பித்து, அதன் ஒப்புதல் பெற்று, பின்னர் காலாவதி தேதியை நீட்டித்துக்கொள்ளலாம்.

  • அப்படி Stability Data-வைக் கொடுத்து நீட்டித்துக்கொண்டவைதான், மேற்கண்ட இரண்டு தடுப்பூசிகளும்.

வெளிநாடுகளில் என்ன நடக்கிறது?

இப்படி தடுப்பூசிகளின் காலாவதி தேதியை உரிய ஆய்வுகளுக்குப் பிறகு நீட்டித்துக்கொள்ள அனுமதிக்கும் முறை வெளிநாடுகளிலும் இருக்கிறது.

  • உதாரணமாக, பைஸர் தடுப்பூசியின் கால அளவை, 5 நாள்களிலிருந்து 1 மாதமாக மாற்றிக்கொள்ள, கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் FDA அனுமதித்திருந்தது.

  • இதேபோல கடந்த ஜூலை மாதம், ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் கால அளவை 4.5 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக நீட்டித்துக்கொள்ளவும் அனுமதித்திருந்தது.

  • பிரிட்டனும் மாடர்னா நிறுவனத்தின் ஸ்பைக்வேக்சின் கால அளவை 7-லிருந்து 9 மாதங்களாக உயர்த்த அண்மையில் அனுமதித்துள்ளது.

எனவே, இது உலகெங்கும் உள்ள நடைமுறைதான். ஆனால், அங்கெல்லாம் வராத குழப்பம் இந்தியாவில் மட்டும் வரக் காரணம், CDSCO-யின் செயல்பாடுகள்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

  • ஆரம்பத்திலேயே CDSCO அதிகாரிகள் இதற்கான காரணங்களை மக்களிடம் விளக்கிச் சொல்லியிருந்தால், சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இந்நேரத்தில் தேவையற்ற அச்சம், குழப்பமெல்லாம் வந்திருக்காது. ஆனால், பாரத் பயோடெக் மட்டுமே அதுகுறித்து சொல்லிக்கொண்டிருந்ததும், காலாவதியாகப் போகும் தடுப்பூசிகளுக்கு ரீ-லேபிள் செய்யும் பணிகளைச் செய்ததும்தான் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை உண்டாக்கிவிட்டது என்பது அவர்களின் கருத்து.

அதில் உண்மை இல்லாமலும் இல்லை!

Note: The Subject Line நியூஸ்லெட்டரின் Explainer கட்டுரை இது. இதேபோல தினசரி நிகழ்வுகளை எளிமையாக, விரிவாகப் புரிந்துகொள்ள கீழே உங்கள் மெயில் ஐடி-யைக் கொடுத்து சப்ஸ்கிரைப் செய்யுங்கள். தினமும் காலை 7 மணிக்கு அன்றைய முக்கியமான அப்டேட்கள் உங்கள் இன்பாக்ஸுக்கே வந்துசேரும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.