குடும்பத்துடன் வசிக்கும் ஊரிலேயே பணிபுரிவது என்பது பெரும்பாலானோரின் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. அதற்கான காரணம் நிறைய இருந்தாலும் வீட்டு சாப்பாடு என்பது மிக முக்கியக் காரணம். ஆனால் வெளியூருக்கு சென்று பணிபுரிபவர்களுக்கு இதே உணவுதான் பிரச்சனையாக இருக்கும், பெரும்பாலான நேரங்கள் உணவகங்களில் சாப்பிட வேண்டிய சூழலில் தங்களுடைய வீட்டின் சுவையில் உணவு கிடைத்தால் நன்றாக இருக்குமே என எண்ணுபவர்களின் முதல் சாய்ஸாக திருச்சியில் கை காட்டப்படுகிறது இந்தக் கடை. திருச்சி மாநகரின் மைய பகுதியான தில்லை நகர் 10 வது குறுக்கு சாலையில் உள்ள ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால் என்னும் வீட்டுமுறை உணவகம். மரத்துடன் கூடிய வீட்டின் முன்பகுதியில் சில நாற்காலிகளும், மேஜைகளும் மக்களாலும், பண்டங்களாலும் நிரம்பியிருந்தன. . நிற்பதற்குக்கூட இடம் சிறிது தேடியே நிற்க வேண்டியிருந்தது. ஒருபக்கம் ஐடி கார்டுகள் அணிந்த பெண்களும், மற்றொரு பக்கம் ஆண்களும் என பலருக்குமாக பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது உணவகம். மதிய நேரத்தில் ஐந்து வகையான வெரைட்டி சாதத்துடன், தினம் தினம் இரண்டு வகையான வெரைட்டி சாதம் மாற்றி சமைத்து கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால்

இதில் கறிவேப்பிலை சாதம் , காளான் பிரியாணி, தூதுவளை சாதம், மிளகு சாதம். மல்லி சாதம், பிரண்டை சாதம், வாழைப்பூ சாதம், புதினா, கேரட் சாதங்கள் போன்றவை அடங்கும். கூடவே துவையல், ஊறுகாய், வெங்காய பச்சடியும் கொடுக்கபடுகிறது. இரண்டு வகையான பொரியல் மற்றும் கீரை வகையும் சுண்டல் வகையும் தினம் ஒன்றென விற்கப்படுகிறது. வேண்டுபவர்கள் இவற்றை மட்டும் தனியாக ஆறு ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம் என்பதால் உணவு வீணாவதில்லை என்கிறார் கடையின் உரிமையாளர் சூரிய நாராயணன்.

ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால்

“என் அப்பாவும், அம்மாவும் சேர்ந்து ஆரம்பிச்ச ஹோட்டல் இப்போ நான் எடுத்து நடத்திட்டு இருக்கேன், 12 வருசமாச்சு ஆரம்பிச்சு, முக்கிய நோக்கமே வீட்ல இருந்து வெளில வேலை செய்றவங்க வயித்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம நிம்மதியா சாப்பிடணுங்கிறதுதான். அம்மா, மனைவிகூட சில பெண்களை மட்டுமே வச்சி சமையல் செய்றோம். எங்க வீட்டுக்கு முன்பகுதியிலயே கடையை வச்சிருக்கிறதுனால வீட்டுச் சாப்பாடு சாப்பிடற மாதிரிதான் இருக்கும் வந்து சாப்பிடுறவங்களுக்கு. எங்களுக்கும் அதான் வேணும், அந்த மனத்திருப்தி வேற எதுலயும் கிடைக்காது அதான் பெருசாகூட வேற கடை வைக்கணும் தோணுறது இல்ல என்கிறார்”
மதியம் மற்றும் இரவு என இரண்டு வேளைகளில் மட்டுமே இவர்களின் உணவகம் இயங்குகிறது ஆனால் இதற்கான வேலைகளை காலை ஏழு மணி முதலே தொடங்கி விடுகிறது. சூரிய நாராயணனுடன் இணைந்து மொத்த குடும்பத்தினரும் பம்பரமாய் சுழன்று வேலை பார்க்கின்றனர்.

மதிய நேரத்தில் வெரைட்டி சாதங்கள் ஸ்பெஷல் என்றால் இரவு நேரத்தில் வெரைட்டி வெரைட்டியாக கொடுக்கும் தோசை ரொம்பவே ஸ்பெஷல், எப்போதும் கிடைக்கும் இட்லி, தோசை, சப்பாத்தியுடன், ரவா பொங்கல், ணெய் பொங்கல், கிச்சடி, கல் சப்பாத்தி, அடை அவியல், முள் முருங்கை தோசை, கறிவேப்பிலை தோசை, தக்காளி தோசை, முடக்கத்தான் தோசை என தினம் தினம் இரண்டு வெரைட்டிகள் மாறி கொண்டே இருக்கிறது. எதற்கும் ரெடிமேட் பொடி எதுவும் பயன்படுத்துவதில்லை, அதற்கதற்கு என இலைகள் பிரெஷாக வாங்கி பயன்படுத்துகிறார்கள். “ரெகுலரா வர கஸ்டமர் ஒரே மாதிரியான சாப்பாடு சாப்பிட்டாங்கன்னா, அது ஒரு கட்டத்துல அவங்களுக்கு புதுசா தேவைப்படுதுனு தோணும்ல அதை மனசுல வச்சி தான் இப்படி வெரைட்டிஸ் செய்றோம்” என்கிறார் சூரிய நாராயணன்.

ஸ்ரீ வாசவி கரம் ஸ்டால்

மதிய நேரத்தில் நாம் சென்று அவர்களின் உணவு வகைகளை சாப்பிட்டோம். வீட்டுச் சாப்பாட்டின் சுவை இருந்தது. நாம் ஒரு வெரைட்டி சாதத்திற்கான பில்லை செலுத்தி இரண்டு சாதத்தை பாதியாக பெற்று நாம் சுவைத்து பார்க்கலாம். தொடர்ந்து டிபன் வகைகளை சாப்பிட்டு பார்க்க இரவிலும் செல்ல இரவு ஏழு மணிக்கு மேலாகவே கூட்டம் ஆரம்பித்துவிடுகிறது. நாம் நின்று சாப்பிட ஆரம்பிக்க இரண்டு பெண்மணிகள் அடுப்பில் தோசை வார்த்து கொண்டிருந்தனர். முள்முருங்கை தோசையை ஆர்டர் செய்துவிட்டு காத்திருக்க சுட சுட தோசை தோசை வந்தது. அரிசியுடன் சேர்த்து இலையவும் சேர்த்து அரைத்திருக்க அதனின் சுவை, அற்புதமாக இருந்தது. சூடாக இருந்த சாம்பாரும், சட்னியும் மேலும் சுவையை கூட்டியது. சாப்பிட்டதற்கான பில்லை கொடுத்த நாம், ஆரோக்கியமான, சுவையான உணவை சாப்பிட்ட திருப்தியில் வெளியே வந்தோம். திருச்சியில் வரும் மக்களே வீட்டு முறையில் உணவு வேண்டும் நினைக்கிறீர்களா மறக்காமல் ஸ்ரீ வாசவி கரம் ஸ்டாலை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.