‘யார்டா நீ… உன்ன எங்க இருந்துடா புடிச்சாங்க, நீ Ball போட்டாலே விக்கெட் விழுதுடா’ ஷர்துல் தாக்கூர் குறித்து ஸ்டம்ப் மைக்கில் பதிவான அஷ்வினின் குரல் இது.

அஷ்வின் மட்டுமில்லை ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுமே ஷர்துல் தாக்கூரை ‘யாரு சாமி நீ!’ என வியப்போடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஷர்துல் தாக்கூர் ஜோஹனஸ்பர்க்கில் செய்திருக்கும் சம்பவம் அப்படியானது. ஒற்றை ஆளாக ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க அணியையும் உடைத்து போட்டிருக்கிறார். மற்ற பௌலர்களால் வீழ்த்த முடியாத பேட்ஸ்ம்மேன்களை அலட்சியமாக போகிற போக்கில் வீழ்த்திவிடுகிறார்.

மொத்தம் 7 விக்கெட்டுகள். பேட்டிங் சொதப்பலுக்குப் பிறகும், ஆட்டம் இந்தியாவின் கையிலிருந்து நழுவாமல் இருப்பதற்கு ஷர்துல் வீழ்த்திய இந்த 7 விக்கெட்டுகள்தான் மிக முக்கிய காரணம்.

டீன் எல்கர் & பீட்டர்சன்

ஷர்துல் தாக்கூரின் இந்த 7 விக்கெட்டுகளில் அவர் பார்ட்னர்ஷிப்களை உடைத்த விதம் அதுதான் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும். டீன் எல்கர் மற்றும் பீட்டர்சன் இருவரும் 74 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். டீன் எல்கர் நிதானமாக நின்று ஆட, பீட்டர்சன் கொஞ்சம் ரன்கள் சேர்த்துக் கொண்டிருந்தார். 35 ஓவர்களுக்கு மேல் நீடித்த இந்த பார்ட்னர்ஷிப்பை வீழ்த்த ஷர்துல் தாக்கூருக்கு இரண்டே ஓவர்கள் போதுமானதாக இருந்தன. பவுமா மற்றும் வெரேனே இருவரும் 60 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். பவுமா இந்தியாவின் அட்டாக்கிற்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதனால் தென்னாப்பிரிக்கா வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தது. இதற்கும் ஷர்துல் தாக்கூரே முட்டுக்கட்டை போட்டிருந்தார். இருவரின் விக்கெட்டையும் குறுகிய இடைவெளியில் வீழ்த்தி அசத்தியிருந்தார். பும்ரா, ஷமி, சிராஜ், அஷ்வின் என மற்ற அனைத்து பௌலர்களும் திணறிய சமயங்களில் விக்கெட்டே கிடைக்காத சமயங்களில் பந்தை வாங்கி மேஜிக் செய்திருக்கிறார் ஷர்துல் தாக்கூர்.

ஷர்துலின் பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் திறனே அவரின் தனித்துவமாக இருக்கிறது. இந்தப் போட்டி என்றில்லை, அவரது கரியர் முழுவதுமே அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் சொற்பமான ஆட்டங்களிலும் முக்கியமான பார்ட்னர்ஷிப்களை உடைத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

2018லேயே வெஸ்ட் இண்டீஸிற்கு எதிரான தொடரில் அறிமுகமாகியிருந்தாலும், அந்த அறிமுக போட்டியில் காயம் காரணமாக ஒரு சில ஓவர்களே வீசியிருப்பார். முறையாக அவரது முதல் போட்டி என்பது ஆஸ்திரேலியாவிற்கு எதிராக காபாவில் ஆடிய போட்டியே! முக்கியமான பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில் இந்தியாவிற்கு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்ததில் ஷர்துல் தாக்கூரின் பங்கு மிக முக்கியமானது.

அந்த போட்டியில் மட்டும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் டிம் பெய்ன் மற்றும் க்ரீனின் 98 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை உடைத்திருந்தார்.

Shardul Thakur

இந்த ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு, இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலேயே ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அங்கே முதல் போட்டியில் இங்கிலாந்தின் முதுகெலும்பாக திகழும் ஜோ ரூட்டை 64 (108) ரன்களில் வீழ்த்தியிருந்தார். இதன்பிறகு, நான்காவது போட்டியிலேயே ஷர்துல் தாக்கூருக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. அந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நிலைத்து நின்று ஆடி 159 பந்துகளில் 81 ரன்களை எடுத்திருந்த ஆலி போப்பின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தின் ஓப்பனிங் கூட்டணியான ரோரி பர்ன்ஸ் ஹசீப் ஹமீது கூட்டணி அரிதாக 100 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தது. இதையும் ஷர்துல் தாக்கூரே உடைத்திருந்தார். போனஸாக செட்டில் ஆகியிருந்த ஜோ ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்தத் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டீகாக்கும் பவுமாவும் 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர். அந்தக் கூட்டணிக்கு எதிராகவும் தன்னுடைய பணியை செவ்வென செய்து முடித்திருந்தார். இப்போது இரண்டாவது போட்டியில் எல்லாவற்றுக்கும் உச்சமாக பார்ட்னர்ஷிப்களை உடைத்து தனது முதல் 5 விக்கெட் ஹாலை எடுத்ததோடு முழுமையாக தென்னாப்பிரிக்க அணியையும் நிலைகுலைய வைத்திருக்கிறார்.

அந்த அறிமுக வெஸ்ட் இண்டீஸ் போட்டியை கழித்துவிட்டு பார்த்தால் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஷர்துல் தாக்கூர் முழுமையாக ஆடியிருக்கிறார். ஐந்தாவது போட்டியில் ஆடிக்கொண்டிருக்கிறார். இதுவரை 9 இன்னிங்ஸ்களில் பந்துவீசியிருக்கிறார். இந்த 9 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு இன்னிங்ஸில் மட்டுமே விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. மீதமுள்ள 8 இன்னிங்ஸ்களிலும் விக்கெட் எடுத்திருக்கிறார். அதுவும் பெரும்பாலும் பெரிய ஸ்கோர் அடித்திருக்கும் முக்கிய பேட்ஸ்மேன்கள் அல்லது நீண்ட நேரம் நிலைத்திருக்கும் முக்கிய பார்ட்னர்ஷிப்களையே வீழ்த்தியிருக்கிறார்.

Shardul Thakur

பார்ட்னர்ஷிப்களை உடைக்கும் பண்பு ‘Lord’ ஷர்துல் தாக்கூருக்கு இயல்பிலேயே வாய்க்கப்பெற்றிருக்கிறது. அது டெஸ்ட் போட்டிகள் என்றில்லை. எந்த ஃபார்மட் ஆனாலும் மற்ற பௌலர்கள் திணறிய சமயத்தில் ஒற்றை ஆளாக விக்கெட் எடுத்து சாதித்திருக்கிறார். மற்ற பௌலர்களை விட கொஞ்சம் அதிகமாக ரிஸ்க் எடுத்தும் லைன் & லெந்த்தில் தேவையான வேரியேஷனை வெளிப்படுத்தும் விதமே அவருக்கு விக்கெட்டுகளை பெற்றுக் கொடுக்கிறது.

7 விக்கெட் எடுத்த இந்த இன்னிங்ஸில் 17.5 ஓவர்களில் 61 ரன்களை கொடுத்திருந்தார். எக்கானமி ரேட் 3.4. பும்ரா, ஷமி, சிராஜ் என சக வேகப்பந்து வீச்சாளர்களை விட அதிகமான எக்கானமி ரேட் இது. இந்த ஒரு போட்டியில்லை. அவர் ஆடியிருக்கும் அத்தனை இன்னிங்ஸ்களிலுமே ரன்களை கொஞ்சம் வஞ்சகம் இன்றி வாரியே வழங்கியிருப்பார். காரணம், அவர் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என டிஃபன்ஸிவ்வாக யோசிப்பதே இல்லை. அணிக்குத் தேவையான விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்றே எப்போதும் நினைப்பார். இதனால், கூடுதலாக ரிஸ்க் எடுத்து பேட்ஸ்மேனுக்கு ஷாட் ஆடும் ஆசையைத் தூண்டும் வகையிலேயே பந்துவீசுவார். கூடுதலாக லைன் & லெந்த்தில் லிமிடெட் ஓவர் தன்மையோடு குறுகிய கால இடைவெளியில் வேரியேஷன்களையும் உட்புகுத்துவார். அது விக்கெட்டுகளை அறுவடை செய்து கொடுக்கும்.

இந்திய பௌலிங் லைன் அப்பில் கடைசி ஆப்ஷனாக ஷர்துல் இருப்பதும் அவருக்கு ஒரு கூடுதல் சௌகரியமாக இருக்கிறது. பும்ரா, ஷமி, சிராஜ், ஷர்துல் இந்த லைன் அப்பில் நான்காவது இடம்தான் அவருக்கு. நியூபால் அவரது கைக்கு வரப்போவதே இல்லை. எதிரணியின் பேட்ஸ்மேன்களும் டைட்டாக வீசும் மெயின் பௌலர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்க மனம் வராமல் கடைசி ஆப்ஷனாக இருக்கும் ஷர்துலுக்கு எதிராக ரிஸ்க் எடுக்க துணிகின்றனர். இதை தனக்கு சாதகமாக ஷர்துல் தாக்கூர் பயன்படுத்திக் கொள்கிறார். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த இன்னிங்ஸில் கூட மற்ற பௌலர்கள் வீசிய முதல் 27 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே சென்றிருக்கும். பேட்ஸ்மேன்கள் செட்டில் ஆகிவிட்டு ரன்களுக்காக ரிஸ்க் எடுக்க துணியும் சமயத்தில்தான் ஷர்துல் தாக்கூரும் அறிமுகமாகிறார். அவரும் ரிஸ்க் எடுத்து பேட்ஸ்மேன்களுக்கு ஆசையை தூண்டும் விதத்தில் பந்துவீசி விக்கெட்டுகளை அறுவடை செய்கிறார். பந்தை லேட் ஸ்விங் செய்யும் திறனும் அவருக்குக் கூடுதல் அனுகூலங்களை பெற்றுக் கொடுக்கிறது.

Shardul Thakur

இந்த டெக்னிக் சமாச்சாரங்களையெல்லாம் தாண்டி ஷர்துலின் மனத்திடமும் தன்முனைப்பும் ரொம்பவே முக்கியமானதாக இருக்கிறது.

ஷர்துல் தாக்கூர் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளரான பாலாஜி இப்படிப் பகிர்ந்திருக்கிறார். இந்தத் தன்னம்பிக்கையையும் அணிக்காக அசாத்தியங்களை செய்ய துடிக்கும் தன் முனைப்புமே கூட ஷர்துல் தாக்கூரின் மேஜிக்குகளுக்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. ‘Lord’ ஷர்துலின் வேட்டை தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.