பரபரப்பாக இருக்கும் அந்த சாலையில் மக்கள் கூடி நின்று அதிர்ச்சியுடன் வேடிக்கை பார்க்கின்றனர். குடிபோதையில் வெறிபிடித்த மிருகமாய் மாறிப் போயிருந்த அந்த இளைஞர், கையில் பெரிய கல் ஒன்றை தூக்கி சாலையோரம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தெருநாய் ஒன்றின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்கிறான். இப்படியொரு கொடூரத்தை மிருகம் கூட செய்யாது என பொதுமக்கள் அதிர்ச்சியில் பதறிப்போய் நிற்க, ஆட்டோ ஒன்றில் ஏறிய அந்தக் கொடூரன் சாலையில் தரதரவென அந்த நாயை இழுத்துச் செல்கிறான். அந்தக் கொடூரனுடன் மீசை முளைக்காத இன்னும் சில இளைஞர்களும் ஆட்டோவில் செல்கின்றனர். கூடியிருந்த கூட்டத்திலிருந்து ‘இனி நாய் வேட்டை ஆரம்பம்’ என்றொரு இளைஞர் உற்சாகம் பொங்க சிரிப்புடன் கத்துகிறான். திருச்சி பீமநகர் கூனிபஜார் பகுதியில் டிசம்பர் 12-ம் தேதி நடந்த இந்தக் கொடூரச் சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

நாயைக் கொன்ற நபர்

இதுசம்பந்தமாக திருச்சி ப்ளூகிராஸ் அமைப்பின் துணைத்தலைவர் ராகவன், ஆன்லைன் மூலமாக திருச்சி பாலக்கரை காவல் நிலையத்துக்கு புகார் ஒன்றினைக் கொடுத்திருக்கிறார். அவரிடம் பேசினோம். “தெருவில் போகும் மக்களைப் பார்த்து அந்த நாய் குறைக்கிறது, கடிக்கிறது எனச் சொல்லி இளைஞர் சிலர் அந்த நாயை அடித்துக் கொன்று ஆட்டோவில் தரதரவென இழுத்துச் சென்றதோடு, பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்திருக்கின்றனர். அந்த நாயால் ஏதாவது தொந்தரவு இருந்திருந்தால் மாநகராட்சியிடமோ அல்லது எங்கள் ப்ளூ கிராஸ் அமைப்பிடமோ புகார் கொடுத்திருக்கலாம். மாறாக அந்த இளைஞர்கள் செய்திருக்கும் கொடூரமானது மிகவும் தவறானது. ஏரியா ரெளடிகள் என்பதைக் காட்டி மக்களை அச்சுறுத்தவே அந்த இளைஞர்கள் இப்படியான சம்பவத்தைச் செய்திருக்கின்றனர். அதில் ஒருவர் பெயர் வீரமணி எனத் தெரியவந்திருக்கிறது.

அவர்கள் செய்த இந்த கொடூரச் செயலானது ஐ.பி.சி பிரிவுகள் 428, 429-ன் படியும் SPCA சட்டப் பிரிவு 11 படியும் தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி பாலக்கரை ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரிடம் புகார் மனு அளித்திருக்கிறேன். மேலும், இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் மீதும், குற்றத்தில் ஈடுபடுத்தப்பட்ட TN 45 BK 8745 என்ற பதிவு எண் கொண்ட, பின்புறம் NSK என்று பெரிய எழுத்துகளில் எழுதப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியான நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் இப்படியான சம்பவங்கள் நடக்காமல் இருக்கும்” என்றார்.

சம்பவ இடம்

இந்த விவகாரம் சம்பந்தமாக பாலக்கரை ஸ்டேஷன் எஸ்.ஐ ராஜகோபாலிடம் பேசினோம். “நெட் ப்ராப்ளம் என்பதால் இன்று மாலை தான் எங்களுக்கு ஆன்லைனில் கொடுக்கப்பட்ட புகார் வந்து சேர்ந்தது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பவ இடத்தில் தான் இப்போது இருக்கிறோம்” என்றார்.

கடந்த 20 நாள்களுக்கு முன்பு திருச்சி மூலத்தோப்பு பகுதியிலும் இதேபோல தெருநாய் ஒன்றை, கோழிக் கறிக்கடை வாசலில் வந்து நிற்கிறது என அங்கிருந்த இளைஞர்கள் அடித்துக் கொன்றதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: ஆடுகளைக் கடித்ததால் நாயைக் கொன்ற நபர்கள் – போலீஸார் நடவடிக்கை!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.