ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டி அடிலெய்டில் இன்று தொடங்கியிருக்கிறது. பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

இங்கிலாந்து அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சு கூட்டணியான ப்ராட் + ஆண்டர்சன் கூட்டணிக்கும் ஆஸ்திரேலியாவின் டாப் க்ளாஸ் பேட்ஸ்மேன்களான வார்னர் + லபுஷேன் கூட்டணிக்கும் இடையேயான பரபர யுத்தமாக இந்த முதல் நாள் ஆட்ட முடிந்திருக்கிறது. முதல் நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 221-2 என்ற நிலையில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியின் புதிய கேப்டனாக முதல் போட்டியிலேயே முத்திரை பதித்திருந்த பேட் கம்மின்ஸ், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தப் போட்டியில் ஆட முடியாத சூழல் உருவாகியிருந்தது. இதனால், அணியின் துணை கேப்டனான ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாகச் செயல்பட்டார். சர்ச்சைக்குள்ளான Ball tampering பிரச்னைக்குப் பிறகு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் கழித்து ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக களத்திற்கு வந்திருந்தார். டாஸையும் அவரே வென்றார். முதலில் பேட் செய்யப்போவதாக அறிவித்தார். ஆஸ்திரேலிய அணியில் காயமுற்ற ஹேசல்வுட் மற்றும் பேட் கம்மின்ஸுக்கு பதில் ஜை ரிச்சார்ட்சனும் மைக்கேல் நீசரும் அணியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

Steve Smith

இந்த பகலிரவு போட்டிக்காகவே பென்ச்சில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆண்டர்சன் மற்றும் ப்ராட் இருவரையும் இங்கிலாந்து களமிறக்கியிருந்தது. கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கியிருந்த ஜேக் லீச்சும் அவரோடு மார்க் வுட்டும் பென்ச்சில் வைக்கப்பட்டிருந்தனர். மெயின் ஸ்பின்னரே இல்லாமல் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே கொண்ட ப்ளேயிங் லெவனை இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அறிவித்திருந்தார்.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கியது. டேவிட் வார்னரும் மார்கஸ் ஹாரிஸும் ஓப்பனர்களாக இறங்கியிருந்தனர். இங்கிலாந்தின் மிரட்டல் கூட்டணியான ஆண்டர்சனும் ப்ராடுமே முதல் ஸ்பெல்லை வீசியிருந்தனர். இருவரும் சேர்ந்து முதல் ஸ்பெல்லில் 9 ஓவர்களை வீசியிருந்தனர். இந்த 9 ஓவர்களிலுமே ஆஸ்திரேலியா மொத்தமாக இங்கிலாந்திடம் சரணடைந்திருந்தது. வார்னர், ஹாரிஸ் இருவருமே இடதுகை பேட்ஸ்மேன்கள் என்பதால் ஆண்டர்சன் ஓவர் தி விக்கெட்டில் வந்து பந்தை பிட்ச் செய்து வெளியே எடுத்துக் கொண்டிருந்தார்.

ப்ராட் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களாக உடம்புக்குள் வீசிக்கொண்டிருந்தார். இந்த இரு முனை தாக்குதலில் ஹாரிஸ் சிக்கி சின்னாபின்னமாகியிருந்தார். நிறைய பந்துகளை பேடில் வாங்கியிருந்தார். அதிகமான பவுன்ஸ் காரணமாக lbw ஆகாமல் தப்பித்திருந்தார். ப்ராடும் நிறைய அப்பீல்களை செய்தார். ஒரு முறை அம்பயரும் அவுட் கொடுத்துவிடவே ஹாரிஸ் ரிவியூவ் எடுத்து தப்பித்திருப்பார். அந்த பந்து லெக் ஸ்டம்ப்பை மிஸ் செய்திருக்கும். உடனே ஒரு லெக் ஸ்லிப்பை வைத்து தொடர்ந்து ஆங்கிள் இன் டெலிவரிக்களை வீரியமாக வீசவே அதற்கு பலனும் கிடைத்தது. ப்ராட் ஷார்ட்டாக வீசிய ஒரு பந்தை ஹாரிஸ் ஃபைன் லெக்கில் அடிக்க முயலவே எட்ஜ் ஆகி கீப்பரான பட்லரிடம் கேட்ச் ஆகியிருந்தார்.

தனக்குள் ஒளிந்திருக்கும் ஸ்பைடர் மேனை வெளிக்கொணர நினைத்தாரோ என்னவோ இந்த கேட்ச்சை பயங்கரமாக டைவ் அடித்து பிடித்திருந்தார் பட்லர். மிகச்சிறந்த கேட்ச்!

Stuart Broad

ஹாரிஸ் 28 பந்துகளில் 3 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.

ஆண்டர்சன் + ப்ராட் கூட்டணி தாக்கம் ஏற்படுத்த தொடங்கிய இந்த சமயத்தில்தான் வார்னர் + லபுஷேன் கூட்டணி இணைந்தது. இருவருமே மிகுந்த பொறுமையுடனேயே ஆடினர். லிமிடெட் ஓவர் போட்டிகளை போன்று தொடக்கத்திலேயே வேகமாக ரன்கள் சேர்க்க வேண்டும் என விரும்பும் வார்னரே அவர் சந்தித்த 20வது பந்தில்தான் முதல் ரன்னை எடுத்திருந்தார். முதல் 9 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 11-1 என்ற நிலையில் இருந்தது. ஆஸ்திரேலியாவை அதீத தற்காப்பு நிலைக்குத் தள்ளியது ப்ராட் மற்றும் ஆண்டர்சன் கூட்டணியின் வெற்றியாக பார்க்கப்பட்டது.

ப்ராட் மற்றும் ஆண்டர்சன் இருவருமே நல்ல குட்லெந்தில் தங்களுக்கென ஒரு லைனை பிடித்துக் கொண்டு டைட்டாக வீசியதால், கொஞ்சம் சான்ஸ் எடுத்து பார்க்கும் வகையில் ராபின்சனும் வோக்ஸும் கொஞ்சம் ஃபுல் லெந்த்தில் வீசி ஷாட் ஆட வைக்க வலை விரித்தனர். ஆனால் வார்னர், லபுஷேன் இருவருமே தங்களின் நிதானத்தையும் பொறுமையையும் இழக்கவே இல்லை. தேவையில்லாமல் எங்கேயும் பேட்டை விடவில்லை. லபுஷேன் பயங்கர க்ளோஸாக வந்த பந்துகளை கூட லாகவமாக லீவ் செய்து ஆச்சர்யப்படுத்தி இருந்தார்.

ஒவ்வொரு லீவிற்கு பிறகும் ஒவ்வொரு டிஃபன்ஸிற்கு பிறகும் ‘Well Played’ எனத் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார்.

முதல் செஷன் முழுவதுமே ரன் எடுப்பதை பற்றியெல்லாம் யோசிக்காமல் முழுக்க முழுக்க டிஃபன்ஸிவ்வாகவே ஆடி முடித்தனர். முதல் செஷன் முடிவில் ஆஸ்திரேலிய அணி 45-1 என்ற நிலையில் இருந்தது.

இரண்டாவது செஷன் தொடங்கியது. இங்கிருந்துதான் ஆட்டம் ஆஸ்திரேலியா பக்கமாக திரும்ப ஆரம்பித்தது. முதல் செஷனிலேயே பந்து பெரிதாக திரும்பியிருக்கவில்லை. தங்களின் இயல்பான ஆங்கிளை பயன்படுத்தியே ஆண்டர்சனும் ப்ராடும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். இரண்டாவது செஷனில் சொல்லவே தேவையில்லை பந்து பெரிதாக மூவே ஆகவில்லை. ஆண்டர்சன் நான்காவது ஸ்டம்ப் லைனை பிடித்து தொடர்ச்சியாக லபுஷேனுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார். பேட்ஸ்மேனை ஒருமனதாக சிந்திக்க விடாமல் நிலை குலையவைத்து விக்கெட்டை பெற்றுக் கொடுக்கும் வல்லமை இந்த லைனுக்கு அதிகம் உண்டு. லபுஷேன் இந்த பந்துகளுக்கு அரைகுறை மனதோடு பேட்டை விடாமல் முழுமனதோடு சிறப்பாக டிஃபன்ஸ் ஆடினார்.

வார்னர் – லபுஷேன்

வார்னர் + லபுஷேன் இருவரின் தற்காப்பு அரணையும் உடைக்க முடியாதததால் ஒரு கட்டத்திற்கு பிறகு இங்கிலாந்தின் பௌலர்கள் ரொம்பவே Predictable ஆக வீசத் தொடங்கினர். அதிகபட்சமாக ஓவர்/ரவுண்ட் தி விக்கெட் என ரன் அப்பைதான் மாற்றினார்களே தவிர விக்கெட்டுக்கென்று மாற்று முயற்சிகளில் இறங்கவே இல்லை. இந்தக் கட்டத்திற்கு இங்கிலாந்து பௌலர்கள் வந்த பிறகே வார்னர், லபுஷேன் இருவரும் கொஞ்சம் ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். குறிப்பாக, வார்னர் மெது மெதுவாக தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பினார்.

ப்ராட் வீச இன்றைய நாளில் வார்னர் சந்தித்த முதல் பந்தையே தொடையில் வாங்கியிருப்பார். ப்ராட் பயங்கரமாக அப்பீல் செய்திருப்பார். பவுன்ஸ் காரணமாகவே அந்த lbw விலிருந்து வார்னர் தப்பித்தார். செட்டில் ஆனதற்கு பிறகு அதே ப்ராடுக்கு எதிராக டவுண் தி கிரவுண்டாக இறங்கி வந்து ஷாட்டை ஆடி அசரடித்தார். இன்று ஃபுல் லெந்த் பந்துகளில் 4க்கு அதிகமாகவும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் 3க்கு நெருக்கமாகவும் ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் இருந்தது. அதேநேரத்தில் குட் லெந்த் பந்துகளில் ஒன்றுக்கும் குறைவாகவே இருந்தது. வார்னர், லபுஷேன் கூட்டணி கொஞ்சம் அட்டாக் செய்ய தொடங்கிய போதும் எல்லா பந்துக்கும் பேட்டை விடாமல் ஏதுவான பந்துகளை மட்டுமே அடித்து ஆடினர்.

ஸ்டோக்ஸ் ஒரு பக்கம் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களாக வீசி தள்ளினார். இன்றைக்கு அவர் வீசிய பந்துகளில் 90% பந்துகள் ஷார்ட் பிட்ச்சாகவே அமைந்திருந்தன. ஷார்ட்டாக வீசுவதை தவிர வேறொன்றையும் ஸ்டோக்ஸ் செய்திருக்கவில்லை. ஆனால், அதுதான் கொஞ்சம் ஒர்க் அவுட்டும் ஆகியிருந்தது. இரண்டாவது செஷனின் தொடக்கத்தில் ஸ்டோக்ஸ் ஷார்ட்டாக வீசிய ஒரு பந்தில் லபுஷேன் எட்ஜ் ஆகியிருப்பார், அந்த கேட்ச்சை பட்லர் ட்ராப் செய்திருப்பார். கொஞ்சம் கடினம்தான் என்றாலும் பட்லர் ஹாரிஸிற்கு பிடித்த கேட்ச்சை விட இது கடினமில்லை. அது கேட்ச் ஆகியிருந்தால் இங்கிலாந்து ஆட்டத்திற்குள் வந்திருக்கும். ட்ராப் ஆனதால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

வார்னர்

ஸ்டோக்ஸின் ஷார்ட் பால்களுக்கு வார்னருக்கு லெக் சைடில் மட்டும் வட்டத்திற்குள் 3, டீப்பில் 3 என கட்டம் கட்டி ரூட் ஃபீல்ட் வைத்திருந்தார். ஆனால், வார்னர் இந்த ஃபீல்டர்களையெல்லாம் தாண்டி லெக் சைடிலேயே பவுண்டரி அடித்து தண்ணி காட்டினார். ஆனால், புல் தடுக்கி பைல்வானாக அதே ஸ்டோக்ஸின் ஓவரில் அதே ஷார்ட் பிட்ச் பந்தில் ஒரு ஷாட்டை ஆடி ஆஃப் சைடில் கவர்ஸில் நின்ற ஒரே ஒரு ஃபீல்டரான ப்ராடிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகியிருந்தார். இந்த விக்கெட்டை யாராலுமே நம்ப முடியவில்லை. 95 ரன்களிலிருந்த வார்னர் பவுண்டரியும் சிக்சருமாக அடித்து ஸ்டோக்ஸின் ஓவரிலேயே சதமடிப்பார் என எண்ணிய போது ஆஃப் சைடில் நின்ற ஒற்றை ஆளை தேடிப்பிடித்து கேட்ச் கொடுத்தது அதிர்ச்சியாக அமைந்தது.

‘I’m Speechless’ என கமெண்ட்ரி பாக்ஸில் ஷேன் வார்னே வாயடைத்து போனார்.

வார்னர் தனது கரியரின் முதல் 159 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு முறை மட்டுமே 90களில் அவுட் ஆகியிருக்கிந்தார். கடைசி இரண்டு இன்னிங்ஸ்களில் இரண்டு முறையும் 90களில் அவுட் ஆகியிருக்கிறார். இந்த ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் 94 ரன்களில் அவுட் ஆகியிருந்தார்.

David Warner | டேவிட் வார்னர்

வார்னர் அவுட் ஆன பிறகு, ஸ்மித்தும் லபுஷேனும் குரு சிஷ்யனாக கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணி இன்று மேலும் விக்கெட்டை விடாமல் ஆட்டத்தை முடித்து வைத்தது. லபுஷேன் கடைசி வரை தனது நிதானமான ஆட்டத்தை கைவிடவே இல்லை. 233 பந்துகளில் 90 ரன்களை எட்டியிருந்தார். அந்தச் சமயத்தில் புதிய பந்தை எடுப்பதற்கு 5 ஓவர்கள் மீதமிருந்தன. இந்த 5 ஓவர்களை பயன்படுத்திக் கொண்டு சதமடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய நாள் முடிவில் 275 பந்துகளில் 95 ரன்களை எடுத்து நாட் அவுட்டாக பெவிலியனுக்கு திரும்பியிருக்கிறார். ஸ்ட்ரைக் எடுத்த முதல் பந்து தொடங்கி முடிவு வரை லபுஷேனின் அணுகுமுறையில் எந்த மாற்றமுமே இல்லை. இடையில் இவருக்கு எளிதான கேட்ச்சையும் பட்லர் ட்ராப் செய்து பார்மி ஆர்மியை கடுப்பேற்றியிருந்தார்.

தன்னை ஒரு கூட்டுக்குள் அடைத்துக் கொண்டு அதீத தற்காப்புடன் லபுஷேன் ஆடிவருகிறார். அவரோடு ஸ்மித்தும் நிற்கிறார். ஆஸ்திரேலியா ஓரளவுக்கு வலுவான நிலையில் இருக்கிறது. முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே இங்கிலாந்து அணி போட்டியை கோட்டைவிட்டிருந்தது. அதேமாதிரி, இங்கு நிகழாமல் இருக்க சீக்கிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியாக வேண்டும்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.